தர்மசக்கரமாய் சுழன்ற தவசீலர்

ஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவியும் சிறந்த கல்வியாளருமான சுவாமி சித்பவானந்தர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் 1898 மார்ச் ௧௧ல் அன்று பிறந்தார். வீட்டில் சின்னு என்று அழைக்கப்பட்டார்.

தந்தை சித்த வைத்தியர் என்பதால் வான சாஸ்திரம், ரசவாதம் போன்ற அரிய கலைகளிலும் வல்லுனரானார்.பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர், கோவை ஸ்டேன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தன்னைவிட சிறிய பிள்ளைகளுக்கு ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுத் தந்தார். சிறுவயது முதலே பல சாதுக்களின் வழி காட்டுதல் கிடைத்தது.

வெளிநாடு சென்று படிக்க, கப்பல் பயணம், பாஸ்போர்ட் ஏற்பாடுகளுக்
காக சென்னை வந்தபோது, சுவாமி விவேகானந்தரின் `சென்னை சொற்பொழிவுகள்’, என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்புத்தகம் இவரது மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டார். விவேகானந்தர் – ராமகிருஷ்ணரின் நூல்களைப் படித்தார். 1920ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதம், அறிவியல், தத்துவம் பயின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றார்.

மன அமைதிக்காக அவ்வப்போது மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றுவந்தார். மடத்
தின் சாதுக்களுடன் 1923ல் கல்கத்தா சென்றார்.

பேலூர் மடத்தில் சுவாமி சிவானந்த மகராஜ் இவருக்கு பிரம்மச்சர்ய தீட்சை அளித்தார். திரயம்பக சைதன்யர் என்று பெயர் சூட்டினார். இவர் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். 1926ல் உதகை ராமகிருஷ்ண மடத்தில் ஸ்வாமி சிவானந்தர் இவருக்கு சுவாமி சித்பவானந்தர் என்று பெயர் சூட்டினார். உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக  1930 முதல் 1940  வரை இருந்த அவர் திருப்பராய்த்துறையில் ஆரம்பப் பள்ளி தொடங்கினார். அங்கு ராமகிருஷ்ண தபோ வனத்தை 1942ல் நிறுவினார்.

குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப்பள்ளி, விவேகானந்த மாணவர் விடுதி என பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். மதுரை அருகே உள்ள திருவேடகத்தில் 1964ல் ராமகிருஷ்ண தபோவனம் தொடங்கப் பட்டது. பெண்களுக்கான சாரதா தேவி சமிதியும் தொடங்கப்பட்டது.

ஆன்மிகப் பணிகள், சொற்பொழிவுகள், கல்வி நிலையங்கள், சமூக சேவையுடன் படைப்பாளியாகவும் மலர்ந்த சுவாமிஜி `தர்ம சக்கரம்’ என்ற மாத இதழை 1951ல் தொடங்கினார். இதிகாசங்கள், வேதாந்த நூல்கள், பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர் கதைகள், நாடகம், தத்துவ விளக்கம், உரைநடை என 130 க்கும் அதிகமான நூல்களைப் படைத்துள்ளார் சுவாமி சித்பவானந்தர்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரின் செய்திகளைத் தமிழகத்தில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர், ‘பராய்த்துறை மேவிய பரமபுருஷர்’’ எனப் போற்றப்படும் சுவாமி சித்பவானந்தர் தனது 87வது வயதில் 1985ல் மகாசமாதி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *