அண்ணாமலை செட்டியார் என அழைக்கப்பட்ட ராஜா சர். திவான் பகதூர் சாத்தப்ப ராமநாத முத்தையா அண்ணாமலை செட்டியார், ஒரு பாரத தொழிலதிபர், வங்கியாளர், கல்வியாளர், பரோபகாரி. அண்ணாமலை செட்டியார் மதுரை மாவட்டத்தின் சிவகங்கை தோட்டத்தில் உள்ள கானாடுகாத்தானில் 30 செப்டம்பர் 1881ல் பிறந்தார். அவரது தந்தை, எஸ்.ஆர்.எம்.எம். முத்தையா செட்டியார் ஒரு குறிப்பிடத்தக்க வங்கியாளர்.
வங்கித் தொழிலில் நீண்ட அனுபவம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவரது குடும்பத்தினருக்கு இந்தியா ஸ்ரீலங்கா பர்மா மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கிகள் சொந்தமாக இருந்தது. பர்மாவில் மட்டுமே இவர்களுக்கு ஒரு லட்சதுக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தது. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நிறுவியவர் அண்ணாமலை செட்டியார். இந்தியன் வங்கியின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆரம்பத்தில் குடும்பத் தொழிலில் சேர்ந்து, தங்கள் வங்கி நடவடிக்கைகளை தென்கிழக்கு ஆசியாவில் விரிவுபடுத்தினார்.
தெய்வபக்தி, அறச்சிந்தனை, தொழில் அர்ப்பணிப்பு ஆகியன மேலோங்கிய குடும்பத்தில் பிறந்ததினால் “கருவில் அமைந்த திருவே” இவரின் பிற்காலத்திய சாதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது. தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலை செட்டியார் ஆற்றிய பங்கு அளப்பரியது. மதுரையில் தமிழ்ச் சங்கம் சென்னையில் தமிழ்ச் சங்கம். தமிழ் வளர்ப்பதற்காக அண்ணாமலை மன்றம் என்ற பெயரில் கட்டிடங்கள் என இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பல தமிழ்ச் சேவை ஆற்றினார்.
1916ம் ஆண்டில், அவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் சட்டமன்றத்திற்கு சென்று 3 ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றினார். 1920ம் ஆண்டில், மாநில கவுன்சில் தேர்தலில் நின்று, தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலில் தனது இடத்தைப் தக்கவைத்து கொண்டார். 1921ல் இந்திய இம்பீரியல் வங்கியின் ஆளுநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை செட்டியார் 1920ல் சிதம்பரத்தில் ஸ்ரீ மீனாட்சி கல்லூரி, 1927ல் ஒரு தமிழ் கல்லூரி, ஓரியண்டல் பயிற்சி கல்லூரி, இசைக் கல்லூரிகளை நிறுவினார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து 1929 ஜனவரி 1 அன்றுஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியது.