“தமிழ் மொழியும்” மோடி அரசும்

2002ம் ஆண்டு, ஜூன், 10ம் தேதி “நான் தே.ஜ., கூட்டணி தலைவர்களின் கூட்டத்தில் இருந்து, இப்போது தான் வருகிறேன். உங்களுக்காக, முக்கியமான செய்தி ஒன்று உள்ளது. நாங்கள் எல்லாம், உங்களை ஜனாதிபதியாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அது தொடர்பான அறிவிப்பை, இன்று இரவே வெளியிட வேண்டும். அதனால், நீங்கள் உடனே, ‘யெஸ்’ அல்லது, ‘நோ’ என, பதில் சொல்ல வேண்டும். தே.ஜ., கூட்டணியில், 24 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் மத்தியில், ஒருமித்த கருத்தை எட்டுவது கடினம். கூட்டணியின் தலைவர் நான் என்பதால், உடனே, இந்த விஷயத்தில், முடிவெடுத்தாக வேண்டும். உங்களின் பதிலை சொல்லுங்கள்” என்று ஒரு குரல் அப்துல் கலாமிடம் கேட்க, “இரண்டு மணி நேரம் அவகாசம் வேண்டும்” என்றார் கலாம், பின் சில மணித்துளிகள் கழித்து “நான் ஜனாதிபதியாக பதவியேற்கத் தயார்” என்று கலாம் கூற அடுத்த15 நிமிடத்தில், கலாம் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட விஷயம், நாடு முழுவதும் பரவியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர், கலாமிடம் நேரடியாகப் பேசியவர் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் !
உலகம் போற்றும் ஓர் ஒப்பற்றத் “தமிழரை” நாட்டின் குடியரசுத் தலைவராக்கி  தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்த்த இயக்கம் பாரதீய ஜனதாக் கட்சி ! 
 
தமிழ் பணியில் தாமரை !
 
பா.ஜ.க வின் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. தருண் விஜய்  நெடுங்காலமாக, பல ஆண்டுகளாக நம் தாய்த் தமிழ் மொழிக்கு அரும் பெரும் சேவை யாற்றி வருகிறார். தருண் விஜய்  அவர்களின் முயற்சியால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர், லூதியானா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக நடத்தப்படுகிறது, மேலும் தன்னுடைய சுய முயற்சியின் காரணமாக திருக்குறளை ஹிந்தி மொழியில் அச்சடித்து விநியோகித்து வருகிறார் “திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மக்களின் வழிகாட்டியாகவும், மக்களிடம் மனிதாபிமானத்தை வலியுறுத்துவதாகவும் திருக்குறள் அமைந்துள்ளது” என்று நம் தமிழ் மொழியின் கொடையான திருக்குறளின் மீது நீங்காத பற்று கொண்டவராக இருக்கிறார் தருண் விஜய் ! மேலும் நம் தமிழுக்குச் சிகரம் வைத்தாற் போல ”திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண்டாட வேண்டும்” என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் !
 
காஷ்மீர் மாநில முதல்வராக முப்தி முகம்மது சையத் இருந்த பொழுது அவரது வீட்டில் அவரை சந்தித்து திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் காஷ்மீர் மாநிலப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்ப்பதற்கான முயற்சிகளையும், திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு மற்றும் திருக்குறளை உருது மொழியில் மொழி பெயர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் தருண் விஜய் ! 
 
கங்கைக் கரையோரம் திருவள்ளுவருக்குச் சிலை ! 
 
“திருவள்ளுவர் திருநாட்கழகம்” அதன் தலைவர் சாமி தியாகராஜன் அவர்களின் முயற்சியால் ஹரித்வாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவரின் கற்சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான சிலை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தயாரிக்கப்பட்டது. திருவள்ளுவர் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், பாஜக எம்.பி. தருண் விஜய்யிடம் வழங்கினார், சென்னையில் நடந்த அந்நிகழ்வில் பேசிய, தருண் விஜய்  “திருக்குறளை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளாமல் போனது துரதிருஷ்டமான விஷயம். இப்போது அதற்காக நிறைய பேர் வருத்தப்படுகின்றனர். கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகிறேன். அதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது” என்றார். 
 
தமிழும் மோடி அரசும் ! 
 
மத்திய சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியைக் கட்டயமாகப் படிக்கவேண்டும். (தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம்)
 
பத்தாம் வகுப்பு சம்ஸ்கிருத பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்த்தது.
 
நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களும் திருவள்ளுவர், திருக்குறள் பற்றி கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்து அதைச் செய்து காட்டியது.  
 
சங்க இலக்கியங்கள் , திருக்குறள் பற்றி NCERT (National Council of Educational Research and Training) புத்தகம் வெளியிட்டது. 
 
ஜல்லிக்கட்டு வீர விளையாடிற்கு தடை விதித்த தி.மு.க – காங்கிரஸ் கட்சிகளுக்கு மத்தியில், ஒரே நாளில் அனைத்து சட்ட சிக்கல்களையும் நீக்கி நம் தமிழக அரசிற்கு உதவி, தமிழ்நாடு சட்ட சபையில் சட்டம் இயற்ற வைத்த அரசு மத்திய மோடியின் அரசு ! 
 
 
பாரதியின் பாசம் !
 
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை அம்மாநில அரசின் சுற்றுலா வரைபடத்தில் சேர்க்க வேண்டு மென்றும் , பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை மத்திய அரசின் பாரம்பரிய சின்னமாக்கும் முயற்சியிலும்  ஈடுபட்டுள்ளார், நம் தருண் விஜய் . இதற்காக, அவர் தனது மனைவி வந்தனாவுடன், பிரதமர் நரேந்தர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசி அலுவலகத்தின் அமைப்பு செயலாளர் சந்திரசேகர், உட்பட மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் பாரதியார் இல்லத்திற்குச் சென்று, அங்கு வசித்து வரும் பாரதியார் சகோதரி லட்சுமி அம்மாளின் மகன் கே.வி.கிருஷ்ணன், அவரது மகன் கே.ரவிகுமார், மருமகள் பவானி ரவி குமார், பேத்திகளான ஜோதி ரவிகுமார் மற்றும் ஜெயந்தி முரளி உட்பட குடும்பத்தார் அனைவரையும் சந்தித்துப் பேசி, அவர்களிடம் அங்கு உள்ள பாரதியார் பயன்படுத்திய பொருட் களைப் பற்றியும், பாரதியார் பற்றியும் கேட்டறிந்துள்ளார்.
 
2014 ஆம் ஆண்டு “ஆனந்த விகடனுக்கு” தருண் விஜய் அளித்த ஒரு பேட்டியில் (11/08/2014)… 
 
“நம்முடைய வரலாற்றில் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த இலக்கியங்களைக் கொடுத்துள்ளனர். இந்திய நாகரிகத்துக்கு தமிழர்களது நாகரிகம் பெரும் பங்களித்துள்ளது. தமிழ் அரசர்கள், ஞானிகள், கவிஞர்கள் போன்றவர்களின் பங்களிப்பினால் திருக்குறள் போன்ற அரிய வகை நூல்களைப் பெற்றுள்ளோம். ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் முதன்முதலாக கொடிபிடித்து மிகவும் கடினமான கடல்களைக் கடந்து, நமது நாகரிகம், கலாசாரம் மற்றும் மொழியையும் பரப்பியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்று வேறு யாரும் சாதிக்கவில்லை”, 
 
“மகாராஷ்டிராவில் சிவாஜி பெயர் மட்டும்தான் இருக்கும். எங்கேயாவது ராஜராஜ சோழன் பெயர் இருக்கிறதா? ஆனால், தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு சிவாஜி என்று பெயர் வைக்க தவறுவது இல்லை. ஏன் ஒரு சிறந்த நடிகர் வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகவே வலம்வந்தார். நமக்குள்ள இடைவெளியை போக்க ஒரு பாலம் அமைக்க திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறேன்” இவ்வாறு தமிழ், தமிழரின் பெருமையைப் பற்றிக் கூறியுள்ளார். 
 
கீழடி !
 
தற்பொழுது கீழடியில் அகழ்வாய்வுப் பணிகளைச் சிறப்பாக செய்து வருகிறது மத்திய அரசு. சிலர் வேண்டுமென்றே இதை மொழிப் பிரச்சனையாக , இனவாதப் பிரச்சனையாக மாற்ற முயல்கின்றனர். கீழடியில் அகழாய்வுப் பணிகள் 2013-14 வாக்கில் தொடங்கி இருதாலும், அது முழுவேகத்தில் ஆரம்பித்ததே ( மார்ச் – 2015 ) மோடி ஆட்சியில் தான். அதுவரை கீழடி அகழ்வாய்வுப் பணிகளுக்கு நிலம் கூட ஒதுக்காமல் , எந்த முயற்சியும் எடுக்காமல், அதைக் கேட்பாரற்றுக் கிடக்கவைத்திருந்தது தமிழக அரசு. (ஆதாரம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=1481626 ) ஆனால் அதே சமயம் அடுத்த மூன்றண்டுகளுக்கும் சேர்த்து நிதி 40 லட்சம் ரூபாய் ஒதுக்கி ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு தமிழர் தொன்மையான பண்பாட்டை உலகறியச் செய்ய முனைந்திருகிறது மத்திய மோடி அரசு ! அகழாய்வுப் பணிகளை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு (மொத்தமாக ஐந்து ஆண்டுகள் ) நீடிப்பு செய்து , முழுமையான ஒரு கள ஆய்வை மேற் கொள்ள இருக்கிறது இந்திய தொல்லியல் துறை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரு.வேதாச்சலம் என்ற தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரி, தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு கொந்தகை, வைகை ஆற்றுப் பகுதிகளை அகழாய்வு செய்யவேண்டும் என்று கூறியதை கண்டு கொள்ளாமல் விட்டது தமிழ் நாடு அரசு. இன்று அதே இடத்தில் சிறப்பாக அகழாய்வுப் பணிகளை மேற்கொள்கிறது மத்திய அரசு.     
    
தமிழ் இலக்கிய அமைப்புகள்
 
தமிழ் மொழியின் இலக்கிய வளங்களை அனைவருக்கும் வாரி வழங்கும் விதமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு பா.ஜ.க வின் மூத்த தலைவர் “இல.கணேசன்” அவர்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை நடத்திவருகிறார், தினந்தோறும் பல நிகழ்வுகளில் விருந்தினராகப் பங்குகொண்டு தமிழ்மொழிக்கு தொண்டாற்றி வருகிறார். நாடு போற்றும் நல்ல இலக்கியவாதியாக அனைத்துத் தரப்பு மக்களும் கவரும் விதமாக தமிழ் மணம் பரப்பி வருகிறார். 
 
நன்மைகள் 
 
கொளச்சலில் துறைமுகம், நெடுஞ்சாலைகள், எனப் பல திட்டங்கள் நம் மத்திய அமைச்சர் “பொன்.இராதாகிருஷ்ணன்” அவர்களால் நம் தமிழ் நாட்டிற்கு வந்துள்ளன. தமிழ் நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதி உரிய நேரத்தில் நமக்கு கிடைக்க மோடி அரசின் துரித நடவடிக்கையே காரணம். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழக மீனவர் மரணம், இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.       
 
தமிழ் மொழி மீது, தமிழர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ் நாட்டிற்காகப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு சீரோடும் சிறப்போடும் செய்து வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் நல்ல தொரு மாற்றம் வரும் என்பதே மக்களின் எண்ணம்.  
                                                                                                                                                                                             
                                                                                                                        – அ.பரிவழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *