தமிழ்த் தாயைக் காத்த தனயன்

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?

இன்றைக்குத் தமிழ், செம்மொழி என்ற தகுதியோடு துலங்குகிறது என்றால் அதற்கு மூலகாரணம் இந்த கும்பகோணம் அகத்தியர்தான். நமது செந்தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகமில்லை.ஆனால் அதற்கான பழந்தமிழ் ஆதாரங்கள் வேண்டுமே! அழிவு நிலையில் இருந்த நமது பழந்தமிழ் இலக்கியங்களை ஊர்ஊராய்த் தேடித்தேடிச் சென்று திரட்டி, அவற்றை ஒப்பு நோக்கி, பிழை நீக்கி,சாகாவரம் பெற்ற நூல்களாய் அச்சிட்டவர் அந்த நவீன அகத்தியர்.

இப்போது புரிந்திருக்குமே அந்த நவீன அகத்தியர் யார் என்பது? ஆம்! நமது தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாதையர் தான் அவர். இதை நான் சொல்லவில்லை. மகாமகோபாத்யாய பட்டம் பெற்ற உ.வே.சா.அவர்களை வாழ்த்தி 1906-இல் வாழ்த்துப்பா இயற்றிய போது மகாகவி பாரதியார் இப்படிப் பாராட்டியிருக்கிறார்.

“கும்பமுனி எனத்தோன்றும் சாமிநாதப்புலவன்” என்று உ.வே.சா.அவர்களைக் குறிப்பிடும் பாரதி, “பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே” என்று அவரை வாழ்த்தியுள்ளார்.

ஓலைச் சுவடிகளிலும், ஏடுகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களையும் தேடிக்கண்டுபிடித்து, புதுப்பித்து, நூலாகப் பதிப்பிப்பதற்கு தம் வாழ்நாளில் ஏறத்தாழ 60 ஆண்டுக் காலத்தை மட்டுமின்றி, தன் சொத்துகளையும் செலவழித்தவர் உ.வே.சா. தீயிலும், ஆற்று வெள்ளத்திலும், அருமை தெரியாமலும் அழிவின் விளிம்புக்குச் சென்ற பழந்தமிழ் இலக்கியங்களை அச்சுவாகனமேற்றி அழகுபார்த்தார் உ.வே.சா.

இவ்வாறாக 90 பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார் உ.வே.சா. அவற்றுள் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும், திருமுருகாற்றுப் படை தொடங்கி மலைபடுகடாம் வரையான பத்துப்பாட்டு நூல்கள் முழுவதும், புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களும் அடங்கும். இதுபோக புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் உரைபோன்ற இலக்கண நூல்களையும், பல்வேறு புராணங்கள், சிறுகாப்பியங்கள் உள்ளிட்ட நூல்களையும் அவர் தேடிக்கண்டு பிடித்து அச்சுநூல்கள் ஆக்கியுள்ளார்.

-பத்மன்