தங்கத்தில் முதலீடு

சில வருடங்களாக நமக்கு அக்ஷய திருதியை அன்று துளி தங்கமாவது வாங்க வேண்டும் என தங்கம் வாங்குவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அன்று வெண்மை நிற பொருட்களை வாங்க வேண்டும்; வெண்மை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதையே சாஸ்திரம் சொல்கிறது. அக்ஷய திருதியை அன்று நல்ல கெட்டி தயிரில் மாங்காய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதத்தை அன்னதானம் செய்தால், அது நமக்கு சிறந்த புண்ணியத்தை தரும். அதுவும் உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு செய்யப்படும் அன்னதானம் கோடி புண்ணியத்தை நமக்கு பெற்றுத்தரும். அது சரி, நாம் அக்ஷய திருதியை அன்று தவறாமல் தங்கம் வாங்கி பழகிவிட்டோம். அதற்கேற்ற முதலீடுகள் எவை?

இதற்கு பதில் அளிக்கிறார் தங்க முதலீட்டு ஆலோசகர் ஆர். கயிலைராஜன்.

“எந்த முதலீட்டில் லாபம் அதிகம் என்று உற்றுநோக்கும்போது கடந்த சில மாதங்களில் சிறப்பான லாபத்தை அள்ளித் தந்தது தங்க முதலீடுதான். ரஷ்ய உக்ரைன் போர், நாடுகளின் ஸ்திரத்தன்மை, முதலீட்டின் பாதுகாப்புக் போன்றவை, சர்வதேச அரசுகள் தங்கத்தை வாங்கிப் போட மேலும் வழிவகை செய்துவிட்டன. பொதுவாகவே பங்கு சந்தை உயர்ந்தால் தங்கத்தின் மார்க்கெட் சரியும் என்ற பலவருடக் களஆய்வு முடிவுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னெப்போதையும் விட கூடுதல் லாபத்தை கடந்த சில மாதங்களாக தங்க முதலீடு தருகிறதோ என்கிற எண்ணத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர். தங்க முதலீட்டில் ஆபத்து குறைவு, பாதுகாப்பு அதிகம் என்பதால், பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் இருப்பினும், தங்கத்தில் முதலீடு செய்வதுதான் இன்றும் பலருக்கும் “முதல் மரியாதை”யாக உள்ளது. கொரோனா காலகட்டத்தில் சில முதலீடுகள் கடுமையான வீழ்ச்சியடைந்தன. ஆனால், தங்கம் மட்டும் விலை ஏறியது. அப்போது பலருக்கும் வீட்டு செலவு, மருத்துவச் செலவிற்காக கை கொடுத்தது கையிருப்பு தங்கம்தான்.

தங்கம் எந்தச் சூழ்நிலையிலும் பணமாக மாற்றத்தக்க சொத்து. ஆதலால் அதனை ‘சேஃப் ஹெவன்’ என்ற அந்தஸ்துக்கு உயர்த்திப் போற்றி வருகின்றனர் மக்கள். தங்க விநியோகம் குறைவு, தேவை கூடுதலால் மட்டும் தங்கத்தின் விலை உயர்வதில்லை, உலக அளவில் தங்கத்தின் விலை டாலரில் மதிப்பிடப்படுவதால் டாலரின் மதிப்பைச் சார்ந்தும் சர்வதேச நிகழ்வுகளை பொறுத்தும் தங்கத்தின் விலை மாறும்.

டிரெண்டி டிசைன், திருமணம், பார்ட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும், அன்றாடம் அணியவும் ஆபரணத்தங்கம் கொஞ்சம் தேவைதான். ஆனால், முதலீட்டிற்காக ஆபரணத் தங்கத்தை வாங்குவதானால்… கொஞ்சம் யோசித்தாக வேண்டும். ஆபரணத் தங்கத்தை விற்கும்போது 10 முதல் 25 சதவீதம் வரை நஷ்டமே மிஞ்சும். முதலீடுக்காக தங்கத்தை வாங்கத் தீர்மானித்தால், அதை 24 கேரட் தங்கக் கட்டி அல்லது நாணயங்களாக வாங்கி வைப்பது நல்லது. காரணம், அதில் நாம் கொடுக்கும் விலை தங்கத்திற்கானதாக மட்டும் இருக்கும்.

தங்க முதலீட்டில் லேட்டஸ்ட் பிரபலம் தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds). இம்முறையில் நாம் வாங்கியிருக்கும் பத்திரத்தின் மதிப்பானது, தங்கம் விலையின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து இருக்கும். அரசு வெளியிடும் இந்தப் பத்திரங்களை ஆஃப்லைன், ஆன்லைன் வழிகளில் வாங்கலாம். ஆஃப்லைன் முறையில், வங்கி, எஸ்.எச்.சி.ஐ.எல் அலுவலகம், நிர்ணயிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் முகவர்களிடமிருந்து படிவங்களை பெற்று முதலீடு செய்யலாம். ஆன்லைனில் வாங்கினால் சிறிது தள்ளுபடியும் கிடைக்கும். ஒரு கிராம் முதல் 5 கிலோ வரை தனி நபர் வாங்கலாம். இதற்கு, ஜி.எஸ்.டி கிடையாது என்பதுடன் முதிர்வுக் காலத்தில் 2.5 சதவிகித வட்டியும் கிடைக்கும். முதிர்வு காலம் 8 ஆண்டுகள். பணம் தேவைப்படும்பட்சத்தில் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும்.

தங்கப் பத்திரம் என்பது கையில் இருக்கும் தங்கத்தை விட பாதுகாப்பானது. மின்னணு வடிவத்தில் இருப்பதால் அது முற்றிலும் தூய்மையானது. தங்கப் பத்திர முதலீடு மேற்கொள்வோர் ஒவ்வொரு மாதமும் முதல் வார சில நாட்களுக்குள் மேற்கொள்வது உகந்தது. ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட இலக்கு முடிந்ததும் வெளியீடு முடிந்து விடும். இந்த தங்க கடன் பத்திர முதலீட்டில், முதிர்வின் போது தங்கமாக கிடைக்காது. முந்தைய வாரத்தின் மூன்று நாட்கள் சராசரி தங்க விலை (24 காரட்) அடிப்படையில் பணமாக தருவார்கள். அதனை கொண்டு தேவைப்படுபவர்கள் தங்கம் வாங்கிக் கொள்ளலாம்” என்கிறார்

ஆர். கிருஷ்ணமூர்த்தி