திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் சுந்தரம்-இலட்சுமி அம்மாளுக்கு மகளாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று பிறந்தார்.
- இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர், விடுதலைப் போராட்ட வீராங்கனை,சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.
- திருக்குறுங்குடியில் உள்ள பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். முத்தையா பாகவதரிடம் வீணை இசை கற்றார்.
- பன்னிரண்டாம் வயதிலேயே திருமணம் நடந்து, சில வருடங்களில் பிளேக் நோயினால் கணவர் இறந்துவிட, இளம் விதவையாக வீட்டுக்குள் முடக்கப்பட்டார் சௌந்தரம்.
- விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா, ‘வீட்டிலேயே பூட்டி வைத்து, வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். கல்வியைத் தொடரச் செய்யுங்கள்’ என்று சொன்னதுதான், சௌந்தரத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
- இவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஹரிஜன இயக்கத்தில் இணைந்தார். காந்தியடிகள் இவரை கஸ்தூரிபாய் காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தென்னிந்தியப் பிரதிநியாக நியமித்தார்.
- 1940-ம் ஆண்டில், ராட்டையில் நூற்ற நூலில் மாங்கல்ய நாண் தயாரித்து, மஞ்சள் தடவிக் கொடுத்து இவரது மறுமணத்தை நடத்தி வைத்தார் காந்தி அடிகள். இந்த விதவை – கலப்புத் திருமணம் அக்காலத்தில் படுபரபரப்பாக பேசப்பட, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வந்தார் சௌந்தரம்.
- இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் 1947 ல் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது.
- 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
- பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். ‘பத்ம பூஷண்’ என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்தது இந்திய அரசு.