டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு பாகிஸ்தான் ஜி.டி.பி.,யை விஞ்சியது

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 30.30 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான, 28.30 லட்சம் கோடி ரூபாயை விடவும் உயர்வாக உள்ளது.

இதில் டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 14.77 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில், பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கு மேலாக உள்ளது.

இந்திய குழுமங்களில், 30 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் குழுமம் என்ற அந்தஸ்தை, டாடா குழுமம் சமீபத்தில் பெற்றது. இதற்கு இக்குழுமத்தின் கீழ் உள்ள டி.சி.எஸ்., டாடா மோட்டார்ஸ், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை உயர்வே காரணம். கடந்தாண்டு மட்டும் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 6.13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டுக்கு பின், பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது, உள்நாட்டு கடன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் கடன், குறையும் அன்னிய செலாவணி கையிருப்பு மற்றும் நிலையற்ற அரசியல்தன்மை ஆகிய காரணங்களால், பாகிஸ்தான் பொருளாதாரம் தற்போது சமாளிக்க முடியாத சூழலை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி., வங்கி மற்றும் இன்போசிஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மதிப்பு, கிட்டத்தட்ட 89.97 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும், இது வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, பூட்டான் மற்றும் மாலத்தீவு ஆகிய தெற்காசிய நாடுகளின் ஒருங்கிணைந்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி

வங்கதேசம் 37.01, பாகிஸ்தான் 28.27, இலங்கை 6.21*, நேபாளம் 3.43, மாலத்தீவு 0.57 பூட்டான் 0.22

(ரூபாய் லட்சம் கோடியில்)
* 2022 நிலவரம்

ஆதாரம்: பன்னாட்டு நிதியம்