சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் உள்ளதா அல்லது நீரூற்று உள்ளதா என்பதில் ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்புக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது சர்வே ரிப்போர்ட், வீடியோ எடுப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். 11 மணி நேரம் நடத்தப்பட்ட ஆய்வில் ஞானவாபி கட்டடத்தில் ஹிந்துக்களின் கோயில் இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஹிந்து தரப்பு கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், மே 30ம் தேதி ஆய்வு அறிக்கை மற்றும் வீடியோ அறிக்கை இரண்டும் இரு தரப்பினரிடமும் ஒப்படைக்கப்படும் என்று தீர்ப்பளித்தது. அப்போது, சர்ச்சைக்குரிய இடத்தின் வீடியோ ஆய்வு வீடியோவை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று முஸ்லிம் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, மே 24 அன்று, ஞானவாபியில் சர்ச்சைக்குரிய கட்டடம் குறித்த விவாதத்தின் போது, ஹிந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின், நீரூற்று போன்ற அமைப்பை நிறுவுவதற்காக முஸ்லிம் தரப்பால் வேண்டுமென்றே சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். சிவலிங்கத்தில் நீரூற்று அமைப்பு போல தோற்றமளிக்க 63 சென்டிமீட்டர் துளை போடப்பட்டது என்றும் அவர் கூறினார். மேலும் அந்த கட்டமைப்பு இன்னும் சேமிப்பு அறையில் இருப்பதாகவும், அதை அகற்ற முஸ்லீம் தரப்பு முயற்சித்ததாகவும், ஆனால் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் ஜெயின் கூறினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 30 மே 2022 அன்று நடைபெறும்.