ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக, சஞ்சய குமார் மிஸ்ராவுக்கு நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 2 லட்சம் கோடி ரூபாயை கடந்ததன் வாயிலாக, ஜி.எஸ்.டி., கட்டமைப்பில் இரண்டு குறிப்பிடத்தக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி., முறையை அமல்படுத்துவதில், ஏழைகளுக்கு ஆதரவான அணுகுமுறையையே பின்பற்றியது. ஜி.எஸ்.டி., முறையில் வரி விகிதம் குறைவாக உள்ள போதிலும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில், அதன் வருவாயின் பங்கு, ஜி.எஸ்.டி.,க்கு முந்தைய அளவை எட்டியுள்ளது.
கடந்த 2018 – 19ம் நிதியாண்டு முதல் 2023 – 24 நிதியாண்டு வரை, ஜி.எஸ்.டி., வாயிலான மாநிலங்களின் வருவாய் 46.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதற்கு முந்தைய நடைமுறையில், இது 37.50 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்திருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.