ஜம்மு – காஷ்மீர் பிரச்சினைக் குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பது யார்?

பிரிவினைவாதிகள் NIA பிடியில்.

அவர்கள் சொத்து முடக்கம்.

பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்த விவகாரம் துருவலில்.

இதுதான் இன்றைய காஷ்மீர்.

 

சென்ற 2014- தேர்தலின் போது அரசியல்  சாஸன ஷரத்து 370 ஐ ரத்து செய்வோம், அயோத்தியில் ராமர் கோயில் அமைப்போம் என்ற பா.ஜ.க. ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரும் இந்த இரு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் கட்சியின் அடிவருடிகளும் ௨௦௧௯ தேர்தல் காலத்தில் ஒப்பாரி வைப்பது தான் வேடிக்கை.

நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை இணை அமைச்சர் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, அரசியல் ஷரத்து 370 தற்போதைக்கு ரத்து செய்ய இயலாது, ஏன் என்றால் நாடாளுமன்ற மேலவையில் போதிய எண்ணிக்கையில்லாத காரணத்தால், ரத்து செய்யும் மசோதாவிற்கு ஆதரவு கிடைக்காது என்பதால் ரத்து செய்ய இயலாது என்றார்.  ஆக, பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு, அரசியல் ஷரத்து 370 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதே.  ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் ஷரத்து 370 ஐ வைத்து அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கின்றன.

தேசிய அளவில்  2016 செப்டம்பர் மாதம் வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில்,   பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடவில்லை; அது ஒரு நாட்டின் ராணுவ அமைப்பு, அதன் கமான்டர் புர்ஹான் வானி என குறிப்பிட்டுள்ளது, இவர்களின் நோக்கம் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக் கூடாது என்பதே.

காங்கிரஸ் கட்சியை பொறுத்த மட்டில், முஸ்லிம்களுக்கு எதிரான எந்த ஒரு காரியத்தையும் செய்ய முற்படமாட்டார்கள்.  ஷரத்து 370 என்பது தற்காலிகமானது என்பதை மறைக்கிறார்கள்.   காஷ்மீர் மாநில முதல்வராக குலாம் நபி ஆஸாத் பதவி வகித்தபோது, அமர்நாத் யாத்திரிகர்களுக்கு சில அத்தியாவசிய ஏற்பாடுகள் செய்வதற்கு தற்காலிகமாக நிலம் ஒதுக்க சட்ட முன்வரைவு கொண்டு வந்து, முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதற்காக, அரசு போட்ட உத்தரவை ரத்து செய்து அவர்களை தாஜா செய்த கட்சி காங்கிரஸ் கட்சி.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக வாக்குறுதி கொடுத்த பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து, ஐந்தாண்டு காலம் முடிந்த பின்னரும் கோயில் கட்டவில்லை என்ற கூச்சல் எழுகிறது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் எவ்வித மாறுப்பட்ட கருத்தும் பா.ஜ.க.விற்கு கிடையாது.   ஆனால் ஐம்பதாண்டுக்கு மேலாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, எவ்வாறு நடவடிக்கை எடுக்க இயலும்? தும்மினால் கூட நீதி மன்றத்திற்கு செல்லும் காம்ரேட்டுகளும் காங்கிரஸ் கட்சியும் அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கையை எடுத்தார்கள்? ராமர் அங்கு தான் பிறந்தாரா என எகத்தாளமாக கேள்வி கேட்ட தி.மு.க. தலைவருடன் கைகோர்த்து கொண்டு தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வைப் பார்த்து கேள்வி கேட்பதா?