செமி கண்டக்டர் உற்பத்தி உலகின் கவனத்தை ஈர்க்கும் பாரதம்

இந்தியாவின் குறைக்கடத்தித் துறையை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ள அடுத்த கட்டத் திட்டம், செமிகான் 2.0 என்பது. செமிகான் இந்தியா திட்டத்தின் முதல் கட்ட வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் செமிகான் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலகளாவிய குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுதல், சிப் உற்பத்தி மட்டும் அல்லாமல், உபகரணங்கள், பொருட்கள், ஆராய்ச்சி, பேக்கேஜிங் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய அனைத்து பகுதிகளிலும் உள்நாட்டுத் திறனை உருவாக்குதல், வெளிநாட்டு சார்பைக் குறைத்து, உள்நாட்டு சப்ளை செயினை வலுப்படுத்துதல் – இவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
இவற்றை மனதில் கொண்டு சிப் வடிவமைப்பு, உற்பத்தி உபகரணங்கள், சிறப்புப் பொருட்கள், கட்டுருவாக்கம், மேம்படுத்தப்பட்ட பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் மனித வளம் ஆகிய ஏழு விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தியாவை உலகளாவிய குறைக்கடத்தி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. குறைக்கடத்திகள் நவீன தொழில்நுட்பத்தின் அடித்தளமாக உள்ளன. ஸ்மார்ட் போன்கள், வாகனங்கள், விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்திலும் சிப்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
உலக மின்னணுத் துறை சுமார் 4.3 டிரில்லியன் டாலர் மதிப்புடையது. கோவிட் காலத்தில் ஏற்பட்ட சிப் பற்றாக்குறை, உலக நாடுகளை உள்நாட்டு திறன்களை வளர்க்கத் தூண்டியது. இந்தியாவின் குறைக்கடத்தி முயற்சி 1960-களில் தொடங்கியது. ஆனால் அப்போதைய பொருளாதாரக் கொள்கைகள் அதற்குத் தடையாக இருந்தன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விரிவான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. மேக் இன் இந்தியா திட்டம், அந்நிய முதலீட்டு சீர்திருத்தங்கள் மற்றும் உற்பத்தி ஆதரவு திட்டங்கள் மின்னணு உற்பத்தியை விரைவாக வளர்த்தன.
தற்போது 300-க்கும் மேற்பட்ட மின்னணு உற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் உற்பத்தி 130 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. ஏற்றுமதி 48 பில்லியன் டாலருக்கு மேல் உள்ளது. மொபைல் போன்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக மாறியுள்ளன. இந்தத் துறை சுமார் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
2021ல், செமிகான் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. 10 பில்லியன் டாலர் திட்டத்தின் கீழ் 12 அலகுகள் அங்கீகரிக்கப்பட்டு, 20 பில்லியன் டாலர் முதலீடு திரட்டப்பட்டுள்ளது. மைக்ரான், கேய்ன்ஸ் மற்றும் சிஜி பவர் ஆகிய நிறுவனங்கள் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. சிப் வடிவமைப்பில் இந்தியா ஏற்கனவே வலுவான நிலையில் உள்ளது. பெரிய சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் வடிவமைப்பு மையங்களை நடத்துகின்றன. 2- நானோ மீட்டர் மற்றும் 3- நானோ மீட்டர் தொழில் நுட்பங்களில் இந்திய பொறியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
டிசைன் லிங்க் இன்சென்டிவ் திட்டம் மூலம், 105 ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 24 நிறுவனங்களுக்கு, 83 மில்லியன் டாலர் நிதி உதவி கிடைத்துள்ளது. தொடர்ந்து அவற்றுள் 15 நிறுவனங்கள், 118.5 மில்லியன் டாலர் முதலீட்டையும் ஈர்த்துள்ளன. கம்ப்யூட், மெமரி, ரேடியோ ஃப்ரீக்வென்சி, பவர், நெட் வொர்க்கிங் மற்றும் சென்சார்கள் ஆகிய ஆறு முக்கிய துறைகளில் திறன்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளன.
தற்போது 40 நானோமீட்டர் தொழில்நுட்பம் உள்ளது. அடுத்த எட்டு ஆண்டுகளில் 7 நானோமீட்டர் முதல் 3 நானோமீட்டர் வரையிலான உயரிய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிப் வடிவமைப்பு பொறியாளர்களின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த திட்டம் உள்ளது. அரசு ஆதரவுடன் தனியார் முதலீடும் அதிகரித்து வருகிறது. செமிகான் திட்டத்திற்கு வெளியே மட்டும் 3 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு வந்துள்ளது.
செமிகான் 2.0 மூலம் இந்தியாவை உலகளாவிய குறைக்கடத்தி மையமாக மாற்ற அரசு முயல்கிறது. இது நீண்டகால தொழில்துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெரிதும் உதவும்.

– ஆர்கனைசர் ஆங்கில இணையத்தில் இருந்து தமிழில் : சுபதி கார்த்திக்