சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி? – தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல்

 தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். சென்னையில் ஜமாத் – உல் – முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சிக்கியுள்ளார்.

நாடு முழுவதும் ஐ.பி. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத கும்பலுக்காக நிதி திரட்டுவோர் ஆதரவு அளிப்போரை கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் முழுவதிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அல் லாமி கஹ்தான் மற்றும் அல் ஷ்வாய்லி சாதிக் ஆகியோரை கடந்த மாதம் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். இவர்களை விசாரித்த போது இருவரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பியதும், இவர்களுடன் மேலும் சிலரும் தப்பியதும் தெரிந்தது.

இவர்களை கைது செய்ய ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசாரின் உதவியை ஈராக் போலீசார் நாடினர். சர்வதேச போலீசார் நடத்திய விசாரணையில் அல் லாமி கஹ்தான் மற்றும் அல் ஷ்வாய்லி ஆகியோர் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பது தெரிய வந்தது. இவர்களுடன் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 12 பேரும் ஊடுருவி உள்ளதாக தெரிகிறது.

சென்னையில் சிக்கினார்

ஹார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் 2013ல் குண்டுவெடிப்பு நடந்தது. இதற்கு மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் ஜமாத் – உல் – முஜாகிதீன் என்ற பயங்ரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முக்கிய புள்ளி ஒருவர் சென்னை நீலாங்கரையில் பதுங்கி இருப்பதை ஐ.பி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் உறுதி செய்தனர். இதுகுறித்து கோல்கட்டா சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னை போலீசார் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு நீலாங்கரையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஷேக் அசுதுல்லா 35, என்பவரை கைது செய்தனர்.

இவர் 10 மாதங்களாக சென்னையில் கட்டுமான ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா உயிருக்கு குறிவைத்து சதி திட்டம் தீட்டி வந்துள்ளார்.

ஜாமத் – உல் – முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளிகளில் ஒருவராக செயல்பட்டு வந்த ஷேக் அசுதுல்லா வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் துப்பாக்கி சுடுவதில் வல்லவர். சென்னையில் தன் கூட்டாளிகளுக்கு பயிற்சி அளித்தாகவும் கூறப்படுகிறது. ‘பேஸ்புக்’ வழியாக மேற்கு வங்கத்தில் உள்ள தன் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். மத்திய புலனாய்வு அதிகாரிகள் இளம்பெண் போல இவரது பேஸ்புக் பக்கத்தில் நுழைந்து ஆசை காட்டி பிடித்துள்ளனர்.