சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் சம்மதம்

தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், அனைத்து நீர்நிலைகளும் வறண்டதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும், மக்கள் கடும் துயரத்திற்கு உள்ளாகினர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தரப்பட வேண்டிய, கிருஷ்ணா நீரும் வரவில்லை.வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து, ரயிலில் குடிநீர் எடுத்து வந்து, நிலைமையை சமாளிக்கின்றனர்.

தற்போது, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், பலத்த மழை பெய்து வருகிறது. எனவே, ஆந்திர முதல்வரை சந்தித்து, தண்ணீர் கேட்பதற்காக, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோரை, முதல்வர், இ.பி.எஸ்., ஆந்திரா அனுப்பினார்.அமைச்சர்கள் இருவரும், நேற்று ஆந்திர முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். சென்னை குடிநீர் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து, தண்ணீர் திறந்து விடக்கோரி, இ.பி.எஸ்., எழுதிய கடிதத்தை அளித்தனர்.

அதை பெற்ற, ஜெகன்மோகன் ரெட்டி, சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு, போதுமான தண்ணீரை, உடனடியாக விடுவிக்க, சம்மதம் தெரிவித்தார்.

இதனால், சென்னை மக்களின், குடிநீர் தேவை பூர்த்தியாகும். முதல்வர் மற்றும் தமிழக மக்கள் சார்பில், ஆந்திர முதல்வருக்கு நன்றி. நமக்கு, 8 டி.எம்.சி., தண்ணீர் திறக்க, ஆந்திர முதல்வர் சம்மதித்துள்ளார்.