சுவாமி தயானந்த சரஸ்வதி

சிறந்த தத்துவவாதியாகவும், ஹிந்து தர்மத்தின்  தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவியவர். இவர் குஜராத் மாநிலம்  டங்காரா கிராமத்தில் 02.09.1824ல் பிறந்தார் . இவரது இயற்பெயர் மூல்சங்கர். இவருக்குத் தொடக்கக்கல்வி ஏதும் அளிக்கப்படவில்லை. இவருக்கு வீட்டிலேயே சமஸ்கிருத கல்வியோடு சமய நூல்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் தண்டி சுவாமி பூர்ணானந்த் என்பவரிடமிருந்து சன்யாசி தீட்சதை பெற்றுத் துறவியாக மாறினார். அன்றிலிருந்து தயானந்த சரஸ்வதி என அழைக்கப் பெற்றார்.

யோகா மற்றும் தந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த இவர் 1837ல் கடவுளின் உருவ வழிபாடுகளின் மீதான நம்பிக்கையை இழந்தார். வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நம்பினார். அதன் பின்பு சமயத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்து நல்லறிவு புகட்டினார். ஹிந்து, கிறித்தவ, இஸ்லாமிய சமய சாத்திர அறிஞர்களிடம் தர்க்கம் செய்து ஹிந்து நம்பிக்கைகளை எடுத்துரைத்தார். இந்நிகழ்வுகள் அனைத்திலும் இவர் வெற்றியடைந்தார்

10.04.1875ல் மும்பையில் ஆரிய சமாஜம் எனும் அமைப்பைத் தொடங்கினார். இவர் காலத்தில் நிகழ்ந்து வந்த குழந்தைத் திருமணத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலவழிக் கல்வியை நாடு முழுவதும் பரப்பப் பாடுபட்டார். இவர் எழுதிய “சத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார்” எனும் புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. இவரது சமையல்காரர் விஷம் கலந்த பாலைப் பருகக் கொடுத்ததை அறிந்து அவனை மன்னித்து அவன் சொந்த ஊருக்குச் செல்ல பயணப் பணமும் கொடுத்து உதவினார். இவரது 59 வது வயதில் முக்தியடந்தார்.