6.பொய் சொல்ல விரும்பாத கம்யூனிஸ்ட்
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மறுபடியும். மதுரை சென்னை தினமணி அலுவலகத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு இங்கே வந்திருக்கிறேன். மீனாட்சி கோயிலுக்கு அருகில் உள்ள சந்துக்கு கோபால கொத்தன் தெரு என்று பெயர். அங்கே ஒரு கல்யாண மண்டபம். அதனுடைய இரண்டாவது மாடியில் மாதாந்திர வாடகைக்கு பலர் இருக்கிறார்கள். பெரும்பாலான அறைகளில் இரண்டு பேர் வாடகையை பகிர்ந்து கொள்வார்கள். நான் ஒருவனாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இன்னொருவர் யார் என்று அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எத்தனை நேரம் தான், பராசக்தியும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பது. பராசக்திக்கு பரவாயில்லை. அசைவதும், அசைவிப்பதும், அசையாமல் இருப்பதும் அவளுடைய கட்டுப்பாட்டில் இருப்பது. நமக்கு அப்படி இல்லை. வெளிச்சத்தில் பார்வையும், இருட்டில் மனசும், இஷ்டப்படி பாய்கிறது. இதை யோசித்து, இன்னும் சிலரை அறைக்குள் கொண்டு வந்தேன். அரியக்குடி, மகாராஜபுரம், எம்எல்வி என்று ஒரு அணிவகுப்பு. நித்திரையில் கலப்பதற்கு முன் தீக்ஷிதர் கிருதியைக் கேட்டுவிட்டால், கனவில் அம்பாள் பிரத்யஷம் என்று எனக்கு ஒரு திட்டம்.
‘பஞ்சதஸாஷரி பாண்டியகுமாரி’ என்று மகாராஜபுரம் சந்தானம் உருக்கி பெருக்கி வார்த்துக் கொண்டிருக்க, கண்களும் நெஞ்சமும் கசிந்தபடியே உறங்கிப் போனேன். இறந்து போன உறவினர் ஒருவர் கனவில் வந்து நட்போடு விசாரித்தார். நடப்பு உலகின் தகவல் தொடர்புகளே நமக்கு கொஞ்சம் முன்னே பின்னே. நள்ளிரவில் விழித்தபோது ஆவியை அழைத்தது யார் என்ற கோபம் மிஞ்சியது. எந்த ஆட்டத்திலும் இவளை மிஞ்ச முடியாது.
காலையில் தியானம் செய்வதற்குமுன் மீனாட்சி படத்திற்கு அருகே தசாங்கம் ஏற்ற வேண்டும் என்பது நோக்கம். காதி பவனிலிருந்து வாங்கி வந்த பாக்கெட்டை பிரித்தால் மாவு வடிவத்தில் இருக்கிறது. ஏதோ ஊதுவத்தி போல குச்சியாக இருக்கும் என்று நினைப்பிலிருந்தேன். மாவை என்ன செய்வது. இரண்டு அறைகள் தள்ளி இருப்பது நாகராஜன். இந்தத் தளத்தில் அனைத்துக்கும் அணுக வேண்டியது அவரைத்தான்.
“சரியாகப் பாருங்கள். உள்ளே ஒரு கூம்பிருக்கும். அதில் பொடியை நிரப்பித் தட்டில் வைக்க வேண்டும்” என்று சொல்லி குட்டி தட்டு ஒன்றும் கொடுத்தார். புரிந்தது போல் தலையாட்டிவிட்டு மெதுவாக நகர்ந்தேன். அறைக்கு வந்து தினமணி பேப்பரை தரையில் விரித்து தசாங்கப் பாக்கெட்டைக் கிழித்து கொட்டுவதற்கு ஆயத்தம் செய்தேன். நாகராஜன் வந்துவிட்டார். என்னையும், என் செயல் திறமையும் நன்றாகப் புரிந்து கொண்டவர் அவர்.
தினமணிக்கு வேலையில்லாமல் கூம்பில் தசாங்கப் பொடியை நிரப்பி செல்லமாக ஒரு தட்டு தட்டினார். அது சமர்த்தாக உட்கார்ந்து கொண்டது மன்னிக்கவும் நின்று கொண்டது. ‘ஏத்தி வச்சிடுங்க’ என்று சொல்லி வெளியே போனவர் சுவர் ஓரமாக வைத்திருந்த தலையணையை ஒரு முறை உற்றுப் பார்த்தார். இது எதற்கு என்றார்.
ராஜ யோகப் பயிற்சியில் இடது பாதத்தை ஆசன வாய்க்கு கீழே வைக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லி இருக்கிறது. அபூர்வ சகோதரர்கள் அப்புவைப் போல விசேஷ பயிற்சி எடுத்து, ஒரு மாத காலத்தில் இடது பாதம் அங்கே அடங்கி இருக்கிறது. ஆனால் இந்த வலது பாதத்தை எங்கே வைப்பது என்பதை சொல்லவில்லை. நானே உணர்ந்து கொள்ளும்படி விட்டுவிட்டார்கள். என்னை என்ன செய்வதாக உத்தேசம் என்று அது அந்தரத்தில் முரண்டு பிடித்தது. வலது காலை தாஜா செய்யத்தான் தலகாணி. இதை எப்படி அவருக்கு சொல்வது?
தசாங்கம் புகை வளையங்களை போட ஆரம்பித்தது. நமக்கே பிரச்சினையாய் இருக்கும் இந்தப் புகை தேவிக்கு உபத்திரவமாக இருக்கும் என்று உணர்ந்தேன். தசாங்கத்தை பத்திரமாக அப்புறப்படுத்தி அலமாரியில் அடுத்தத் தட்டில் வைத்தேன். அவளுக்கு நறுமணம் அனாவசியம்.
நம்முடைய வாசனாதித் தாக்குதலைத் தடுப்பதற்குத் தான் தசாங்கம். என்னைப் பொறுத்துக் கொள்ளும் பராசக்தி என் பொருட்டு தசாங்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
கிருத்துவராகப் பிறந்தார் இவர். மார்க்சிஸ்ட் ஆக மாறினார். இறுதியில் மனிதனாக மனித நேயத்தோடு எழுதிக் குவித்தார். இவர் பெயர் ஆரோக்கியசாமி. புத்தகத்தின் பெயர் “உயிர்த்தெழுமா கம்யூனிசம்”. நூலாசிரியர் எஸ். ஆரோக்கியசாமி.
இந்திய ஊடகங்களில் இடதுசாரிகளின் குரல் வலுத்திருக்கும் காலம் இது. தமிழ்நாட்டு நிலைமை இதைவிடக் கொடுமை. இந்த அறிவு ஜீவிகளால் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனைகளை அகற்றி, பொதுவுடமை பூமியின் அங்க லட்சணங்களை சரியான அளவில் வெளிப்படுத்தும் நூல் இது.
கூலி உயர்வு கேட்பவர்கள், பணி உயர்வு என்ற கோரிக்கையை முன் வைப்பவர்கள், பாலியல் பாகுபாடுகளை எதிர்ப்பவர்கள் என்று பலவிதமான சமூக குழுக்கள் தங்களுக்கு விமோசனமாக மார்க்சியத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்தக் கருத்தை எதிர்கொண்டு இந்திய ஜனநாயகம்தான் இவர்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுத் தரும். மார்க்சியம் அல்ல என்கிறார் ஆரோக்கியசாமி.
இந்த நூலில் ஒரு கட்சி பத்திரிகை அலுவலகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட கொள்கை பிரச்சினை பற்றி விவரமாக சொல்லப்பட்டு இருக்கிறது. கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் பத்திரிகை தீக்கதிர். சரி பிரச்சினை என்ன?
“1989 ஆம் ஆண்டு. டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தீக்கதிர் பத்திரிகையில் ஒரு கட்டுரை பிரசுரமாகிக் கொண்டிருந்தது. அந்தக் கட்டுரையை எழுதியவர் பிரகாஷ் காரத். அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தவன் நான். அப்போது நான் தீக்கதிர் நாளிதழின் துணை ஆசிரியர். இந்தக் கட்டுரையை மொழிபெயர்க்க என்னை பணித்தவர் தோழர் கே முத்தையா.
——–அந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. சோவியத் யூனியனைப் பற்றி மற்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட்களை பாதிக்கும் செய்திகள் வந்து கொண்டிருந்த காலம் அது. இந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டுமா என்ற என் கருத்தை தோழர் முத்தையாவிடம் தெரிவித்தேன்.
அதற்கு “பூஷ்வாக்கள் இப்படித்தான் பொய் சொல்வார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் தான் இது போன்ற கட்டுரைகள் வெளி வர வேண்டும்”. ஆகவே நீங்கள் உடனே “மொழிபெயருங்கள்” என்றார் முத்தையா. இப்படி ருமேனியாவைப் புகழ்ந்து எழுதப்பட்ட கட்டுரைதான் தீக்கதிர் பத்திரிகையில் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. அப்போது நேரம் நள்ளிரவு 12 மணி. அடுத்த நாள் கிறிஸ்துமஸ். இந்தக் கட்டுரைக்கு நேர் எதிரான செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதாவது ருமேனியாவில் மக்கள் புரட்சி செய்கின்றனர். ரேஷன் கடைகள் சூறையாடப்படுகின்றன. மக்கள் ரொட்டித் துண்டுகளுக்காக அடித்துக் கொள்கின்றனர். ருமேனியா எரிந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை சூறையாடப்பட்டது. அந்த மாளிகையின் கழிப்பறைகள் கூட, தங்கத்தால் கட்டப்பட்டுள்ளன என்ற செய்திகள்.
இந்த சூழலில் ருமேனியாவில் வறுமையில்லை, வேலையின்மை இல்லை, பட்டினி இல்லை என்று புகழ்ந்து எழுதப்பட்டிருந்த கட்டுரையை தீக்கதிர் பத்திரிகையில் எப்படி வெளியிடுவது என்பது பிரச்சினை ஆகிவிட்டது. முத்தையா தவிர ஆசிரியர் குழுவில் மற்றவர்கள் கூடி பேசி, பிரகாஷ் காரத்தின் கட்டுரையை வெளிவராமல் தடுத்து விட்டனர் என்கிறார் ஆரோக்கியசாமி.
கம்யூனிசத்தின் சரிவு எப்படி ஏற்பட்டது? கம்யூனிசக் கனவு சாத்தியமாகுமா என்பதை வெளிப்படையாக எழுதுகிறார் ஆரோக்கியசாமி. சித்தாந்தச் சிக்கல்களை கடந்து தத்துவப் பிரயோகங்களை விரயம் செய்யாமல், எளிய மொழியில் இவர் எழுதுகிறார். பொய் சொல்ல விரும்பாத கம்யூனிஸ்ட் இவர். அரசியல் வரலாற்றை கலப்பில்லாமல் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு “உயிர்த்தெழுமா கம்யூனிசம்” உதவும்.
———-சரித்திரப் புரட்டர்கள்/ டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன்/ வ. மோகனகிருஷ்ணன் பதிப்பகம். இன்று த.வெ.க.வோடு அணி சேர்ந்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று வரை திராவிடத்தின் நிழலில்தான் குடியிருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். இந்தத் திராவிட சார்புநிலையை கடந்த அறுபது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் கடைப்பிடிக்கின்றன என்பதும் நாம் அறிந்ததே. ஆனால் 1960களில் இருந்த அரசியல் சூழல் வேறுமாதிரி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் களத்திலும், கருத்திலும் உரசிப் பார்த்த நேரம் அது.
ஒரு பக்கம் மாலைமதி இதழ் திமுக ஆதரவு கட்டுரைகளை வெளியிட்டது. அதை எதிர்த்து சமரன் இதழில் எஸ். ராமகிருஷ்ணன் தொடர் கட்டுரைகள் எழுதினார். அது தொகுக்கப்பட்டு சரித்திரப் புரட்டல்கள் என்ற தலைப்பில் புத்தகமாக.
———பஞ்சபூதங்களால் அமைந்தது பிரபஞ்சம் என்கிற தொல்காப்பிய சூத்திரத்தை வடமொழி வழக்கத்தோடு ஒப்பிடுகிறார் எஸ்.ஆர்.கே. பெண்பால் புலவர்கள் தமிழில் பாடியது தனிச்சிறப்பு அன்று. வேதத்தில் பெண்கள் பாடிய கவிதைகள் உள்ளன. மைத்ரேயி, கார்கி போன்ற ஞானிகளைப் பற்றி உபநிடதம் பேசுகிறது.
தென்னகமே பக்தியின் பிறப்பிடம் என்பது பத்மபுராணத்தின் கூற்று. தமிழ்நாட்டின் ஆற்றங்கரைகளிலே அருளாளர்கள் நடந்தார்கள் என்கிறது பாகவதம்.
பக்கம் பக்கமாக வரலாற்று ஆதாரங்கள், சமயச்சடங்குகள் இலக்கிய மேற்கோள்கள் ஆகியவற்றை அணிவகுத்து எழுதும் இந்த அறிஞருக்கும் சில இடங்களில் மார்க்ஸியத்தால் உருவான மனக்கோணல்கள் உண்டு என்பதையும் பதிவு செய்கிறேன்.
தொடரும்…
கட்டுரையாளர் : சுப்பு