சில பயணங்கள்.. சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்…

சில விஷயங்களுக்கு முடிவு கிடையாது, எளிதில் தீர்க்க முடியாது என்பதை அவ்வப்போது உணர்ந்தாலும், அது புத்தியில் ஒட்டுவதில்லை. அரை மணி நேரமாக ஸ்விக்கி மூலம் வந்த காப்பி டப்பாவை திறக்க முயன்று முடியவில்லை. உடம்பில் திராணி இல்லை என்று தெரிந்தது. அடுத்தது தத்துவ ஆராய்ச்சி.
இது எப்படி ஏற்பட்டது, காரணம் என்ன, பிரமாணம் என்ன என்று யோசித்துப் பார்க்கையில், வீட்டுக்காரி சொல்வதைக் கேட்டு இருக்கலாம் என்று தெரிந்தது.
இன்று காலை புறப்பட்டு தம்பி வீட்டுக்கு போயிருக்கிறாள், நாளை வருவாள் என்று எதிர்பார்க்கலாம், இல்லை வெள்ளிக்கிழமை அன்று பிறந்த வீட்டை விட்டு புறப்படக்கூடாது என திருத்தத் தீர்மானம் கொண்டு வரலாம். என்னையும் அழைத்தாள் போயிருக்கலாம். போகவில்லை. விளைவு பரீட்சித்து ராஜாவை பாம்பு துரத்தியது போல் விதி என்னைத் துரத்துகிறது.
காப்பி டப்பாவை திறக்கும் முயற்சியை ஒத்திவைத்தேன். அடுத்த அறையில் ஆள் இருக்கிறார்களா என்று தேடினேன். தம்பி இருந்தான். அவன் கத்திரிக்கோல் வைத்து கட் செய்ய வேண்டும் என்றான். இல்லை மூடியைத் திருக வேண்டும் என்பது என் கட்சி.
இந்த வியாஜ்யம் தீர்வதற்குள், தம்பி மகன் விஜி வந்து கட் பண்ணி திருகி, காப்பி என்னும் திரவத்தை வெளியே எடுத்துவிட்டான். ஆனால் இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு காப்பி ஆறி விட்டது. இதை சுட வைக்க வேண்டும். அதற்கு உற்றார், உறவினர் தயவு வேண்டும். பேசாமல் அவளோடு மச்சான் வீட்டுக்கு போயிருக்கலாம்.
பிரஞ்சு அறிஞர் ஜீன் பால் சார்த்த எழுதிய ஒரு நாவலில், தன் நண்பனைத் தேடி போவார் கதாநாயகன். போன இடத்தில் நண்பன் இல்லை. அங்கேயே காத்திருக்க வேண்டிய நிலைமை. இந்த இடத்தில் சார்த்த எழுதுகிறார், “நண்பனின் இருப்பின்மை அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது” என்று.

மேலோட்டமாகப் பார்க்கும் போது, பல நாடுகள் பல இனங்கள் என்று பிரிந்திருக்கும் மனிதர்களிடையே ஒற்றுமைக்கான கூறுகள் தென்படாது. சில விஷயங்களில், அயர்லாந்துகாரருக்கும், அயினாவரத்துக்காரருக்கும் ஒரே மாதிரியான கருத்தோட்டம் இருக்கிறது. தன்னுடைய தனித்தன்மையை இழக்காமல், பொதுவாக நீதி சொல்லும் ஆற்றல், பழமொழிகளில் இருக்கிறது. இதை உணர்ந்து பழமொழிகளை தொகுத்துக் கொடுத்திருக்கிறார் பா. ராமஸ்வாமி.
போலந்து: நெருக்கடி நேரும்போது, ஒருவன் முதலில் கடவுளிடம் திரும்புகிறான். பிறகு லேவாதேவிக்குத் திரும்புகிறான். சிறு வீட்டில் கடவுளுக்கு ஒரு மூலையில் இடம் இருக்கிறது. பெரிய வீட்டில் அவர் நடுக்கூடத்தில் நிற்க வேண்டி இருக்கிறது.
ஸ்வீடன்: ஆலயத்துக்கு அருகில் இருப்பவன் தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
அயர்லாந்து: கழுதையின் பின்பாகத்திற்கும், பாதிரியாரின் எல்லா பாகங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இங்கிலாந்து: வாதியும், எதிரியும் ஒரே படகில் சென்றால், சாட்சிகள் நீந்தித்தான் போக வேண்டும்.
ஆப்பிரிக்கா: நீதிபதியின் குதிரை இறந்தால், எல்லோரும் சென்று துக்கம் விசாரிப்பார்கள். நீதிபதியே இறந்து போனால். ஒருவரும் போக மாட்டார்.
அரேபியா: ஒரு மரத்தில் உள்ள கனிகளை எண்ண முடியும். ஆனால் ஒரு கனியில் உள்ள மரங்களை எண்ண முடியாது.
உலகப் பழமொழிகள் / பா ராமஸ்வாமி / வள்ளுவர் பண்ணை

எதிரியின் கோட்டையில் எட்டிப் பார்க்கும் முயற்சி இது. நமக்கு இன்றைய எதிரி திராவிடம். நாளைய எதிரி. என்னுடைய வரலாற்று அறிவை வைத்து சொல்கிறேன். தமிழ்நாட்டில் ஈழத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள் மைனாரிட்டி தான். ஈழப் பிரச்சனையில் அக்கறை காட்டாத ஜோசப் விஜய் தான், பேராதரவோடு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கிறார். நாள் தவறாமல் ஈழத்தைப் பற்றி உரத்த குரலில் பேசுகிற நாம் தமிழர் சீமானுடைய வாக்குவங்கி, நாளுக்கு நாள் குறைகிறது.
தமிழர் பிரச்சனையை முன்னெடுத்து, திமுகவை உடைத்த வைகோ, நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்தாகூர் என்கிற காங்கிரஸ்காரரிடம் தோற்றுப் போனார். லண்டனிலும், அமெரிக்காவிலும் குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள் கூட்டம் போடலாம், தொல் திருமாவளவனை அழைத்து புகழ் பாடலாம். ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டில் இவர்களுக்கு அதிகாரப் பங்கீடு எப்போதும் கிடைக்காது.
தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம், இன்று ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற்று தருவது என்கிற அளவில் இருக்கிறது. இது இவ்வளவுதானா அல்லது அடுத்த நிலைக்கான தயாரிப்பா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. கோட்டைக்குள்ளே நடப்பது என்ன, தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மறைத்து வைத்திருப்பது என்ன, என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
தமிழ்த் தேசியம் எனும் அடையாள அரசியல் / நேர்காணல் தொகுப்பு/ தொகுப்பு. கானகன்
இருபது பேரோடு கானகன் நடத்திய நேர்காணல்களை புத்தக வடிவில் கொடுத்திருக்கிறார். இந்த முயற்சிக்கான அவசியம் பற்றியும் அவர் சொல்கிறார். முதல் பதிப்பு 2011.
அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் என்று 20 பேரை பேட்டி எடுத்து கானகன், இந்தப் புத்தகத்தை தயாரித்திருக்கிறார் சிலவற்றை நாம் பார்ப்போம்.
“தடபுடலாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தினார், மணிமண்டபம் அமைத்தார், சிலைகள் வைத்தார், நரம்புப் புடைக்க பேசினார், பாடல் எழுதினார், பெயர் வைத்தார். இப்படி ஏதாவது ஓர் சடங்கின் மூலம், தனது தமிழ் பற்றை ஒருவர் வெளியிட்டால், அதுவே ஏதோ பெரும் சாதனையாக சித்தரிக்கப்படுகிறது. தமிழினம் என்ற அடையாளத்தை கொண்டாடுவதாக சொல்லி, புறப்பட்டவர்கள் அடையாளமாக எதையாவது வெளிப்படுத்திவிட்டு அமைதி ஆகின்றனர்” (பக்கம் 11).
திராவிட இயக்க வளர்ச்சிக்குப் பிறகு, ‘தமிழன்’ என்று சொல்லிக் கொள்ளாவிட்டால் திரும்ப கைபர் கணவாய்க்கு விரட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில், பிராமணர்கள் தங்களை தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளலாம். ஆனால் மனதளவில் அவர்கள் அப்படி உணர்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது (பக்கம் 17).
விடுதலைப்புலிகள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள மறுத்து, பல்வேறு தரப்பினரை தொடர்ந்து பகைத்துக் கொண்டதற்குக் கூட, தமிழ் உணர்வு துதி பாடிகளும் ஒரு காரணம் எனலாம். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் என்பதெல்லாம் இவர்களின் திருக்குறள் வகுப்பிற்கும் மேடைப் பேச்சுக்கும் தான் என்றாகிவிட்டது (பக்கம் 27).
அ.கா. பெருமாள் என்ற நாட்டாறியல் அறிஞர் சொல்கிறார். “தமிழக நாத்திகர்கள், தமிழ் இலக்கியங்கள், நாட்டார் நிகழ்த்து கலைகள், நாட்டார் வழிபாடுகள், இதிகாச புராணங்கள், பொதுவான சாஸ்திரிய கலைகள், அழகியல் கூறுகளை உடைய கவின் கலைகள், இசை வடிவங்கள் போன்ற எல்லாவற்றையுமே – இவை பிராமண சார்புடையவை என்றோ, கடவுள் கொள்கை என்றோ பார்த்தவர்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக இவை எல்லாவற்றையுமே இவர்கள் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாய். இவர்கள் 2,000 வருட பாரம்பரியம் உடைய தமிழ் இலக்கியம். பண்பாடு கலைகளை உதர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
ஒரு மொழி இலக்கியங்களின் அழகியல் கூறுகளையும், துன்பங்களையும் உதறுவது என்பது, தரமான மொழி உணர்வை கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. தொன்மம், இலக்கியம், அழகியல் கூறுகளை உடைய கவின் கலைகள் தொடர்பில்லாத தமிழ் உணர்வு ஜீரணிக்க முடியாது. தமிழ்நாட்டு நாத்திகர்களுடன், கேரளத்து நாத்திகர்களையும், கேரள மாக்சியவாதிகளையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, தமிழ் நாத்திகரின் தமிழ் உணர்வின் அர்த்தம் புரியும்.
கேரள மாக்சியாவாதிகளுக்கு கதகலியின் அழகியல் கூறுகளை அனுபவிக்கவும், ஓணம் பண்டிகைகளை கொண்டாட மதமோ, பிராமணரோ தடையாக இருக்கவில்லை. ஓணம் பண்டிகை மாவலி என்னும் சக்கரவர்த்தியின் நினைவுக்கு கொண்டாடப்படுவது என்ற தொன்மம், கேரள மாக்சியவாதிகளின் நினைவுக்கு வராது.
ஓணம் மலையாளிகளின் பண்டிகை என்றே அவர்கள் பார்ப்பார்கள். நாட்டார் தெய்வ வழிபாடு சார்ந்து ‘தெய்யம்’ என்ற கலையையோ, புராணப்பனுவல் சார்புடைய கதகளி கலையையோ, மதம் சார்ந்தோ நம்பூதிரி சார்ந்தோ மலையாள மொழி பேசும் மார்க்சியவாதி பார்ப்பதில்லை. அவற்றை அவன் மொழி உணர்வோடே பார்க்கிறான். இத்தகைய பார்வை தமிழ் நாத்திகவாதிகளிடம் இல்லை (பக்கம் 174, 175).
பிரபாகரன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தார். எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, மதுரை தமிழீழ ஆதரவாளர் மாநாட்டையே அவர் புறக்கணித்தார். போராளி குழுக்களுக்காக திரட்டிய நிதியில், தனது பங்கையும் பெற பிரபாகரன் மறுத்துவிட்டார் என்பது உண்மையா என்ற கேள்வி, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இடம் கேட்கப்பட்டது.
அவர் சொன்னது, பிரபாகரன் கருணாநிதியை நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் அந்த டெசோ நாடகத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் 50 லட்சம் ரூபாய்க்காக, அங்கே சென்று கருணாநிதியின் எம்.ஜி.ஆர் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கக் கூடாது என்று அவர் நினைத்திருப்பார்.
இந்திய அரசியல் சட்டத்திற்கு, ஊரு ஏற்படாமல் பணியாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அமைச்சர் பதவிக்குள்ள அத்தனை சுபசௌகரியங்களையும் அனுபவித்த பிறகு, பண்ருட்டி ராமச்சந்திரன் தன்னை அறியாமல் தன் விருப்பத்தை சொல்லி விட்டார். தமிழனுக்கு என்று தனியாக ஒரு நாடு இருந்திருந்தால், இலங்கையில் இவ்வளவு தமிழர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். உலகில் ஜார்ஜியாவில் ரசிகர்கள் தாக்கப்பட்ட போது, ரஷ்யா தலையிட்டது. சைப்ரசில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது, துருக்கி தலையிட்டது. சேகுவேராவிற்காக ஐரோப்பா படைகளே அங்கே சென்றன.
“நமக்கும் நாடு என்று ஒன்று இருந்தால், நமது படைகளை அனுப்பி இலங்கைத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம். அந்த அளவில் தமிழனுக்கு பேராபத்து ஏற்படும்போது, அவனைக் காப்பாற்ற தனிநாடு என்று ஒன்று இருப்பது அவசியம் என்பதைத்தான், அண்மை நிகழ்வுகள் நமக்கு அறிவுறுத்துகின்றன”. இது எதிரியின் கோட்டை, எட்டிப் பார்ப்பது அவசியம்!
தொடரும்…

 

கட்டுரையாளர் : சுப்பு