சின்னம் என்பது கூடுதல் பலம்

பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை, வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்புகூட தொலைபேசியில் என்னை அழைத்து 31ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன். அதன்பிறகு வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அதன்படி அறிவித்தார். ஓ. பன்னீர்செல்வமும் இ.பி.எஸ் வேட்பாளரை அறிவித்துவிட்டார் எனவே நானும் வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு வேட்பாளரை அறிவித்தார். கூட்டணிக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையில் எப்போதுமே தலையிடமாட்டோம் என்பது எப்போதுமே பா.ஜ.கவின் நிலைப்பாடு. இதனால் இவை அனைத்தையும் பொருமையாக பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் துளியும் சந்தேகமின்றி பயணிக்கிறோம். அதனால்தான், பா.ஜ.க தேசிய தலைவரின் அறிவுறுத்தலின்படி, மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தலைமையில் இருவரையும் சந்தித்தோம். ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும், அவருக்கு எங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து உழைக்க தயார், அந்த வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும், அப்போதுதான் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். நிச்சயமாக நமக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், சின்னம் என்பது கூடுதல் பலம். இ.பி.எஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஏற்கெனவே இரண்டுமுறை அங்கு எம்.எல்.ஏவாக இருந்தவர். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு நம்முடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்திடம் வேண்டுகோளை வைத்தோம். அவரும் தனது தரப்பு கருத்துகளை தெரிவித்தார். தனது கருத்தைத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். கட்சியின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக இந்த இடைத்தேர்தல் முக்கியமானது. எனவே ஓ.பிஎ.ஸ், நம் அனைவரோடும் இன்னும் அதிகமாக இணைந்து செயல்பட வேண்டும்” என கூறினார்.