சரித்திரம் படி சரித்திரம் படை- பாகம் 1

சென்ற வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர் கல்வி துறைக்கான 15வது உச்சி மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார். மாநாட்டை ஏற்பாடு செய்தது தொழில் – வணிக நிறுவனங்களில் கூட்டமைப்பு (FICCI). அவருடைய உரையில் ‘‘மக்கள் விஞ்ஞான பொறியியல் பாடங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ அதே போல கலை இலக்கிய சமூகவியல் பாடங்களுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும். மாணவர்களை கலை இலக்கியங்களிலும் நாட்டம் கொள்ள செய்யவேண்டும்’’ என்று கூறினார்.

அவர் சொல்வது இன்றைய அத்தியாவசிய தேவை என்று தோன்றுகிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே கலை இலக்கியபாடங்களில் மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாத போக்கு நிலவுவது உண்மை. உதாரணமாக சரித்திரம் (வரலாறு) எடுத்து படிப்பது இளம்கலை நிலையிலேயே குறைந்துவிட்டது. அப்படியிருக்கும் போது உயர்கல்வியோ ஆராய்ச்சியோ பற்றி பேசவேண்டியதே இல்லை. ஒரு சராசரி மாணவனிடமோ அல்லது அவனுடைய பெற்றோரிடமோ கேட்டால் ‘‘சரித்திரம் படித்து என்ன சார் செய்யப் போகிறோம்? சரித்திரம் எதற்கு அவசியம்?’’ என்று கேட்பார்கள். இத்தகைய கேள்விகளுக்கு விடை அளிக்க சில வாழ்க்கை நிகழ்வுகளைப் பார்க்க  வேண்டும் என்று தோன்றுகிறது.. ஒரு நபருக்கு உடல்நிலை சரியில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு புதிய மருத்துவரை அணுகுகிறார்.

ஒரு மாத்திரை கொடுப்பதோ அல்லது ஊசி போடுவதோ முடிவெடுக்கும் முன்னால் அவர் அந்த நோயாளியைப் பார்த்து ‘‘இதற்கு முன்னால் இந்த மாத்திரை அல்லது ஊசி எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?, உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறதா?’’ என்று கேட்பார். அதாவது தனிநபர் மருத்துவ குறிப்புகளை (Medical Records) ஒருவர் திரட்டி வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள். நீங்கள் ஒரு மோட்டார் வாகனம் வாங்குவதாக இருந்தால் அந்த வாகனம் எப்படி வேலை செய்கிறது. எவ்வளவு பெட்ரோல் எடுத்துக்கொள்கிறது, ஏதாவது விபத்தில் சிக்கியிருக்கிறதா? என்று விசாரிப்பீர்கள்.  காப்பீட்டு (Insurance) ஆவணங்களை ஆராய்வீர்கள். அல்லது பங்குச் சந்தையில் ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்று நினைத்தாலோ அந்த கம்பெனியின் முந்தைய நடவடிக்கைகள், லாப நஷ்ட கணக்குகள், இயக்குனர்களின் பின்னணி, திறமைகள் – செயல்பாடுகள் இவற்றை ஆராய வேண்டுமல்லவா? மேற்சொன்னவையெல்லாம் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் வழக்கமாக சந்திக்க கூடிய வரலாற்றின் கூறுகள். இப்பொழுது புரிகிறதா, சரித்திரம் என்பது என்னவோ நமக்கெல்லாம் அந்நியப்பட்ட ஒன்றல்ல. ஒரு நாட்டின் சரித்தரத்தை எழுதுவது என்பதும் பல ஆவணங்கள்- கல்வெட்டுகளை ஆராய்வது , நிகழ்வுகளில் பங்கு கொண்டவர்களை விசாரிப்பது என்று தனிநபர் சரித்திரத்தின் பெரும் வடிவம் தான்.

நாட்டில் மற்றவர்களுடைய விருப்பு – வெறுப்புகளையோ அவர்களுடைய கல்வி பாடத் தேர்வுகளை மாற்ற முடியாது, அதுவும் ஒரு பேச்சிலோ ஒரே நாளிலோ. ஆனால் தனி நபர் தன்னுடைய கருத்தில் சில மறு பரிசீலனை செய்யலாம், புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம். அந்த வழியில் என்னுடைய சில எளிய ஆலோசனைகளை அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்வேன்.