சென்ற வார இதழின் தொடர்ச்சி…
பொருளாதார வளமும் ஆன்மிக விடுதலையும்
பாரதியச் சிந்தனை பொருளாதார வளமான அப்யுதயத்திற்கும், ஆன்மிக விடுதலையான நிஹ்ஶ்ரேயஸுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால்தான், “யதோப்யுதய நிஹ்ஶ்ரேயஸ சித்திஹ் ச தர்மஹ்” என்று தர்மம் வரையறுக்கப்படுகிறது — மனிதனின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஆன்மிக நலனுக்கும் வழிவகுப்பதே தர்மம். உற்பத்தியில் பெருக்கம், விநியோகத்தில் சமத்துவம், நுகர்வில் கட்டுப்பாடு — இவை வாழ்வின் வழிகாட்டும் கொள்கைகளாகக் கருதப்பட்டுள்ளன.
கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வுக்குப் பிறகு எஞ்சும் உபரியை, பிறர் நம்முடையவர்கள் என்ற உணர்விலிருந்து, சமூகத்தின் நலனுக்காக வழங்குவது தர்மம். அதுவே சமூக மூலதனத்தை உருவாக்குகிறது.
ரவீந்திரநாத் தாகூர் இதனை மிக அழகாகச் சொன்னார்: “சமூகத்திற்குக் கொடுப்பது தர்மம் அல்ல; சமூகத்திடமிருந்து பெற்றதை, சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதே தர்மம்”.
தர்மமாக வாழ்ந்த பாரதிய மரபு
பல நூற்றாண்டுகளாக பாரதம் இந்த மரபைப் பின்பற்றி வந்துள்ளது. யாத்திரிகர்களுக்காக அமைக்கப்படும் தங்குமிடம் ‘தர்மசாலை’ என்று அழைக்கப்படுகிறது. அனைவருக்கும் எந்தப் பாகுபாடுமின்றி, மருத்துவ உதவி வழங்கும் மருத்துவ நிலையம் ‘தர்மதயா மருத்துவமனை’ என்று அழைக்கப்படுகிறது.
முந்தைய காலங்களில் சாலைகள் அமைத்தல், பயணிகளுக்கு நிழல் தர மரங்களை நட்டல், கிணறுகள் மற்றும் படிக்கட்டுக் கிணறுகள் அமைத்தல், புனித யாத்திரைத் தலங்களில் ஆற்றங்கரைகளில் படித்துறைகள் அமைத்தல் போன்ற அனைத்தும் தர்மச் செயல்களாகக் கருதப்பட்டன.
ஜாம்நகர் மகாராஜாவின் தர்மம்
இரண்டாம் உலகப் போரில், ரஷ்யா போலந்தை ஆக்கிரமித்த போது, 675 பெண்களும் குழந்தைகளும் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஒரு கப்பலில் தப்பி ஓடினர். நாடு நாடாக அவர்கள் அடைக்கலம் கேட்டும் மறுக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த மும்பையிலும், அவர்களைத் தரையிறங்க அனுமதிக்கவில்லை — அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற நிலையிலும் கூட.
இந்தச் செய்தி குஜராத்தின் ஜாம்நகர் மகாராஜாவைச் சென்றடைந்த போது, அவர்களை மும்பையில் இறங்க அனுமதிக்குமாறு அவர் பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் கேட்டார். அவர்கள் அனைவரையும், தமது சமஸ்தானத்திற்கே அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். பிரிட்டிஷ் நிர்வாகம் அதற்கும் மறுத்தது.
இறுதியில், ஜாம்நகர் மகாராஜா அவர்களை கடல் வழியாக நேரடியாக ஜாம்நகருக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். அருகிலிருந்த பாலாசடியில் அவர்கள் அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்தார். அவர்களின் உணவுப் பழக்கங்களை மாற்றச் சொல்லாமல், அவர்கள் வழக்கம்போல் உணவருந்துவதற்காக கோவாவிலிருந்து ஏழு சமையல்காரர்களையும் அழைத்து வந்தார். பிரிட்டிஷ் நிர்வாகம் மீண்டும் தலையிடாமல் இருக்க, மகாராஜா 675 தத்தெடுப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார். ஒவ்வொரு பெண்ணையும் தனது மகளாகவும், ஒவ்வொரு சிறுவனையும் தனது மகனாகவும் ஏற்றுக்கொண்டார்.
அவர்களிடம் அவர் கூறியது: “நீங்கள் என் மகன்களும், மகள்களும். நீங்கள் விரும்பும் காலம் வரை, இங்கே தங்கியிருக்கலாம்”. அவர்கள் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஜாம்நகரில் தங்கி, போர் முடிந்த பின்னர் போலந்துக்குத் திரும்பினர். ஜாம்நகர் மகாராஜாவின் இந்த உதவிக்கு நன்றியுணர்வாக, பின்னர் போலந்து தலைநகரில் உள்ள ஒரு சதுக்கத்திற்கு “Good Maharaja Square” என்று பெயரிடப்பட்டது.
சடலங்களுக்கும் மதத்தை மதித்த தர்மம்
1996 நவம்பர் 12ஆம் தேதி இரவு, ஹரியானாவின் சர்க்கி தாத்ரி அருகே சவுதி அரேபிய விமானமும் கஜகஸ்தான் விமானமும் வானில் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இரண்டு விமானங்களிலும் மொத்தம் 351 பேர் இருந்தனர். அவர்களில் 300 பேர் முஸ்லிம்கள்; 12 பேர் கிறிஸ்தவர்கள்.
விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே,
ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் (சங்கசாலக்) ஜித்ராம் ஜி, மற்ற ஸ்வயம்சேவகர்களுடனும் டாக்டர் ஹெட்கேவார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களுடனும் சம்பவ இடத்துக்குச் சென்றார். இருள் சூழ்ந்திருந்த நிலையில், பெட்ரோமாக்ஸ் விளக்குகளும், ஜெனரேட்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. சடலங்கள் அனைத்தும் தாமதமின்றி பிவானியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
காலையில் செய்தி பரவியதும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் அங்கு வந்தனர். சடலங்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முடியாதவர்களில் 76 முஸ்லிம்களும், 3 கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களுக்குரிய மத நம்பிக்கைகளுக்கும், சடங்குகளுக்கும் ஏற்ப இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இதற்கு உள்ளூர் மௌலவியும், மும்பையிலிருந்து வந்த சிலரும் ஒத்துழைத்தனர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 15ஆம் தேதி, தாத்ரி பள்ளிவாசலில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், மாவட்ட சங்கசாலக் ஜித்ராம் ஜி கௌரவிக்கப்பட்டார். பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிட்ட தலைப்பு: “காக்கி கால் சட்டையும், காவித் துண்டும் பள்ளிவாசலில் கௌரவிக்கப்பட்டன.” இதுவும் ஸ்வயம்சேவகர்கள் வெளிப்படுத்திய தர்மத்தின் ஒரு வடிவமே.
ஜாம்நகர் மகாராஜாவின் செயலும் தூய தர்மத்திலிருந்தே பிறந்தது. மணிப்பூரில் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க பையாஜி கேனே மேற்கொண்ட முயற்சியும், அதே தர்ம உணர்விலிருந்தே பிறந்தது.
ஒவ்வொரு நிகழ்விலும், அவர்களின் ஆன்மிக அடித்தளமே மற்றவர்களுடன் இயல்பாக இணைவதற்கும், அவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்வதற்கும், எந்தவிதப் பாகுபாடுமின்றி தங்களால் முடிந்த அளவுக்கு அந்தத் துயரத்தைப் போக்குவதற்கும் வழிவகுத்தது. இதுவே உண்மையான தர்மம்.
தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம்
இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சங்கத்தின் முயற்சி என்னவென்றால், ஒவ்வொரு தனி மனிதரும், தர்மப்ரவண் (Dharmapravan) — தர்மத்தை நோக்கி இயல்பாகச் செல்லக்கூடியவராக மாற வேண்டும்; சமூகமும், தர்மாதிஷ்டித (Dharmadhishthitha) — தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதாக — இருக்க வேண்டும், “தர்ம நிரபேக்ஷ” (Dharma Nirapeksha) — தர்மத்திலிருந்து விலகிய அல்லது தர்மத்தைப் பற்றிய அக்கறையற்ற நபராக இருக்கக் கூடாது என்பதே. இத்தகைய சமூகம் உருவாவதையே, தேசம் ஹிந்து ராஷ்ட்ரமாக மாறுதல் என்று சங்கம் கருதுகிறது.
சேவையைப் பொறுத்தவரை, பாரதத்தின் மரபு அதை எப்போதும் தர்மமாகவே பார்த்து வந்துள்ளது. ஸ்வாமி விவேகானந்தர் இதனை “சிவபாவத்துடன் ஜீவசேவை” — “சிவபாவ் சே ஜீவ சேவா” — என்று வெளிப்படுத்தினார்.
மனிதனைச் சேவிப்பது இறைவனை வழிபடுவதற்குச் சமம்
சமூகத்திற்கு நம்மால் இயன்றதை வழங்குவது மட்டுமல்ல; சமூகத்திடமிருந்து பெற்றதை சமூகத்திற்கே திருப்பிக் கொடுப்பதே — உண்மையான தர்மம்.
கட்டுரையாளர்: அகில பாரத செயற்குழு உறுப்பினர்,
ஆர்.எஸ்.எஸ்
தமிழில்: மருத்துவர் சுபா