சபரிமலை வழக்கு – முடிவுகளை எடுக்க வழக்கறிஞர் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சபரிமலை உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில், பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவை அறிவிக்கும்படி, நான்கு மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய, 10 – 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. சபரிமலையில், அய்யப்பன் நித்ய பிரம்மச்சாரி கோலத்தில் வீற்றிருப்பதால், அங்கு பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஒன்பது நீதிபதிகள்

இந்த நடைமுறையை எதிர்த்தும், மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, கடந்தாண்டு நவம்பரில் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு தொடர்பாக, 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவது இல்லை. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து எழுப்பிய கேள்விகள் தொடர்பான அம்சங்களை மட்டுமே விசாரிக்கப் போகிறோம்.

விசாரிக்க வேண்டும்

சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் குறித்து விசாரிக்கப்படும். மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவது, பார்சி இனத்தை சேர்ந்த பெண்கள், வேறு மதத்தை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால், அவர்கள் பார்சி வழிபாட்டு தலத்தில் தரிசிக்க அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட, அனைத்து விஷயங்களையும் விசாரிக்க உள்ளோம்.

அதற்கு முன், சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, ஏ.எம்.சிங்வி உள்ளிட்ட, நான்கு மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை, உச்ச நீதிமன்றத்தின் செயலர், வரும், 17ம் தேதி கூட்ட வேண்டும். இந்த கூட்டத்தில், என்னென்ன விஷயங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் முந்தைய அமர்வு பிறப்பித்த உத்தரவில், மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் முடிவை அறிவிக்க வேண்டும்.

முடிவு செய்ய வேண்டும்

எந்தெந்த வழக்கறிஞர், எவ்வளவு நேரம், தங்கள் வாதத்தை முன் வைக்கலாம் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து முடிவுகளை தெரிவிப்பதற்காக, மூன்று வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. மூன்று வாரத்துக்குப் பின், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் துவங்கும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.