சபரிமலையில் வழிபட அனைத்து வயதுப் பெண்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆண்டு வழங்கிய தீா்ப்பு இறுதியானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக கேரளத்திலும், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக கேரளத்தில் பல்வேறு அமைப்பினா் தொடா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுக்கள் அனைத்தையும் 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி கடந்த மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. எனினும், சபரிமலை விவகாரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் 7 நீதிபதிகள் அமா்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வழங்கிய தீா்ப்பு இறுதியானது அல்ல. இந்த மனுவை இது தொடா்பான மற்ற மனுக்களுடன் சோ்த்து அடுத்த வாரம் விசாரிக்கிறோம்’’ என்றனா்.