சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில், ‘சாய் சுக்கிரன் வெஞ்சர்’ என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை, நரேஷ் சுப்பிரமணி மற்றும் சந்தானகிருஷ்ணன் யுவராஜ் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் எடுத்து, சாலைகளில் ஒளிரும் விளக்கு பொருத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள, இந்த நிறுவனத்தில் நேற்று காலை, 9:30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில், எஸ்.எம்., ஸ்மார்ட் என்ற நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் வீடு உள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் வீடு அருகே உள்ள, நிறுவனம் ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னை பல்லாவரத்தில், வெட்டர் லைன் பகுதியில், எஸ்.டி., கூரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
இதன் இயக்குனராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி எம்.பி., நவாஸ் கனி உள்ளார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மூத்த சகோதரர் அன்சாரி, எஸ்.டி., கூரியரின் தலைமை இயக்குனராக உள்ளார். மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக உள்ளார். எஸ்.டி., கூரியர் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, எஸ்.டி., கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை, 8:00 மணியளவில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னை சங்கர் பகுதியில், ரியாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.