தஞ்சை பெரியகோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரும் சிலர், அதற்காக முன் வைக்கும் வாதங்கள்:
* பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் தமிழ் முறைப்படித் தான் கோவிலை கட்டினார்
* முதல் குடமுழுக்கும், அதன் பின் பல நுாற்றாண்டுகளாக தமிழ் முறைப்படி தான் அர்ச்சனைகள், பூஜைகள் முதலியன நடைபெற்று வந்தன
* பெரிய கோவில் கல்வெட்டுகள், தமிழ் முறைப்படி பூஜைகள் நடைபெற்று வந்தமையை ஆவணப்படுத்தியுள்ளன. இவை மூன்றுமே பொய்யான வாதங்கள். அவற்றிற்கான எந்த ஆதாரத்தையும், இவர்களால் காட்ட முடியவில்லை. இவர்களிடம் எந்தப் புராதன தமிழ் மந்திரங்களும், தமிழ் ஆகமங்களும் இல்லை.இவர்களாக தற்போது இட்டுக் கட்டிய வசனங்களும், அவர்களாக சுயமாக தொகுத்த பாடல்களுமே உள்ளன.
இவ்வாறு செய்யலாம் என, ஒரே ஒரு மகான் கூட அனுமதி கொடுக்கவில்லை. இவையெல்லாம் பக்தர்களை ஏமாற்றும் செயல்கள்.மேலும், தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் விதிகள், 8 மற்றும் 9ன் படி, 1947ம் ஆண்டு கோவில்களில் என்ன பூஜை முறைகள் இருந்தனவோ, அவற்றை மாற்றி அமைக்கவோ, கூட்டவோ, குறைக்கவோ, புதிதாக ஒன்றைச் சேர்க்கவோ இயலாது.
கடந்த, 1991ம் ஆண்டு, மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம், பிரிவுகள் 3 மற்றும் 4ன் படி, 15.08.1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தில் எந்த சம்பிரதாயம் பின்பற்றி வரப்பட்டதோ அதை மாற்ற, நீதிமன்றம் உள்ளிட்ட எவருக்கும், அதிகாரம் கிடையாது. அவ்வாறு மாற்றினால், பிரிவு 6ன் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி வழக்கு அமர்வு, இதை விரிவாக தெளிவுபடுத்தி உள்ளது. புதிது புதிதாக மத விஷயங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பிரச்னைகளை உருவாக்கி நீதிமன்றம் செல்வதை, இந்த சட்டம் உறுதியாக தடை செய்கிறது.
ஆகவே, தமிழ்நாடு கோவில் நுழைவு சட்டப்படியும், மத்திய வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படியும், அந்த சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் ஆணித்தரமான தீர்ப்பின் படியும்; ஆதிசைவ தமிழர்களின் பழைய வழிபாட்டு முறையை அழிப்பதையே குறியாக கொண்டிருக்கும், நாத்திகர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பிறரும் சேர்ந்து உருவாக்கியுள்ள (மேலே நோட்டீசை பார்க்கவும்) தமிழின் வேடம் பூண்ட, ‘புதிய முறை குடமுழுக்கு’ நிராகரிக்கத்தக்கது.