சங்கத் தொடர்பால் உருவான நல்லதொரு குடும்ப சூழ்நிலை

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரணமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த சுராகி என்ற சு. ராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

சுப்ராயலு – யசோதா தம்பதியருக்கு மகனாக, 1951 ஜூலை மாதம் இரண்டாம் தேதி திருவொற்றியூரில் பிறந்தார் சு. ராதாகிருஷ்ணன் அவர்கள். அவருடன் பிறந்தவர்கள் ஒரு தங்கை மற்றும் நான்கு தம்பிகள். தந்தை திருவொற்றியூரில் உள்ள “விம்கோ”வில் வேலை செய்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை, திருவொற்றியூரில் உள்ள வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அதற்குமேல் படிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் பின்னாளில் அக்கவுண்டன்சி, டைப்ரைட்டிங் தன் சுய சம்பாதியத்தால் கற்றார். அதன்பின் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால், மதுரை பல்கலைகழகத்தில் தபால் மூலம் மூலம் புலவர் படித்தார். காலப்போக்கில் கவிதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார்.
சங்கத்தில் எங்கு முகாம் நடந்தாலும், சமையல் பொறுப்பை கவனித்துவந்த விம்கோ ராதா ஜியின் தம்பி ராமமூர்த்தி ஜி, சுராகி ஜியின் பள்ளித்தோழர். அவரது அழைப்பின் பேரில், திருவொற்றியூர் போர்டு ஹைஸ்கூல் மைதானத்தில் விளையாடச் சென்றார். அப்போது அது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்று அவருக்குத் தெரியாது. இவ்வாறு தான் சங்க அறிமுகம் கிடைத்தது.
சுராகி ஜி தந்தையின் குடிப்பழக்கத்தாலும், சூதாட்டத்தாலும் குடும்பம் வறுமைக்கு ஆளானது. பிள்ளைகளை சரியாக கவனிக்காததால், குழந்தைகள் பழக்கவழக்கங்கள் சரியில்லாமல் போனது. 1965ல், சங்கத்தில் சேர்ந்த பிறகுதான், சுராகி ஜியின் பழக்கவழக்கங்கள் மாறியது. அப்போது மணிஜி என்று அழைக்கப்படுகின்ற K.P. சுப்ரமண்யம் அவர்கள், திருவொற்றியூர் ஷாகாவின் முக்கிய சிக்ஷக்.
அவர்தான் சுராகி ஜியின் வீட்டுக்குச் சென்று, குடும்பத்தாரிடம் பேசி, உங்களது மகன் இங்கிருந்தால் கெட்டு விடுவார், பக்கத்தில் உள்ள தெருவில் வீடு பார்த்துத் தருகிறேன், அங்கு செல்லுங்கள் என்று சொல்லி, அவரே வீடு பார்த்துத் தந்தார். சுராகி ஜியின் படிப்பிற்கான உதவிகளையும் செய்தார். இதனால் சூழ்நிலை மாறி, நல்ல பழக்கவழக்கங்கள் கிடைத்தது.
1966ல், ஒரு தடவை கோபால்ஜி திருவொற்றியூர் ஷாகாவிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்காரர், சங்க ஷாகாவில் கோபால்ஜி பேசிக் கொண்டிருந்தபோது, கல் எறிந்துவிட்டுப் போனார். அதைப் பார்த்த சுராகி ஜி உடனே எழுந்து, தன் நண்பர்கள் 10 பேரை அழைத்து வந்து, கல் எறிந்த கம்யூனிஸ்ட்காரர் வீட்டின் மீது கற்களை எறிந்து, தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அவரது வேகத்தைக் கண்ட கோபால்ஜி வெகுவாகப் பாராட்டினார்.
1967ல், கேராளாவில் உள்ள கோழிக்கோட்டில் நடைபெறும் ஜனசங்க மாநாட்டிற்கு சுராகியை அனுப்புங்கள். அவர் அரசியலுக்கு பயன்படுவார் என்று கோபால்ஜி சொன்னதன் அடிப்படையில், 1967ல் ஜனசங்க மாநாட்டுக்கு சென்று வந்தார். அந்த நிகழ்ச்சியில்தான் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்தியாயா ஜி, அகிலபாரதத் தலைவரானார்.
1970ல், முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை சென்னை கோடம்பாக்கத்தில் முடித்தார். 1984ல், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை இராஜபாளையத்தில் முடித்தார். 1973ல், சங்கப் பிரச்சாரக்காக (முழுநேர ஊழியராக) செங்கல்பட்டு மாவட்டத்தை கவனித்தார். 1975ல், எமர்ஜென்சி நேரத்தில் சங்கத்தின் அகில பாரதிய காரிய கமிட்டியை திருவொற்றியூரில் நடத்த முடிவெடுத்தது. அந்த காரிய கமிட்டி நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் மணி ஜி, கோட்டூர் ஜெயராமன் ஜி, விம்கோ ராதா ஜி, செல்வராஜ் ஜி, சுராகி ஜி அங்கம் வகித்தனர். எமர்ஜென்சி காலத்தில் காவல்துறையிடம் கைதாகாமல் இருக்க மணி ஜி, சு. ராதாகிருஷ்ணன் பெயரை சுராகி என சுருக்கினார்.
எமர்ஜென்சி நேரத்தில் ஒரு நாள் வீட்டிற்கு வந்து, அனைவரையும் பார்த்துவிட்டு, நேரமானதால், வீட்டிலேயே படுத்து விட்டார் சுராகி ஜி. அன்றைக்கு காவல்துறை அதிகாரிகள் இரவு 1 மணிக்கு வந்து, அவரை எழுப்பி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிறகு வேலூர் சிறைக்கு மாற்றி, 62 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கோபால்ஜியின் வழிகாட்டுதலில், சம்பத்குமார் ஜியின் வாதத்தால், சுராகி ஜி விடுதலை செய்யப்பட்டார். பின்னர் திருவொற்றியூரில் உள்ள “விம்கோ”வில் வேலைக்குச் சேர்ந்தார்.
1983ல், விம்கோ தொழிற்சங்கத்தில் பணியாற்றினார். பாரதிய ஜனதாவிற்கு தொழிற்சங்க அமைப்பு ஏற்படுத்த ஜனா கிருஷ்ணமூர்த்தி ஜி விரும்பினார். அப்போது வில்லிவாக்கம் ராமகிருஷ்ணன் அவர்களோடு இணைந்து, தமிழகம் முழுவதும் பாரதிய லேபர் யூனியன் (BLU) துவங்க சுராகி ஜி உதவினார். அசோக் லைலண்ட, விம்கோவில், பாரதிய லேபர் யூனியன் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பாரதிய ஜனதாவில் மாவட்ட அமைப்பாளர், மாநில செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுக்குழு உறுப்பினர், எஸ்.சி அணியின் மாநிலத் துணைத் தலைவர், கலை, இலக்கிய அணியின் மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். மெட்ரோ ரயில், விம்கோ வரை நீட்டிக்க சங்கத்துடன் இணைந்து பணியாற்றி உள்ளார். பட்டி மன்றங்களிலும், கவியரங்கிலும் தொடர்ந்து கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இவரது கவிதைகள் சென்னை வானொலியில் ஒளிபரப்பப்பட்டது. ஒரே நாடு, விஜயபாரதம் ஏடுகளில் அவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து சங்கத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
1979ல், சுசிலா அவர்களை திருமணம் செய்தார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ரகுராமன் ஐ.டி துறையில் வேலை பார்க்கிறார். இன்னொரு மகன் விஜயராகவன் கத்தாரில் பொறியில் என்ஜினியராக வேலை செய்கிறார். இருவருக்கும் சங்கத் தொடர்பு உண்டு.
சங்கத் தொடர்பால் நல்ல பழக்கத்திற்கு மாறி, தனது குடும்பத்தையும் மாற்றி, சமுதாயத்தில் நல்லதொரு நிலைக்கு வந்த சுராகி ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார். 

கட்டுரையாளர் : அ.ஓம்பிரகாஷ்