நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், ஊரடங்கு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் போன்றவற்றால் நோய் பரவலின் வேகம் கட்டுப்பாட்டில் உள்ளது. புதிதாக நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் குறைவாக 15 நாட்களாக தொடர்கிறது.
மக்கள் தங்களின் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக உள்ளனர். நோய்த் தொற்று குறைந்துள்ளதே தவிர முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட வில்லை. அதற்கென தடுப்பு மருந்து, கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி நிலையிலேயே தொடர்கிறது. நிரந்தரமான பக்கவிளைவுகள் அற்ற தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்வரையில் மக்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
* ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும்.
* வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசங்களை அணிந்து செல்லவேண்டும்.
* வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழையும் முன்பு கை, கால்களை சுத்தமாக கழுவவும்.
* பிறரிடம் இருந்து வாங்கும் எந்த பொருளையும் சில மணிநேரம் தனியாக வைத்திருந்து பின்னர் வீட்டில் தேவையான இடத்தில் வைக்கவும்.
* அலுவலகம், பணி நிமித்தம், வெளியில் சென்று வருபவர்கள் கண்டிப்பாக வீட்டிற்கு வந்ததும் குளிப்பது நல்லது.
* பொது இடங்கள், அலுவலகங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியோர்களை பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
இதுபோன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக நாம் பின்பற்றுவதோடு நமது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரையும் பின்பற்றச் செய்து கொரோனா பெரும் தொற்றிலிருந்து பாதுகாப்போம். சில காலத்திற்கு கட்டுண்டு இருப்போம்.