உ லகம் முழுவதிலும் வாழும் பாரதியர்கள் ஒரே நாளில் அல்லது தொடர்ந்து ஒரு வாரம் வரை கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளி. ஏழை பணக்காரன், ஜாதி வேறுபாடு ஏதுமின்றி பாரதியர் அனைவரும் ஒரே சமுதாயம் என்பதை உலகிற்கே அறிவிக்கும் ஒப்பற்ற பண்டிகை தீபாவளி. தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்கு தீபாவளிக்கு ஓரிரு மாதங்கள் முன்பே முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கி விடுவது நம் வழக்கம். அதே வேளையில் நமது சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் சில முக்கிய ஏற்பாடுகளை செய்து கொள்வோமே?
இனிப்பு வகைகள்
- தீபாவளி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பு. பல வர்ணங்களில் பல வகையான இனிப்பு வகைகள் நம் கண் முன்னே, எதனை சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்ற குழப்பத்தினை ஏற்படுத்துவது வழக்கம். மிக அதிக அளவில் பரம்பரை ரீதியாக பாரதியர்கள் நீரிழிவு பிரச்சினைகளை உடையவர்கள், எனவே இதனை கருத்தில் கொண்டு இனிப்பு வகைகளை அளவோடு ஏற்றுக் கொண்டு செயல்படுவது நல்லது.
- நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காகவும், நிறத்திற்காகவும், ருசிக்காகவும் சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களான ப்ரிசெர்வேட்டிவ் (Preservatives) கள் கலக்காத இனிப்பு வகைகளை தேர்வு செய்வது நல்லது. ஏனெனில் இவை நமது கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிப்பதோடு, ஆஸ்த்மாவுக்கும் புற்று நோய்க்கும் காரணமாகின்றன.
- வெள்ளி நிற சாயம் பூசப்பட்ட இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. அந்த சில்வர் ஃபாயில்கள் அலுமினியத்தின் அவதாரமே. அந்த அலுமினிய தாது நமது திசுக்களில் சேர்த்து வைக்கப்பட்டு மூளையையும் நரம்பு மண்டலத்தினை தாக்கும் வலிமை கொண்டது.
மது இல்லா சந்திப்புகள்:
மது இல்லா தீபாவளி, அது மகிழ்ச்சியான தீபாவளி. மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியைக் குதறிவிடும் மதுபானங்களை, அது பீராக இருந்தாலும் சரி, ஒயினாக இருந்தாலும் சரி தீபாவளி அன்று தவிர்த்து விட்டால் அதுதான் உண்மையிலேயே மகிழ்ச்சியான தீபாவளி.
தீபாவளி பரிசுகள்:
தீபாவளிக்கு முக்கியத்துவம் தருபவை பரிசுப் பொருள்கள். பொதுவாக அனைவரும் விரும்பி தரக்கூடிய பரிசுப்பொருள் “இனிப்பு” வகைகள். அவற்றை தேர்வு செய்யும் போது குறைந்த கலோரிகள் கொண்ட இனிப்பு வகைகள் அல்லது உலர்ந்த பழ வகைகள் (Dry fruits) பரிசாக அளிப்பது சிறந்தது. அவை நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும்.
பட்டாசு வெடிப்போம், பாதுகாப்பாக!
குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் விரும்பும் தீபாவளியில் பட்டாசுகளுக்கும் மத்தாப்புகளுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. எனவே நமக்கு ஆரோக்கியமான தீபாவளியாக பாதுகாப்பான தீபாவளியாக அமைந்திட சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் தலைவர் அமரர் டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் அவர்கள் கடந்த தீபாவளிகளில் வழங்கிய சில முக்கியமான ஆலோசனைகள்:
1.முதலில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற பட்டாசு வாங்கவும்.
2.அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள், நீங்கள் பற்ற வைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்திற்கு வேட்டு வைக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் அல்லது எதிர்பாராத நேரத்தில் வெடித்து ஆபத்தையும் ஏற்படுத்திவிடும். சீனப்பட்டாசுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
- ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பு கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசை பயன்படுத்தும் முறைகளைப் படித்து அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பட்டாசையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால், கண் உள்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.
- தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்குகள், குடிசைப் பகுதிகள் போன்ற இடங்களிலும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது அவை தயாரிக்கப்படும் இடங்களிலும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்ப்போம். விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளிகளில் பட்டாசுகளை பயன்படுத்துவதே நல்லது. ராக்கெட்டுகளை குடியிருப்புப் பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.
- தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல ஒருவேளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால், உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
- ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்திற்கு காரணமாகலாம்.
- நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானால், ஒரு போதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
- குழந்தைகள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.
- நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து அந்த பட்டாசை ஒரு பக்கெட் தண்ணீரினுள் நன்றாக மூழ்க வைத்து செயலிழக்கச் செய்யவேண்டும். புஸ்வாணம் பற்றவில்லை என்றால் கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.
- பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ஸ்டாக் பண்ணி வைப்பது ஆபத்தானது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில், குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.
- நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்தலாம். மேற்சொன்னவாறு செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சில முதலுதவிக் குறிப்புகள்
- எதிர்பாராதவிதமாக பட்டாசால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால், உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. தீக்காயம் பட்ட இடத்தைச் சுத்தமான துணியினால் சுற்றி, உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
- வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி, உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
- தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்து வீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்ப்படும்.
- குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு, பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.
- ஒருவேளை நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் தீப்பிடித்து விட்டால், ஓடாதீர்கள், அந்த ஆடைகளை தீயை அணைப்பதற்காக உதறாதீர்கள். அது தீ மேலும் பரவ ஆபத்தை அதிகரித்து விடும். உடனே தரையில் உருண்டு படுப்பது தான் சிறந்தது.
தவிர்க்க வேண்டிய தவறுகள்:
பல நேரங்களில் பட்டாசு / தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில், எதையாவது செய்து கண் உள்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையையும் செய்துவிடுவதும் கூடாது; மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.
- பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிறந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை. உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
- கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கண்களைக் கசக்குவதனால் ரத்தம் அதிகமாக வெளியேறலா; அல்லது காயத்தின் வீரியம் அதிகரிக்கலாம்.
- ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சோதர உணர்வு
சக மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகவே, சோதர உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே, சநாதன தர்மத்தில் பண்டிகைகள் கொண்டாடுகிறோம். சோதர உணர்வை எப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம்?
பட்டாசுத் தொழிலை நம்பி உழைக்கும் தொழிலாளர்கள் பலர். அவர்கள் உழைப்பிற்கு அங்கீகாரமாக சிறிதளவேனும் பட்டாசு வாங்குங்கள். (சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விகள் தயவு செய்து இங்கே வேண்டாம். ஒரு நாள் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் வெளியிடும் கார்பண்-டை- ஆக்ஸைடை விட தீபாவளி அன்று வெளியாகும் புகை அதிகமில்லை).
தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாட முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு உங்கள் அன்பை, சோதர உணர்வை தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு இனிப்புகள், பட்டாசு ஆடை அன்பளிப்பாக வழங்குங்கள்.
முடியுமேயானல், தீபாவளிக்கு முதல் நாளே ஆதரவற்றோர் இல்லம் / முதியோர் இல்லம் சென்று, உங்கள் சோதர உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறு பரிசுகளை வழங்கலாம், அல்லது சிறிது நேரம் அவர்களோடு பேசி, விளையாடிக் கொண்டிருந்துவிட்டு விட்டு வாருங்கள்.
தீபாவளி உண்மையிலேயே ஆனந்தமான தீபாவளியாகி விடும்.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்படுவது உடல் நலத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பாதித்து விடும். ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைவரும் விரும்புவது! பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்! அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கட்டுரையாளர்: முனைவர் அ போ இருங்கோவேள், மேலாளர் – மருத்துவ சமூகவியல், சங்கர நேத்ராலயா, சென்னை.