குல்பூஷண் ஜாதவ் வழக்கை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் உறுதி

கடந்த, 2016ம் ஆண்டு, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும் கூறி, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை, பாக்., ராணுவம் கைது செய்தது. அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பும் வழங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தடை விதித்தது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது.

இதற்கிடையே, குல்பூஷணை விடுவிக்காவிட்டால், சர்வதேச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப் போவதாக, இந்திய தரப்பு வழக்கறிஞர், ஹரீஷ் சால்வே சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாக்., வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆயிஷா பரூக்கி நேற்று கூறியதாவது:ஜாதவ் வழக்கில், இந்திய வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையைகவனித்தோம். பாகிஸ்தான் அரசு, சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க மறுப்பதாக, அவர் வெளியிட்ட தவறான மற்றும் ஆதாரமற்ற கூற்றை, நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பாகிஸ்தான் முழுமையாக இணங்கி உள்ளது. தீர்ப்பின்படி, இந்திய துாதரகம், குல்பூஷண் ஜாதவை அணுக அனுமதிக்கப்பட்டது. மேலும், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.