குறுகிய காலத்தில் கனி தரும் நறும்பலா

இளவேனில் காலத்தில் மாம்பழங்களும் பலாக்கனிகளும் குவிகின்றன. முக்கனிகளில் இடம்பெற்றுள்ள  மா, பலா, வாழை ஆகியவற்றில் வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. பலாப்பழம்தான் கனிகளிலேயே பெரியது. குடக்கனி என்று இது குறிப்பிடப்படுகிறது.

இந்தியா, மியான்மர், இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா, உள்ளிட்ட நாடுகளில் பலா கணிசமான அளவில் விளைகிறது. பலாமரம் பெரும்பாலும் வீட்டுத்தோட்டங்களிலும் வெற்றிலை, காபி, மிளகு, ஏலக்காய் தோப்புகளில் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது.

பலாவில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. கூலன்பழம், வருக்கன்பழம், சக்கப்பழம் போன்றவை பிரதான வகைகளாக உள்ளன. நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் பலாமரம் நன்கு வளரும். பலாமரம் 20 மீட்டர் உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. பலா இலைகள் பசுமையான நீள்கோள வடிவத்தில் இருக்கும். பொதுவாக பலாமரம் மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டில் காய்ப்புக்கு வரும். காம்பை அறுத்து பழத்தைப் பறிக்கும் போது பால் சிந்தினால் அது நன்கு முற்றாத பலாக்காய் என அறியலாம். பலாக்காய் நன்கு முற்றிவிட்டால் அதிகமாக பால் சிந்தாது. பலாக்கனி சுமார்
50 கிலோ எடை வரை இருக்கும்.

பலாக்கனி மட்டுமல்லாமல் பலாக்காயும் பயன்மிக்கதே. இலங்கையில் பலாப்பிஞ்சுக்கறி மிகவும் பிரசித்தி பெற்றது. பலாக்காய் குழம்பு சுவையிலும் சத்திலும் ஏறத்தாழ இறைச்சிக்குழம்பு போல உள்ளது. பலா கொட்டையும் பக்குவப்படுத்தி உண்ணப்படுகிறது.  சில இடங்களில் பலாப் பூக்களைக்கூட சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். பலா பிரியாணியும் நுகர்வோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. கேரளாவின் தலைசிறந்த பண்டிகையான ஓணத்தின்போது சக்கப்பிரதமன் எனப்படும் பலாப்பழப் பாயாசம் கட்டாயம் இடம்பெறும்.

பலாச்சுளை பல்வேறு வைட்டமின் சத்துக்களைக் கொண்டது. ரத்த அழுத்தத்தை தணிக்க பலாச்சுளை பெரிதும் உதவுகிறது. வைட்டமின் சி கணிசமான அளவில் உள்ளதால் பலா மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் உண்டாகாமல் காக்கிறது.

கேரளாவில் நேந்தரம் சிப்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. இதற்கு நிகராக பலாசிப்ஸும் அண்மைக்காலத்தில் பிரபலமாகி வருகிறது. பலா சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உள்நாட்டுச் சந்தையில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு அங்காடியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பலாப்பழ ஜாம் போன்றவை இளந்தலைமுறையினரை ஈர்த்து வருகிறன.

தமிழ்நாட்டில் கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் பலா பெருமளவு விளைகிறது. கேரளாவில் திருச்சூர் அருகே குருமல்குன்னூ என்ற இடத்தில் வர்க்கீஸ் தாரகன் என்ற விவசாயி பலாசாகுபடியில் ஈடுபட்டுள்ளார். அவர் உருவாக்கியுள்ள ஆயுர் பலா பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பலா இரண்டு ஆண்டுகளுக்குள் கனி தரத் துவங்கிவிடும். இதை வீட்டு மொட்டை மாடியிலேயே வளர்க்கலாம். டிரம்மில் மண்ணைக்கொட்டி அதில் பலாவை வளர்க்கலாம். ஆயுர்பலா ஏழு அல்லது எட்டு அடி உயரம்தான் வளர்கிறது. மற்ற பலா வகைகளைவிட ஆயுர்பலா சத்திலும் சுவையிலும் சிறப்பு வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் கூட வர்க்கீஸ் தாரகனின் ஆயுர்பலா பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *