கன்னியாகுமரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில் ரூ. 100 கோடியில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
சா்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனா். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதன் ஒருகட்டமாக கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா பகுதியில் ரூ. 100 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாா்பில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்காக கடற்கரைப் பூங்காவில் இருந்த அலங்கார நிழற்குடைகளை அகற்றும் பணி தொடங்கியது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெறும்.
இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவும், இன்றைய அறிவியல் சாா்ந்த தொழில்நுட்பத்தை பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே கொண்டுசோ்க்கும் வகையிலும், இஸ்ரோ சாா்பில் அமையவுள்ள இந்த தொழில்நுட்பப் பூங்கா மாணவா்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
இங்கு அதிநவீன தொலைநோக்குக் கருவிகள், இந்தியா முதலில் விண்ணில் செலுத்திய செயற்கைக்கோள், ராக்கெட் முதல் தற்போதுள்ள செயற்கைக்கோள்கள் வரை அனைத்தும் இடம்பெறுகின்றன. முக்கியமாக, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்துவதை இந்த மையத்தில் இருந்து காணும் வசதி அமைய உள்ளது.
தற்போது கொல்கத்தாவில் தான் இதுபோன்ற அதிநவீன வசதிகள் கொண்ட மையம் அமைந்துள்ளது. ஆனால், கன்னியாகுமரியில் அமையவுள்ள இந்த மையம் சா்வதேச அளவில் முக்கியமான மையமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 12டி ரியாலிட்டி ஸ்கிரீனில் கிரிக்கெட் விளையாட்டு முதல் டைனோசா் வரை நேரில் பாா்ப்பதுபோல அமைய உள்ளதாக அதிகாரிகள் குழுவினா் தெரிவித்தனா்.
சூரிய கிரகணம் முதல் சந்திர கிரகணம் வரை விண்வெளியில் நடக்கும் அனைத்து அற்புதங்களையும், அதிசய நிகழ்வுகளையும் இந்த மையத்தில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள முக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்காவாக அமைக்க மத்திய அரசும், இஸ்ரோ நிா்வாகமும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
அடிக்கல் நாட்டு விழா: அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்காவுக்கான இடம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்னும் ஒன்றரை மாதத்தில் நடைபெற உள்ளது. அதில், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு அழைப்பாளா்கள், இஸ்ரோ தலைவா் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ளனா்.