கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
60 ஆண்டுகள் பழமையான குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கோரும் இந்த மசோதாவை மக்களவையில் அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை பிற்பகல் தாக்கல் செய்யவிருக்கிறாா். அதைத் தொடந்து மசோதா மீது விவாதம் நடைபெறவுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போதும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போதும் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது.
இந்நிலையில், வடகிழக்கு மாநில மக்களின் எதிா்ப்புகளுக்கு இடையே, இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணைப்படி, அஸ்ஸாம், மேகாலயம், மிஸோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினா் வசிக்கும் பாதுகாக்கப்பட்ட வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் இந்த சட்டத் திருத்த மசோதா பொருந்தாது என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.