கிராமங்கள் செழிக்க சுய உதவிக் குழுக்கள்

வீடியோ கான்பரன்ஸ் முறையில் நான்கு லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1,625 கோடி ரூபாய் உதவிகளை வெளியிட்ட பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. பெண்களின் சக்தியை இதற்கு முன்பான இருந்த அரசுகள் சரியாக அங்கீகரிக்கவில்லை. தற்போது வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு என பெண்களுக்கு பல்வேறு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுதும் 70 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில் 8 லட்சம் பேர் இணைந்துள்ளனர்’ என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டம் என். பஞ்சம்பட்டி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் பாலிதீன் மறுசுழற்சியில் ஈடுபட்டுள்ள மகளிர் கூட்டமைப்பை சேர்ந்த ஜெயந்தி குழுவினரும் பங்கேற்றனர். 1 கிலோ பாலிதீன் கழிவுகளை ஐந்து ரூபாய்க்கு வாங்கி மதிப்பு கூட்டுப் பொருட்களாக உற்பத்தி செய்வது, 32 டன் பாலிதீன் கழிவுகளை சேகரித்து, அரசின் தார் ரோடு பணிக்கு கொடுத்தது உள்ளிட்ட தங்களது பணி குறித்த கருத்தை பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு தமிழில் ‘வணக்கம்’ என கூறி ‘வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வருமான நோக்கு மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த அக்கறையுடன் பணியை மேற்கொள்வதற்கு பாராட்டுகள்’ மோடி வாழ்த்திப் பேசினார்.