ஆக.,5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து காஷ்மீரில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தற்போது காஷ்மீரில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டன. இயல்பு நிலை திரும்பி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் நிறுத்தப்பட்டிருந்த மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகளும் மீண்டும் துவங்கப்பட்டன.
நிறுத்தப்பட்ட போஸ்ட்பெய்டு மொபைல் சேவை இன்று (அக்.,14) பகல் 12 மணி முதல் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 10 மாவட்டங்களிலும் இச்சேவை இன்று மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக காஷ்மீர் தலைமைச் செயலாளர் ரோஹித் கன்சல் அறிவித்திருந்தார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் பரூக் கான், தற்போது காஷ்மீர், முழுவதுமாக இந்திய அரசியலமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் வசிக்கும் அனைத்து சிறுபான்மையின மக்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி அளிக்கப்பட்டு வரும் சிறுபான்மையினர் அந்தஸ்து, இனி காஷ்மீர் மக்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.