ஒன்றியப் பிரதேசமாக ஆக்கப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்துக்கு என்னவாகும்?
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் ஏற்கெனவே 107 தொகுதிகள் உள்ளன. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான தொகுதிகள் 24. தற்போது ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமாக ஆக்கப்பட்ட பின், மொத்த தொகுதிகளில் 7 அதிகரித்து 114 ஆகும். இதில் ஜம்மு பிரதேசத்துக்குக் கூடுதலாகத் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள். புதிய ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீருக்கே உரிய சட்டங்களின் நிலை?
ஜம்மு-காஷ்மீர் முன்பு சிறப்பு அந்தஸ்தை அனுபவித்தபோது அந்த மாநிலம் ராணுவம், வெளியுறவுத் துறை, தகவல்தொடர்பு, நாணயம் ஆகியவற்றைத் தவிர, மற்றவற்றுக்குத் தங்களுக்கே பிரத்யேகமான அரசமைப்பைக் கொண்டிருந்தது. இதனால், அது பல்வேறு சட்டங்களை உருவாக்கிவைத்திருந்தது. அப்படி இருப்பினும் காலப்போக்கில் மத்திய அரசின் சட்டங்களும் படிப்படியாக ஜம்மு-காஷ்மீரில் நுழைந்திருக்கின்றன. ஜிஎஸ்டி சமீபத்திய உதாரணம். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு, இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக அது பிரிக்கப்பட்டுவிட்ட பிறகு, அந்த மாநிலத்தில் இருந்த 153 சட்டங்கள் தற்போது நீக்கப்பட்டுவிட்டன. 166 சட்டங்கள் அப்படியே நீடிக்கின்றன. மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி இந்த ஒன்றியப் பிரதேசங்களில் செல்லுபடியாகும்.
ஜம்மு-காஷ்மீரின் அமைச்சரவை எப்படி இருக்கும்?
குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தின் அமைச்சரவைக் குழுவில் 24-க்கும் மேற்பட்டோர் இருக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், தற்போது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10%-க்கும் மேல் அமைச்சரவை உறுப்பினர்கள் இருக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில், இனி ஜம்மு-காஷ்மீரின் அமைச்சரவையில் 10 அமைச்சர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். அமைச்சரவைக் குழுவின் தலைவராக முதல்வர் இருப்பார். அவர் ஒன்றியப் பிரதேசத்தின் விவகாரங்கள் தொடர்பாகத் துணைநிலை ஆளுநருடன் ஆலோசனை கலப்பார். தற்போது ஆளுநராக இருக்கும் சத்ய பால் மாலிக்தான் ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநராக இருப்பார்.
தொகுதிகள் மறுவரையறை எப்போது செய்யப்படும்?
முந்தைய ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றம் தொகுதி வரையறையை 2031 வரை ஒத்திப்போட்டிருந்தது. ஆனால், தற்போது சட்டமன்றம் கலைக்கப்பட்டு, சட்டப் பிரிவு 370-ம் நீக்கப்பட்டுவிட்டதால், இன்னும் சில மாதங்களுக்குள் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று தெரிகிறது. தொகுதி மறுவரையமைப்புக் குழுவின் மூலம் இதனைத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில்தான் மாற்றமே தவிர மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை.
அலுவல் மொழி என்னவாக இருக்கும்?
சட்டமன்றம் தனது அலுவல் மொழியாக ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளையோ இந்தியையோ வைத்துக்கொள்ளலாம் என்று ஜம்மு-காஷ்மீர் மறுவரையமைப்புச் சட்டம் கூறுகிறது.
லடாக் என்னவாகும்?
லடாக் ஒன்றியப் பிரதேசமாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குச் சட்டமன்றம் கிடையாது. இதனால் அது தனது 4 சட்டமன்றத் தொகுதிகளையும் இழக்கும். ஆனால், அது தன் வசம் வைத்திருக்கும் ஒரு மக்களவைத் தொகுதியை இழக்காது.
வேறு என்ன நீக்கப்பட்டிருக்கிறது?
ஜம்மு-காஷ்மீரின் மேலவை நீக்கப்பட்டிருக்கிறது. இதில் 34 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் பதவியிழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
தனித்தொகுதிகளின் நிலை என்ன?
ஏற்கெனவே, பட்டியல் இனத்தவருக்கு ஒரு தனித்தொகுதி இருக்கிறது. தற்போது பழங்குடி இனத்தவருக்கு ஒரு தனித்தொகுதி ஒதுக்கப்படும்.
தனித்தொகுதிகளின் நிலை என்ன?
ஏற்கெனவே, பட்டியல் இனத்தவருக்கு ஒரு தனித்தொகுதி இருக்கிறது. தற்போது பழங்குடி இனத்தவருக்கு ஒரு தனித்தொகுதி ஒதுக்கப்படும்.
வேறு என்ன மாற்றங்கள்?
இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கும் தனித்தனி அரசுப் பணித் தேர்வாணையங்கள் இருக்கும். ஜம்மு-காஷ்மீரிடம் ஏற்கெனவே இருந்த அரசுப் பணித் தேர்வாணையம் அப்படியே இருக்கும். லடாக் மத்திய அரசுப் பணித் தேர்வாணையத்தின் கீழ் வரும்.
இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கும் தனித்தனி உயர் நீதிமன்றமா?
இல்லை. ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டுக்கும் பொதுவாக ஒரே உயர் நீதிமன்றம் இருக்கும். அதன் நீதிபதிகளும் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களுக்கும் பொதுவாக இருப்பார்கள்.