ஈஷா யோக நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த 2019ல் காவேரி கூக்குரல் இயக்கத்தை தொடங்கினார். இதில், விவசாய நிலங்களில் வழக்கமான பயிர்களுடன் சேர்த்து வரப்பு ஓரங்கள், பயிர்களுக்கிடையே என பல்வேறு வழிகளில் மரங்கள் வளர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. காவேரி கூக்குரல் இயக்கக் களப் பணியாளர்கள், தமிழகம் முழுதும் விவசாயிகளை சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருவதுடன், விவசாயிகளின் நிலங்களில் உள்ள மண்ணின் தன்மை, நீரின் தரத்தை பரிசோதித்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைக்கின்றனர். இம்மரங்கள் சில காலத்திற்குப் பிறகு விவசாயிகளுக்கு மற்றொரு வருமானம் அளிக்கும் வகையில் இருக்கும். இதனால் இந்த இயக்கம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து மரக்கன்றுகள் வினியோகம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இந்த நிதியாண்டில், தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதில், இதுவரை 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.