காமராஜர் வாங்கிய சொத்தை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு

தமிழக காங்., தலைவராக, காமராஜர் இருந்த போது, தமிழகம் முழுதும், கட்சி வளர்ச்சிக்காக, நிலங்களும், கட்டடங்களும் வாங்கப்பட்டன. சென்னை தேனாம்பேட்டை மைதானம், காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்திபவன் கட்டடம் என, தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், காங்., அறக்கட்டளை பெயரில் உள்ளன.திருவண்ணாமலை நகர காங்., கட்சிக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை, கடந்த மார்ச் மாதம், கட்சி நிர்வாகியின் உறவினருக்கு குத்தகை விடுவதற்குரிய ஒப்பந்தம், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு சாட்சியாக, 12 பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஒன்றரை ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலம் தனி நபர்களிடம் சிக்கி விட்டால், 99 ஆண்டுகளுக்கு அபகரிக்கும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காமராஜர் பேத்தியும், தமிழக காங்., மாநில செயலருமான கமலிகா, டில்லி காங்., தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: எந்த முன்னறிவிப்புமின்றி, ஒன்றரை ஏக்கர் நிலம் கையாடல் செய்யப்பட்ட தகவலை அறிந்து வருந்துகிறேன். இது தனிநபர் சொத்தோ, குடும்ப சொத்தோ கிடையாது. கடைக்கோடி தொண்டன் முதல், அரியணையில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும், இதில் உரிமை உள்ளது. கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் என்ன நடக்கிறது, எப்படி நிலம் கையாடல் செய்யப்பட்டது என்பதை அறிந்து, விரைந்து மீட்டு, அந்த நிலத்தை, கட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கமலிகா கூறியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று, டில்லியிலிருந்து காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு நிர்வாகி, கடந்த 8ம் தேதி, திருவண்ணாமலையில் நகர காங்கிரஸ் நிர்வாகிகளிடம், விசாரணை நடத்தினார். பின், அந்த சொத்து தொடர்பான குத்தகை ஒப்பந்தத்திற்கான பத்திரப்பதிவு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அந்த சொத்து மீட்கப்பட்டுள்ளது.