காசி தமிழ் சங்கமத்தில் நிதியமைச்சர்

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையிலும் தமிழகத்துக்கும் காசிக்கும் உள்ள பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்ட பல நெருங்கிய தொடர்புகளை வெளிப்படுத்தும் விதமாகவும் கடந்த 2022, நவம்பர் 19ம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். இதில் அமைச்சர்கள், அறிஞர்கள், பல்துறை பிரபலங்கள் என பலர் கலந்துகொள்கின்றனர்.அவ்வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனனும் இதில் கலந்துகொண்டார். வாரணாசியில் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்றிருக்கும் பகுதிகளான ஸ்ரீவிசாலாட்சி ஆலயம், ஸ்ரீகுமாரசாமி மடம், காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம், ஸ்ரீசக்கரலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சிவமடம் போன்ற இடங்களுக்கு நேற்று அவர் சென்றார். இதனுடன், ஹனுமான் காட் மற்றும் தசாஸ்வமேத் காட் உள்ளிட்ட நகரின் சில முக்கிய தொடர்ச்சிகளை பார்வையிட்ட அவர் கங்கை நதியில் படகு சவாரியும் செய்தார். மாலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.இன்று பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில், ‘கட்டடக்கலை மற்றும் இதர பாரம்பரிய வடிவங்கள்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் கலந்துகொள்ளும் நிர்மலா சீதாராமன், அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்கிறார். மேலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் நடைபெறும் கலாச்சார விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். காசி தமிழ்சங்கமம் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் 4 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் மத்திய நிதி அமைச்சரின் பயண நிகழ்வோடு இணைகின்றனர்.