கலியுக வரதன் பக்தி கலியுகத்தில் சங்கம சக்தி

தமிழ்கூறும் நல்லுலகில் முருக பக்தியின் சக்தியை திட்டவட்டமாக எடுத்து கூறும் வகையில் வருகின்ற ஜூன் 22 ஞாயிறன்று மதுரையில் முருக பக்தர்கள் லட்சக்கணக்கில்  திரள்கிறார்கள். மாநாட்டு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அந்த நன்னாளை பாரதமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

முருகன் அருள் நாடி காவடி, பாதயாத்திரை சஷ்டி விரதம் என பலவகையிலும் வழிபடுகின்ற பல கோடி முருக பக்தர்கள் கொண்ட பூமி இது. இங்கு முருகனின் அருளைப் பெற்றவர்கள் எத்தனையோ பேர். அதற்கு ஆதாரபூர்வமான சான்றுகளும் இருக்கின்றன.

அதில் மிகத் தெளிவான சான்றாக விளங்குவது பாம்பன் சுவாமிகள் (1848 – 1929) வரலாறு. அவர் முருகனை வழிபட்டு வந்த துறவி.

சென்னையில் 1927ம் ஆண்டு குதிரை வண்டி கால் மீது ஏறி சுவாமிகளின் கால் எலும்பு முறிந்தது. அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை (அப்போது பெரிய மருத்துவமனை என்பார்கள்) சேர்க்கப்பட்டார். ஆங்கிலேய மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு கால் குணமாகாது, அதனால் வெட்டி எடுக்க வேண்டும் என்று  கூறினார். அதற்கு சுவாமிகள், நாளை வரை பொறுத்திருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

அவரது பிரதம சீடரான சுப்ரமணிய தாஸர் குருவின் கால் குணமாக பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை தொடர்ந்து பாடி வந்த நிலையில், மருத்துவ மனையில் படுத்திருந்த சுவாமிகளிடம் எங்கிருந்தோ ஒரு மயில் பறந்துவந்து அமர்ந்தது. அவர் அருகில் சிறு குழந்தை தோன்றி மயிலிறகால் அவரது காலை வருடி மறைந்தது. அன்று இரவே அவரது கால் குணமானது.

மறுநாள் அந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து அதிசயித்து போனார். அவர் இது மருத்துவ உலகின் அதிசயம் என சான்றிதழ் தந்தார். சுவாமிகள் இருந்த மன்றோ வார்டில் அவரது படம், எக்ஸ்ரே  படங்கள், கிறிஸ்தவரான அந்த ஆங்கில மருத்துவர் தந்த கடிதம் ஆகியவை மாட்டப்பட்டு சமீப காலம் வரை பூஜைகள் நடந்து வந்தன.

இதுபோல் பல அற்புதங்கள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. முருக பக்தி என்பது தமிழகத்தில் நீக்கமற வியாபித்துள்ளதுடன் உலக அளவிலும் பக்தர்கள் கொண்டதாக விளங்குகிறது.

இத்தகைய நல்லோரான  பக்தர்கள்தான், தாங்கள் உயிரினும் மேலாகப் போற்றும் முருகப்பெருமானின் துதியான கந்தசஷ்டி கவசம் எனும் மந்திரப் பாடலை நாத்திக சமூக வலைதளக் குழு யூடுபுரூடஸ் கொச்சைப்படுத்திய போதும், முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்றும் அது வக்ஃப் வாரிய சொத்து என்றும் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி கூறிய்போதும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் பால்குடம் எடுத்து வேல் குத்தி வந்தவர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்காது பால் குடங்களை தரையில் சாய்த்தும் பக்தர்களை காவலர்களைக் கொண்டு அடித்து அவமதித்த போதும், தட்டிக்கேட்க விழிப்புணர்வு இன்றி கூனிக்குறுகி நின்றனர்.  பக்தி இருக்கும் அளவு ஒற்றுமை என்ற சக்தி இல்லாமல் இருக்கின்றனர்.

திருச்செந்தூர், பழனி என அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரையாக பல லட்சம் பேர் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு சுகாதார வசதியோ, பாதயாத்திரைக்கு தனி பாதையோ அவர்கள் ஒய்வு எடுப்பதற்கு இடவசதியோ இந்த அரசு ஏற்படுத்தித் தரவில்லை.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு சிறப்பு பேருந்து விடப்படுகிறது. ஆனால் அதில் கூட திருவிழா சிறப்பு பேருந்து என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு விசேஷ நாளிலும் சினிமா தியேட்டர் போல பிரேக் தரிசனம் என்ற பெயரில் ஆலயங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. சுவாமியை காட்சிப் பொருளாக்கி பக்தர்களிடம் பொருளாதார தீண்டாமையை திணிக்கிறது அரசு நிர்வாகம்.  கோயிலுக்குச் செல்ல ஊருக்குள் வாகனத்தில் வந்தால் நுழைவுக் கட்டணம். முகலாயர் ஆட்சியில் ஹிந்துவாக இருக்க ஜிசியா வரி போட்டது  போல நடக்கிறது. இதுவே வேற்று மதத்தினரிடம் நடக்கிறதா? இல்லையே? முஸ்லிம்கள் ஹஜ் செல்ல மக்கள் வரிப்பணத்தில் இருந்து பல ஆயிரம்  நிதி தருகிறது

தமிழ்நாடு அரசு. கடந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு வெளிச்சந்தையில்  கொள்முதல் செய்யப்பட்ட ரூ. ௧௮ கோடியே ௩௯ லடசத்து ௪௦ ஆயிரம் மதியுள்ள ௭,௯௨௦ டன் தரமான அரிசியை மசூதிக்கே நேரடியாக வழங்கியது. மேலும் ஒவ்வொரு ஆண்டும்  நாகூர் தர்காவின் சந்தனக்கூடு கந்தூரிக்கு ௪௧ டன் சந்தனக்கட்டைகளை வனத்துறையின் கிடங்கிலிருந்து இலவசமாக வழங்குகிறது.

இப்படி பலவிதங்களில் உதவிடும் அரசு அவர்கள் வழிபாட்டில் தலையிட முடியுமா? ஹிந்து வழிபாட்டில் சகட்டுமேனிக்கு தலையிடுகிறார்கள். ஹிந்துக்கள் பாரபட்சத்திற்கு உள்ளாகும் இந்த அவல நிலை மாற வேண்டும் என்பதை உணர்த்துகின்ற மாநாடு இது.

அறுபடை கண்காட்சி

பக்திப்பூர்வமாக மக்கள் வழிபட, முருக பக்தர்கள் முருகனின் அறுபடை வீடு சன்னிதிகளையும்  ஒரே இடத்தில் தரிசித்து பக்திப் பரவசமடைய   இக்கண்காட்சியில் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் கொண்டு வந்து வைக்கப்பட உள்ளது.

உணவு அரங்குகள்.

ஹிந்து விழிப்புணர்வு நூல் விற்பனை அரங்கம். முருகனின் அருள்பெற்ற 60 அருளாளர்கள் பற்றிய புகைப்பட தகவல் பலகை ஆகியன இடம்பெற இருக்கின்றன.

ஒவ்வொரு ஐந்தாண்டு இடைவெளியிலும் ஹிந்து முன்னணி மாநில மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த 2020ல் நடைபெறுவதாக இருந்த மாநாடு கொரோனா பெருந்தொற்றால் தடைபட்டது.

ஆகவே ஹிந்து முன்னணியின் 8வது மாநில  மாநாடு முருக பக்தர்கள் மாநாடாக நடந்திட இறைவன் திருவுளம் புரிந்துள்ளார்.  மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள அம்மா திடலில் மாநாடு ஜூன் 22ம் தேதி  மதியம் 3 மணிக்கு துவங்கி 8 மணியளவில்  நிறைவுபெறும். (இடம் மதுரை பைபாசில் உள்ளது) இதில் காவடி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், பாதயாத்திரையாக வரும் ஆன்மிக குழுக்கள் கலந்து கொள்கின்றன. நிகழ்ச்சியில் முருக பக்தியை வெளிக்காட்டும் அற்புதமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

மாநாட்டில் ஐந்து லட்சம் பக்தர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் கந்தசஷ்டி பாடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத், ஆந்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏகநாத் ஷிண்டே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் மலையை காக்க சில மணி நேர அறிவிப்பில் ஹிந்துக்கள் கலந்துகொண்ட உத்வேகமூட்டும் சம்பவம் போல  முருகனின் சக்தி முன்னிற்க, தமிழகத்தில் தங்கள் ஒற்றுமை உணர்வால் ஹிந்துக்கள் சக்தியை காட்டும் நாள் ஜூன் 22.  தமிழ்ச் சூழலில் அது ஒரு திருப்புமுனையாக அமைய இருக்கிறது.

தமிழகம் தேச பக்தி, தெய்வ பக்தி திகழும் பூமி. இதனை நிரூபிக்கும் வரலாற்றின் ஒரு மைல் கல் முருக பக்தர்கள் மாநாடு. இந்த சரித்திர நிகழ்வில் ஒவ்வொரு ஹிந்துவும் இணைகிறார் என்பதனைக் காட்ட அனைத்து சமூக சேவா, சமய நற்பணி பிரமுகர்களூம் மாநாட்டுக்கு அழைப்புப் பெறுகிறார்கள். அனைவரும் வாரீர்! ஜூன் 22ம் தேதி மதுரையில் சங்கமிப்போம்.

வீரவேல் அது வெற்றி வேல்

கட்டுரையாளர்: நூலாசிரியர்