கருத்தியல் நக்சல்களை களையெடுப்போம்!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற எண்பதாவது  சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி தனது உரையில், ‘அதிகார மையங்களில் நக்சல் சிந்தனை கொண்ட பலர் பல ஆண்டுகளாக உள்ளனர். முன்னர் அரசின் முக்கிய குழுக்களில் ஆலோசகர்களாக இருந்த அவர்களின் நக்சல் சிந்தனை அப்போதைய  அரசுகளின் கொள்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

‘வனப் பகுதிகளில் இருந்த ஆயுதம் ஏந்திய நக்சல்கள் ஒழித்து விட்டோம். ஆனால் நக்சல் மூளையுடன் நாட்டில் வன்முறை மற்றும் அமைதியின்மையை உருவாக்கும் வாய்ப்புகளை தேடுபவர்கள் இன்னும் உள்ளனர். நக்சல் சிந்தனை கொண்ட அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்,’ என்று குறிப்பிட்டார்.
இதற்கு அவர் பயன்படுத்திய வார்த்தை ‘திமாகி நக்சல்கள்’ (Dimagi Naxals) என்பது. தற்போது அந்தச் சொல்லாடல் விவாதப்பொருளாகி வருகிறது. திமாக் என்றால் ஹிந்தியில் அறிவு என அர்த்தமாகும். திமாகி நக்சல் என்றால் ‘அறிவுஜீவி நக்சல்’ என்பது பொருள். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நகர்ப்புற நக்சல்களை பிரதமர் பகடியாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கொதித்து எழுந்து உள்ளனர் சில முன்னாள் ஆட்சியாளர்களும் இந்நாள் பத்திரிகையாளர்களும்.
முன்னாள் நிதி அமைச்சரும் உள்துறை அமைச்சருமாக இருந்த ஒருவர், அப்படியானால் நானும் ஒரு திமாகி நக்சல்தான் என்று கூற, உண்மைதானே, தங்கள் ஒப்புதலுக்கு நன்றி என்று அவரின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். அவரைப் பின்பற்றி அப்படியானால் நான் 50 மடங்கு அதிகம் திமாகி நக்சல் என்று கூறிய பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்கும் அதே நிலைதான்.
ஆம், காடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களை விட அறிவுஜீவி நக்சல்கள் ஆபத்தானவர்கள்; வக்கிர சிந்தனையாளர்கள். இவர்கள் நாட்டுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். திமாகி நக்சல்கள் அடர்ந்த வனப்பகுதிகளிலோ, காடுகளிலோ வாழ்வது இல்லை, ஆயுதங்களை ஏந்துவது இல்லை. அவர்கள் நகரங்களில் பேராசிரியர்களாக, தன்னார்வலர்களாக, கவிஞர்களாக, எழுத்தாளர்களாக செயல்படுகிறார்கள். அதன்மூலமாக தங்களின் வன்முறை சித்தாந்தங்களை குறிப்பாக இளைஞர்களிடம் பரப்பி அவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்கள்.

இவர்களை அடையாளம் காண்பதும் எளிது. இந்திய வெறுப்பாளர்கள், ஹிந்து வெறுப்பாளர்கள், ஜிகாதி ஆதரவாளர்கள், பயங்கரவாதிகளுக்கு கருணை கோருபவர்கள், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான், சீனா, கனடா என்று எந்த நாட்டையும் ஆதரிக்கக் கூடியவர்கள் என்பது இவர்களின் முக்கிய குணாம்சங்கள். நாமும் இந்த உண்மையை புரிந்து கொண்டு நம் மாணவர்களை இளைஞர்களை இவர்களிடம் இருந்து காப்பாற்றுவோம். இவர்களை களை எடுப்போம்.