ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு, 2026 ஜுன் 21ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக இளம் தொழிலதிபர்கள் மற்றும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்களை ஒருங்கிணைத்து, ஒசூர் நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகிலபாரத சஹ சம்பர்க பிரமுக் ஸ்ரீ பரத் பூஷன் அரோரா சிறப்புரையாற்றினார். அவை:
அனைவருக்கும் சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள். தமிழகத்தில் வாழும் நாம், நமது நாட்டை உருவாக்கிய மகத்தான ஆன்மிக முன்னோடிகள் மற்றும் சான்றோர்களின் பங்களிப்பை நன்கு அறிந்திருக்கிறோம். திருவள்ளுவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், வித்யாரண்யர், ஸ்ரீ ரமண மகரிஷி, காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கள் வாழ்நாளையே சமூகத்திற்காக அர்ப்பணித்தனர்.
இத்தகைய மகான்களின் பங்களிப்பு இல்லாமல் உயர்ந்த பண்பாடு, ஒழுக்கம், மதிப்புகள் மற்றும் கலாச்சார பாரம்பரியமிக்க சமுதாயமாக நாம் உருவாகியிருக்க முடியாது. ஹோசூரை ஒரு எல்லை நகரமாக மட்டும் நாம் பார்க்கக்கூடாது. இது பண்பாடுகள் சந்திக்கும் இடம். இது பழமையான கோயில்களின் நகரமும், நவீன தொழில்துறையின் நகரமும் ஆகும்.
ஹோசூர் “பின்னிலிருந்து விமானம் வரை” உற்பத்தி செய்கிறது, மலர்களிலிருந்து நகைகள் வரை உற்பத்தி செய்கிறது. சந்திர சூடேஸ்வரர் கோயிலின் ஆன்மிகமும், சிப்காட் தொழிற்பேட்டையின் தொழில் வளர்ச்சியும் ஒருங்கே காணப்படும் இடம் ஹோசூர். பல வகைகளில், ஹோசூர் பாரதத்தின் பாரம்பரியத்தையும், எதிர்காலத்தையும் பிரதிபலிக்கிறது.
டாக்டர் ஹெட்கேவார் அவர்கள், சிறுவயதிலிருந்தே தேசபக்தர், மருத்துவப் பட்டம் பெற்றவர், காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்டவர், ஆனால் பாரதம் ஏன் அடிமையாகியது? என்ற கேள்வி அவரை எப்போதும் சிந்திக்க வைத்தது.
நமது நாடு வீரர்களின் தேசம். செல்வ வளமிக்க நாடு. உலக வர்த்தகத்தின் மையமாக இருந்த நாடு. 1750ல், உலக தொழில்துறை உற்பத்தியில் பாரதத்தின் பங்கு சுமார் 24.7 சதவீதமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் மொத்த பங்கு, அதைவிட குறைவாக இருந்தது.
ஜே.டி. சுந்தர்லாந்த் பாரதத்தை உலகின் மிகப்பெரிய தொழில் மற்றும் உற்பத்தி நாடாக வர்ணித்தார். வில் டுராண்ட் பாரதத்தை உலக நாகரிகத்தின் தாயாகக் குறிப்பிட்டார். நமது கிராமங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருந்தன. தரம்பால் எழுதிய “தி பியூட்டிஃபுல் ட்ரீ” இதனை எடுத்துக்காட்டுகிறது. அந்த காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் மட்டும், ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருந்ததாக சர் தாமஸ் மன்ரோ பதிவு செய்துள்ளார்.
நமது வரலாற்றில் ராணி ருத்ரமா தேவி, ராணி அப்பக்கா, கிட்டூர் சென்னம்மா, வேலு நாச்சியார், வீர பல்லாளர், முசுனூரி நாயக்கர், ராஜேந்திர சோழன், நரசராஜ உடையார், சத்ரபதி சிவாஜி போன்ற வீரர்கள் இருந்தனர். இவ்வளவு வளமும் வீரமும் இருந்தும் நாம் ஏன் அடிமையானோம். ஏனெனில் நாம் ஒன்றுபடவில்லை. நமது தேசிய உணர்வை மறந்தோம், சுயநலமும் பிரிவினைகளும் மேலோங்கின.
ஹிந்துத்துவம் என்பது மதவெறி அல்ல. அது இந்த நாட்டின் பண்பாட்டு அடையாளம் மற்றும் தேசிய உணர்வு. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தனித்துவம், அதன் பணி முறையில்தான் உள்ளது. சமூகத்தை ஒருங்கிணைத்து, மனிதர்களில் சில பண்புகளை வளர்க்க வேண்டும் என்று டாக்டர் ஹெட்கேவார் முடிவு செய்தார். அவை ஒழுக்கம்,தேசபக்தி, சிறிய வேறுபாடுகளைத் தாண்டி உயர்வது, தன்னலமற்ற சேவை.
கடந்த 100 ஆண்டுகளாக, சங்கம் தனது நோக்கத்திலிருந்து ஒருபோதும் விலகவில்லை. நாங்கள் எந்த ஒரு தனிநபருக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் பாரத மாதாவிற்கும், தேசிய பணிக்கும் அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இன்று சங்கம் தனது நூற்றாண்டு ஆண்டில் நுழைகிறது. 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினசரி ஷாகாக்கள், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாராந்திர மிலன்கள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதாந்திர மண்டலிகள் நடைபெறுகின்றன.
பி.எம்.எஸ், ஏ.பி.வி.பி, கிசான் சங்கம், வித்யா பாரதி, அதிவக்தா பரிஷத், என்.எம்.ஓ., விஞ்ஞான் பாரதி போன்ற பல அமைப்புகள் மூலம் ஸ்வயம்சேவகர்கள் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்றனர். சுமார் 10 கோடி மக்கள் சங்கத்தின் பல்வேறு பணிகளுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் 140 கோடி மக்களும், ஏழு லட்சம் கிராமங்களும் கொண்ட நாட்டில், இது போதுமானதல்ல. அதனால் ஒவ்வொரு ஊராட்சியிலும், ஷாகா உருவாக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
ராமர் கோயில் கட்டுமானம் போன்ற பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சங்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக பிறக்கவில்லை. நமது இலக்கு “பரம் வைபவம்”. பரம் வைபவம் என்பது வெறும் பொருளாதார வல்லரசாக மாறுவது அல்ல. உலகிற்கு வழிகாட்டும் விஸ்வகுருவாக மாறுவதாகும். நாம் விஸ்வகுருவாக இருந்தால் உலகிற்கு யோகாவை அளிப்போம், ஆயுர்வேதத்தை அளிப்போம், புத்தரையும், விவேகானந்தரையும் அளிப்போம், இல்லையெனில் உலகம் போர்களையும், மோதல்களையும் பெறும்.
“வசுதைவ குடும்பகம்” என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கும் பொறுப்பு பாரதத்திற்கே உள்ளது. ஆனால் இதனை சங்கம் மட்டும் செய்ய முடியாது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் முன்வர வேண்டும். இதற்காக “பஞ்ச பரிவர்த்தன்” என்ற ஐந்து மாற்றங்களை முன்வைத்துள்ளோம் – சமூக நல்லிணக்கம், குடும்பநலன் மேன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி உடன் கூடிய தன்னிறைவு மற்றும் குடிமகனின் கடமைகள்.
“ஈசா வாச்யமிதம் சர்வம்” “அஹம் பிரஹ்மாஸ்மி” “தத் த்வம் அசி”
இந்த வேத வாக்கியங்கள் அனைவரிலும் ஒரே தெய்வீகத்தை காணச் சொல்கின்றன.
திருக்குறள் கூறுகிறது:
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.”
பிறப்பு அல்ல, ஒழுக்கமே மனிதனின் உயர்வை நிர்ணயிக்கிறது.
சுற்றுச்சூழல்
இயற்கையை மதிக்கும் வாழ்க்கை முறையை, பாரதம் உலகிற்கு கற்றுக்கொடுத்தது. குறைத்துப் பயன்படுத்துதல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல், தேவையற்றவற்றை மறுத்தல், மாற்று வழிகளை ஏற்றுக்கொள்வது.
குடும்பம்
இன்று குடும்பங்களில் உரையாடல் குறைந்து வருகிறது. பெற்றோருக்கு நேரமில்லை, குழந்தைகள் கேட்கவில்லை. இதற்கு தீர்வு: ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் டிஜிட்டல் விரதம், டிஜிட்டல் சாதனங்களிலிருந்து விலகி குடும்பத்துடன் இணைவோம்.
சுதேசி
தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை அவசியம். தஞ்சாவூர் பெரிய கோயில், ஸ்ரீரங்கம், ஹம்பி, இரும்புத் தூண் போன்றவை நமது திறமையை எடுத்துக்காட்டுகின்றன. இன்று அரிதான கனிமங்கள், மின்னணு உற்பத்தி, மருந்து மூலப்பொருட்கள், சூரிய மின்சக்தி மற்றும் அரைமின் கடத்தி துறைகளில் தன்னிறைவு அவசியமாகியுள்ளது.
குடிமகனின் கடமைகள்
நேரம் தவறாமை, போக்குவரத்து ஒழுக்கம், வரிசையை மதித்தல், பெண்கள் மற்றும் மூத்தோர்களுக்கு மரியாதை, தூய்மை, தேசிய சின்னங்களுக்கு மரியாதை.
நாட்டின் வளர்ச்சியுடன் சேவையும் அவசியம். நாடு முழுவதும் லட்சக்கணக்கான சேவைத் திட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொருவரும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு இலவச சேவைகளை சமூகத்திற்காக செய்யலாம். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: “பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள்”. பசி மற்றும் அறியாமையில் வாழும் மக்களைப் புறக்கணிப்பவன் தனது கல்விக்கே துரோகம் செய்கிறான். முடிவாக, சுப்பிரமணிய பாரதியாரின் வந்தே மாதரம் பாடலிலிருந்து சில வரிகள்:
“வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”
“உடலும் பொருளும் ஆவியும் அனைத்தையும் தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்போம்”
“பாரத மாதா எங்களை ஆசீர்வதிக்கிறாள்
அவளது கரங்களில் வேதங்கள் இருக்கின்றன
அவளது பாதத்தில் சிங்கம் நிற்கிறது.
அவள் உலகிற்கு ஒளியையும் தர்மத்தையும் வழங்குகிறாள்”.
வந்தே மாதரம்… பாரத் மாதா கி ஜெய்…
(இந்த நிகழ்ச்சியில் வடதமிழக ஆர்.எஸ்.எஸ் தலைவர் குமாரசாமி ஜி, சேலம் கோட்டத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திரசேகர் ஜி, கிருஷ்ணகிரி ஜில்லா தலைவர் சங்கர்லால் ஜி, இணை தலைவர் பிரேம்நாத் ஜி, வடதமிழக ஆர்.எஸ்.எஸ் மக்கள் தொடர்பாளர் கல்யாண் ஜி, இணை மக்கள் தொடர்பாளர் பாஸ்கர் ஜி மற்றும் முக்கிய நபர்கள் பலரும் கலந்து
கொண்டனர்)