ஒவைசி பகிரங்க மிரட்டல்

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, கடந்த வியாழன் அன்று உத்தர பிரதேசம் கான்பூர் பேரணியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “நான் காவல்துறையிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். இதை நினைவில் கொள்ளுங்கள். யோகி ஆதித்தியநாத் என்றைக்கும் முதலமைச்சராக இருக்க மாட்டார். நரேந்திர மோடி என்றென்றும் பிரதமராக இருக்க மாட்டார். காலத்தின் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் அமைதியாக இருக்கிறோம், ஆனால் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காலம் மாறும். அப்போது உங்களை காப்பாற்ற யார் வருவார்கள்? யோகி தன் மடத்திற்கு சென்றுவிடுவார். மோடி இமயமலைக்கு சென்றுவிடுவார். அப்போது உங்களைக் காக்க யார் வருவார்கள்? நாங்கள் மறக்க மாட்டோம்” என்று காவல்துறைக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். ஒவைசியின் குடும்பம் இப்படி மிரட்டுவது இது முதல்முறை அல்ல. 2013ல் மேடையில் பேசுகையில், பதினைந்து நிமிடங்களுக்கு காவல்துறையை அகற்றிவைத்தால் ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் நாங்கள் பாடம் கற்பிப்போம் என்று இவரது சகோதரர் அக்பருதீன் ஓவைசி மிரட்டினார். ஒவைசி சகோதரர்கள் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை பல சந்தர்ப்பங்களில் பேசியுள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் உத்தரகாண்டில் நடந்த ஒரு மதக் கூட்டத்தில், சில பேச்சாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்துமாறு மக்களை அறிவுறுத்தினர். இதனையடுத்து ஒவைசியின் புகாரின் பேரில், உத்தரகாண்ட் காவல்துறையினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், ஒவைசி இப்படி பேசியதற்கு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.