எரிபொருளில் பசுமைப் புரட்சி – இது பாரதத்தின் நூற்றாண்டு

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை 2018ல், ஜெர்மனி அறிமுகப்படுத்தியது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப வரலாற்றில் அது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. புதைபடிவ எரிபொருட்களை சார்ந்த போக்குவரத்திலிருந்து சுத்தமான, கார்பன் வெளியீடு குறைந்த எதிர்காலத்தை நோக்கி உலகம் நகர வேண்டிய அவசியத்தை அந்த முயற்சி உலகிற்கு உணர்த்தியது.
2026ல், ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில், பிரதமர் மோடி தொடங்கி வைத்த பாரதத்தின் முதல் ஹைட்ரஜன் ரயில், அந்தப் பயணத்தின் அடுத்த கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒரு புதிய ரயில் சேவையின் தொடக்கம் மட்டுமல்ல; பாரத தொழில்நுட்பத்தின் தன்னம்பிக்கை, பசுமை ஆற்றல் மாற்றம் மற்றும் “ஆத்மநிர்பர் பாரத்” என்ற தொலைநோக்குப் பார்வையின் செயல்படுத்தப்பட்ட வடிவமாக பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியின் முதல் ஹைட்ரஜன் ரயில், இரண்டு பெட்டிகளுடன் சுமார் 300 பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டிருந்தது, தொழில்நுட்ப சோதனை மற்றும் முன்னோடி முயற்சியாக இருந்தது. ஆனால் பாரதம் உருவாக்கியிருப்பது, அன்றாட பொதுப் போக்குவரத்துக்கான ஒரு முழுமையான தீர்வாகும். 10 பெட்டிகளுடன், ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த ரயில், பாரதத்தின் மக்கள் அடர்த்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன “Proton Exchange Membrane Fuel Cell” (PEMFC) தொழில்நுட்பம், லித்தியம் பேட்டரிகள் மற்றும் சுமார் 2,400 கிலோவாட் (3,200 குதிரைத்திறன்) ஆற்றல் திறனுடன், மணிக்கு 75 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பது, பாரதப் பொறியியல் திறனின் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பலம், அதன் உள்நாட்டு தொழில்நுட்ப அடித்தளமாகும். ரயிலின் வடிவமைப்பை இந்திய ரயில்வேயின் “Research Designs and Standards Organisation” (RDSO) மேற்கொண்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் செல் மற்றும் இயக்க அமைப்புகளை பாரத நிறுவனமான “மேதா சர்வோ ட்ரைவ்ஸ்” உருவாக்கியுள்ளது. ரயிலின் பெட்டிகள் ஒருங்கிணைந்த சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையான
ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பாரதம் வெறும் தொழில்நுட்பத்தை வாங்கிப் பயன்படுத்தும் நாடாக இல்லாமல், அதனை வடிவமைத்து, உருவாக்கி, செயல்படுத்தும் திறன் பெற்ற நாடாக மாறி வருவதை, இந்தத் திட்டம் எடுத்துக்காட்டுகிறது.
இந்தத் திட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், ஜிந்த் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள “பசுமை ஹைட்ரஜன்” உற்பத்தி மையமாகும். தினசரி ஆயிரக்கணக்கான கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த வசதி, ரயில் இயக்கத்திற்குத் தேவையான எரிபொருளை உள்நாட்டிலேயே வழங்கும் அடித்தளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம், ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான பசுமை தொழில்துறை சூழல் உருவாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் ரயில்வேயைத் தாண்டி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் தொழில்துறை ஆற்றல் பயன்பாடுகளுக்கும் விரிவடையும் வாய்ப்பு இருப்பதால், இது பாரதத்தின் ஆற்றல் பாதுகாப்பு நோக்கிலும் முக்கியமான முதலீடாகக் கருதப்படுகிறது.
பாரதத்தின் இந்த அணுகுமுறையில், சமூகப் பரிமாணமும் குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளில், புதிய தொழில்நுட்பங்கள் முதலில் பெருநகரங்களிலும், உயர்வருமான மக்களிடமும் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் பாரதம், இந்த ஜீரோ -எமிஷன் தொழில்நுட்பத்தை ஹரியானாவின் விவசாயப் பகுதிகளை இணைக்கும் ஜிந்த்–சோனிபட் வழித்தடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாயிகள், மாணவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் தினசரி பயணிகள் போன்ற பொதுமக்களே இதன் முதல் பயனாளிகள். அதிநவீன தொழில்நுட்பத்தின் பலன் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும் சமமாகச் சென்றடைய வேண்டும் என்ற அணுகுமுறையை இந்த முடிவு வெளிப்படுத்துகிறது. “வளர்ச்சி” என்பது பெருநகரங்களை மட்டும் சென்றடையும் போது முழுமையடைவதில்லை; கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் போது மட்டுமே, அது உண்மையான தேசிய முன்னேற்றமாக மாறுகிறது என்பதையும், இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
பாதுகாப்பு அம்சங்களிலும், இந்த ரயில் கவனத்தை ஈர்க்கிறது. பாரதத்தின் அதிக வெப்பநிலையிலும், நம்பகத்தன்மையுடன் இயங்கக்கூடிய அமைப்புகள், ஹைட்ரஜன் கசிவைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள், தானியங்கி பாதுகாப்பு நிறுத்தும் அமைப்புகள் மற்றும் பல அடுக்கு பாதுகாப்பு முறைகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துடன், பயணிகளின் பாதுகாப்பையும் சம அளவில் முன்னிலைப்படுத்தியிருப்பது, இந்தத் திட்டத்தின் சிறப்பாகும்.
புகையின்றி, குறைந்த சத்தத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இயங்கும் இந்த ஹைட்ரஜன் ரயில், பாரதத்தின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தற்சார்பு உற்பத்தி மற்றும் மக்கள் நலன் ஆகிய நான்கு தூண்களையும் ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி, பாரதத்தின் பசுமை வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
உலகம் சுத்தமான ஆற்றல் பொருளாதாரத்தை நோக்கி நகரும் இந்தக் காலகட்டத்தில், பாரதத்தின் இந்த முன்னேற்றம் எதிர்கால தலைமுறைகளுக்கான நிலையான வளர்ச்சியின் புதிய பாதையை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், பசுமை தொழில்நுட்பத்தில் பாரதத்தை உலக அரங்கில் ஒரு முன்னணி சக்தியாக நிலைநிறுத்தும் வலிமையையும் உருவாக்குகிறது. இதுபோன்ற தன்னம்பிக்கைமிக்க முயற்சிகளே, பாரதத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை உலக நாடுகள் கவனிக்கச் செய்யும், ஒரு முக்கியக் காரணிகளாக அமையும்.
இந்த ஹைட்ரஜன் ரயில் திட்டம், ரயில்வே துறையின் சாதனையாக மட்டுமே பார்க்கப்படக்கூடாது. இது பாரதத்தின் ஆற்றல் சுதந்திரம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கை மற்றும் உயர்தர உற்பத்தித் திறனை உலகிற்கு நிரூபிக்கும் தேசிய முன்னெடுப்பாகும். “மேக் இன் இந்தியா”, “ஆத்மநிர்பார் பாரத்” மற்றும் “நேஷனல் கிரீன் ஹைட்ரஜன் மிஷன்” ஆகிய தொலைநோக்குத் திட்டங்கள் ஒரே தளத்தில் இணைந்து செயல்படும்போது, பாரதம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடாக மட்டுமல்லாமல், உலகிற்கே புதிய தரநிலைகளை உருவாக்கும் முன்னணி புதுமை மையமாக உருவெடுத்து வருவதை இந்த முயற்சி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
கட்டுரையாளர்: புவிசார் அரசியல் ஆய்வாளர்