எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்

எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் கர்நாடக இசைத் துறையைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர் ஆவார். லால்குடி ஜெயராமன் மற்றும் டி.என்.கிருஷ்ணன் ஆகியோருடன் கர்நாடக இசையின் வயலின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவருக்கு 1997-ல், மெட்ராஸ் மியூசிக் அகாடமியின் `சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டது. இவர் பத்ம பூஷன், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகளைப் பெற்றவர் ஆவார்.
கோபாலகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, மயிலாப்பூரில் 1931ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பிறந்தார். அவரது தந்தை பரூர் சுந்தரம் ஐயரிடம் வயலின் கற்றதோடு, கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைமுறைகளையும் கற்று, அதில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தார். மேலும் தனது 8வது வயதில், அவருடன் இணைந்து தனது முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார். புகழ்பெற்ற வயலின் கலைஞர் ஸ்ரீ துவாரம் வெங்கடசுவாமி நாயுடுவிடமிருந்தும், அவர் பெரும் உத்வேகம் பெற்றார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தனி வயலின் கலைஞராகவும் பக்கவாத்தியக் கலைஞராகவும் வயலின் வாசித்த அவர், ஓம்கார்நாத் தாக்கூர் மற்றும் டி.வி. பாலுஸ்கர் ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்தார். அவரது மகள், டாக்டர் எம். நர்மதா, அவரது மூத்த சகோதரர் எம்.எஸ். அனந்தராமன் ஆகியோரும் புகழ்பெற்ற வயலின் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரூர் பாணி’ என்று அழைக்கப்பட்ட அந்த குடும்பத்தின் வயலின் வாசிக்கும் பாணி, அனந்தராமன் மற்றும் எம்.எஸ்.ஜி.யின் குழந்தைகளான மூன்றாம் தலைமுறையினரால் இன்றும் உயிர்ப்புடன் வைக்கப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ணன் வாசிப்பு நுட்பத்தை ஆராய்ந்து, தெளிவான ஒலியையும், வேகமான வெளிப்பாட்டையும் உருவாக்குவதற்காக “பரூர் பாணி”யின் குறிப்பிட்ட விரல் மற்றும் வில் நுட்பங்களை உருவாக்கினார். அவரது பாணியில் ஒற்றை விரல் வாசிப்பும், ஒற்றை நரம்பு ஆக்டேவ்களில் ஒரு கருப்பொருள் வளர்ச்சியும் அடங்கும்.
வயலின் கலைஞர் யெஹூதி மெனுஹின், கோபாலகிருஷ்ணனின் வாசிப்பைப் பற்றி, “எனது பயணங்கள் அனைத்திலும் இப்படி ஒரு வயலின் இசையை நான் கேட்டதில்லை! இந்த இளம் இந்தியர் நமது இசைக்கருவியை எவ்வளவு அற்புதமாக வாசிக்கிறார்” என்று வியந்து பாராட்டினார். மெட்ராஸ் மியூசிக் அகாடமியிடமிருந்து சங்கீத கலாநிதி விருதைப் பெற்றபோது, கோபாலகிருஷ்ணன் “எனது பயிற்சிதான் எனது வெற்றியின் ரகசியம், மற்றொரு ரகசியம் எனது தந்தை. நான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 15-−16 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்து வந்ததே, அது மிகவும் கடினமான ஒன்று. வாசிக்கும்போது திடீரென்று கர்நாடக இசையிலிருந்து ஹிந்துஸ்தானி இசைக்கு மாறுவேன். நான் பெறும் அனைத்து விருதும் எனது பயிற்சியின் பலன்தான்” என்று குறிப்பிட்டார்.
கோபாலகிருஷ்ணன், 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி, சென்னையில், தனது 81வது வயதில் காலமானார். அவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், எம். நர்மதா, லதா, என்ற இரு மகள்களும் மகன் சுரேஷ் ஆகியோர் உள்ளனர். இவரது இசைசேவையை கௌரவிக்கும் வகையில் பாரத அரசு 1975ம் வருடம் பத்மஸ்ரீ விருதையும், 2012ம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.