எப்போதும் இறையருகில் இருக்கவல்ல ஸ்மரணமே உபவாசம்

உபவாசம் என்று பற்பல வழிகளில் மக்கள் அடிக்கடி விரதம் இருப்பதைப் பார்க்கிறோம்.
“பொதுவாக உபவாசங்கள் என்றால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி இருக்கும் விரத முறை. இது நமது உடலுக்கு நன்மையும், மனதை கட்டுப்படுத்த சிறந்த வழி முறையும் ஆகும்,” எனப் பகர்வர் பெரியோர்.

நமது சநாதன இந்து புராணங்களில் பல உபவாச விரத வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
2. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
3. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

இப்படிப் பல வழிகள்.

ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகள் தபோவனத்தில் இருந்தபோது இரண்டு பாகவதர்கள் வந்தார்கள். இரவு முழுதும் பஜனை…திவ்யநாம சங்கீர்த்தனம் களைகட்டி நடந்து முடிந்தது. பின் சுவாமியும் பாகவதர்களும் ஓய்வெடுக்க சங்கல்பித்தார்கள்.

சுவாமி பாகவதர்களைப் பார்த்து “நன்கு ஓய்வெடுப்போம்.நாளை இருந்து பூஜைகளைப் பார்த்து ஆகாரம் செய்து பிறகு போவோம்” என்று சொன்னார். இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. புரிந்துகொண்ட சுவாமி, என்ன என்று கேட்டார். அவர்கள் “நாளை ஏகாதசி விரதம்.முழுநாள் சாப்பிட மாட்டோம்” என்றார்கள்.

சுவாமியும் குறும்புத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “சரி.நாளைய உபவாசம் நம்முடனேயே தபோவனத்தில் இருக்கட்டும்” என்று ஆணையிட்டார். மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டு இரவு ஓய்வெடுத்தனர். மறுநாள் காலை விடியும் முன் எழுந்து நீராடி சுவாமியின் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். ஞானப் பிழம்பாய் சுவாமி தன் அறையை விட்டு வெளியில் வந்தார். காலை தனுர் மாத பூஜை முடிந்தது. பாகவதர்கள் இருவரையும் சுவாமி அழைத்தார். “தனுர்மாத பூஜை முடிந்தது.பொங்கல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் நிற்போம்.சுவாமி இருவரையும் கூப்பிடும்” என்று சொல்லி வேறு எதுவும் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் அறைக்கு சென்றார். குருநாதரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் பாகவதர்கள் இருவரும் பிரசாதம் சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில், அழைப்பிற்காகக் காத்திருந்தனர். சுவாமி அழைத்தார்.ஓடினர் இருவரும்.”பாத பூஜையைத் தரிசித்து விட்டு மீண்டும் வருவோம்” என்றார். அப்படியே செய்தனர்.மதியம் ஆயிற்று. மீண்டும் சுவாமி அழைத்தார். “மதியம் உணவருந்தி வருவோம்” என்றார். மறுக்க முடியாமல் அவ்வண்ணமே செய்தனர். உத்தரவுக்காக காத்திருந்தனர். மாலை ஆனது.

சுவாமி அழைத்தார்.”சாயங்காலபூஜையைத் தரிசிப்போம்” என்று ஆணையிட்டார்.பைரவர் பூஜை முடிந்தவுடன், சுவாமி இருவரையும் அழைத்தார் “இரவு உணவருந்தி,சுவாமி அறைக்கு வருவோம்” என்று சொன்னதும் இருவரும் அவ்வண்ணமே செய்தனர். இரவு உணவு முடிந்து சுவாமியின் அறைக்கு வந்த இருவரையும் பார்த்து “இன்னைக்குத்தான் நாம உண்மையில ஏகாதசி விரதம் இருந்தோம்” என்று சொன்னார் சுவாமி.இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. “இன்னைக்கு முழுதும் சுவாமி எப்போ கூப்பிடுவாரோன்னு முழுசா இருவரின் மனசும் ஸ்வாமியிடமே இருந்தது.எங்கு சென்றாலும்,சாப்பிடும்போது கூட” சுவாமி எப்போ கூப்பிடுவார்ன்னு சதா ஸ்வாமி மேலேயே ஸ்மரணை இருந்தது.இது தான் உபவாசம் என்பது.உடம்பை பட்டினிப்போட்டு வருத்துவதில் ஒன்றும் பயன் இல்லை.உப என்றால் அருகில், வாசம் என்றால் வாசம் செய்வது என்று பொருள்.எப்பொழுதும் இறைவனை மனதில் ஸ்மரித்துக் கொண்டு சதா இறைவன் அருகிலேயே இருப்பது தான் உபவாசம் என்பது.அதை எந்த வேலை செய்யும்போதும் கடைப்பிடிக்கலாம். உடம்பைப் பட்டினி போட்டுத்தான் என்று இல்லை” என்று சுவாமி சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *