சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ல் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளை உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் தடையாக இருக்ககூடாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இந்த தினத்தின் பிரதான எதிர்பார்ப்பு.
மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், ஊக்கத்திட்டங்கள், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அவை குறித்த தெளிவை மாற்றுத்திறனாளிகள் அறிய வேண்டும். அதன் மூலம் பயனடைய வேண்டும். சக மனிதராய் அதற்கு நாம் உதவ வேண்டும். மனிதாபிமான நோக்குடன் மாற்றுத்திறனாளிகளை மதிப்போம். அவர்களின் திறமைகளை கண்டுணர்ந்து, அவற்றை வெளிக்கொணர்ந்து அவர்கள் பல சாதனைகள் புரிய உதவுவோம் என இத்தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்துக்கொள்வோம்.
மாற்றுத்திறனாளி நண்பர்களே, யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ ஊனம் ஏற்பட்டு விடுகிறது. அதற்காக சோர்ந்து அமர்ந்து விடாதீர்கள். முயற்சி உடையவர்களுக்கு ஊனமென்பது தடையாக அமைவதில்லை. முயற்சியுடைய பல மாற்றுத்திறனாளிகள் உலக அளவில் பல்வேறு வியத்தகு சாதனைகளை௦ புரிந்துள்ளனர். ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் அதை ஒரு படிக்கல்லாக பார்ப்போம். இழந்ததை மறந்துவிடுங்கள், தன்னிரக்கத்தை தூக்கி எறியுங்கள். ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. மாற்றுத்திறமைகளும் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து பட்டை தீட்டுங்கள். தடைகளையும் தோல்விகளையும் கண்டு பயந்துவிடாதீர்கள். சிறகுகளை விரியுங்கள். பரந்து கிடக்கிறது பூமி. விரிந்து கிடக்கிறது வானம். முயன்றால் வாழ்க்கை வசப்படும்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று