உத்தரகண்ட் மாநில அரசின் பொது சிவில் சட்ட வரைவு அறிக்கை தயாராகி விட்ட நிலையில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேசினார். இதையடுத்து, மத்திய அரசு அமல்படுத்தவுள்ள பொது சிவில் சட்டத்துக்கு, உத்தரகண்ட் சிவில் சட்ட வரைவு அறிக்கை, முன் மாதிரியாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நம் நாட்டில் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசு உரிமை போன்றவற்றுக்கு, மதத்தின் அடிப்படையில் தனித் தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இவற்றை நீக்கி, அனைத்து குடிமக்களுக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. ‘ஒரு நாட்டில் இரண்டு வகையான சட்டம் அவசியமா’ என, பிரதமர் மோடியும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், உத்தரகண்டில், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஓராண்டுக்கு முன்பே துவங்கின. இதற்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தன் வரைவு அறிக்கையை தயாரித்து முடித்த நிலையில், விரைவில் அதை மாநில அரசிடம் அளிக்க உள்ளது. இந்நிலையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், வரைவு அறிக்கை குழு தலைவர் ரஞ்சனா பிரகாஷ் தேசாயும் சமீபத்தில் புதுடில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று பிரதமர் மோடியையும், புஷ்கர் சிங் தாமி சந்தித்தார்.
இதன்பின் அவர் கூறியதாவது: உத்தரகண்டிற்கு வரும்படி பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். அவரிடம் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உத்தரகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’ என, மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. வரைவு அறிக்கை இன்னும் மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அதில் உள்ள விஷயங்கள் பற்றி தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.