ஈரான் – இஸ்ரேல் போரின் பின்னணி

அமெரிக்காவின் ஆதரவை பெற்று இஸ்ரேல், 2026 பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து துபாய், கத்தார், செளதி, குவைத், பஹ்ரைன் போன்ற இஸ்லாமிய நாடுகளின் மீது ஏவுகணைகள் மூலமாகவும், டிரோன்கள் மூலமாகவும் ஈரான் தாக்குதல் நடத்துவதின் பின்னணி என்ன? ஈரானுக்காக பாரதத்திலுள்ள இஸ்லாமியர்கள் பலர் எதற்காக ஆதரவை தெரிவிக்கிறார்கள்? பாரத அரசு இந்த ஈரான் – இஸ்ரேல் போரில் ஏன் மௌனமாக இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதிலை பெறுவதற்கு, வரலாற்றுக் குறிப்புகள், மதம் -அரசியல் கொள்கைகள், உலக அளவில் அடிப்படைவாத சித்தாந்தம் மற்றும் தூதரக முடிவுகள் (Diplomatic Decisions) போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
முஸ்லிம் ப்ரதர்ஹூட் இயக்கம் :
1928ல் எகிப்தைச் சேர்ந்த ஹாசன் அல்-பன்னாவால் (Hassan Al-Banna) எகிப்தில் நிறுவப்பட்ட “முஸ்லிம் ப்ரதர்ஹூட்” (Muslim Brotherhood) என்கிற ஒரு இஸ்லாமிய இயக்கம், “இஸ்லாம் தான் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு” என்று வலியுறுத்தி காலிபாவின் ஆட்சியை கொண்டு, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை உலகத்தின் சட்டமாக கொண்டு வரும் முயற்சியில், 1940ல் 2 மில்லியன் உறுப்பினர்களை கொண்டு, இன்று, பாரதம் உட்பட உலகத்தின் பல நாடுகளில் ஊடுருவி அங்குள்ள மக்களை இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றி, இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூக மற்றும் அரசியல் அமைப்பாக, அடிப்படைவாத செயல்பாட்டை கொண்டு இயங்கி வருகிறது.
முஸ்லிம் பிரதெர்ஹூடும், ஈரானும் :
முஸ்லிம் ப்ரதர்ஹூட்-ன் ஈரானிய ஷியாக்கள் ஆட்சியுடன் உள்ள தொடர்பு, முஸ்லிம் ப்ரதர்ஹூட் நிறுவனர் ஹஸ்ஸன் அல்-பன்னா, 1945 ஆம் ஆண்டில் கெய்ரோவில் (Cairo) ஈரானிய புரட்சியின் தலைவரான அயத்துல்லா ரௌஹல்லாஹ் கோமெயினி சந்திப்பின் மூலம் தொடங்கியது. ஒரே இஸ்லாமிய கலிபா ஷரியத் சித்தாந்தத்துடன், 1950களில் ஈரானில் பல இயக்கங்கள் துவங்கின. பிறகு, 1979 ஆம் ஆண்டு, ஈரானில் “இஸ்லாம் புரட்சி” (Islamic Revolution) நிகழ்ந்த போது, இந்த முஸ்லிம் ப்ரதர்ஹூட் – ஈரானிய உறவு பலமாகியது.
யாருக்கு இடையில் போர்?
லெபனானில் ஹெஸ்புல்லா, காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐ.ஜே) மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி (பி.எஃப்.எல்.பி) போன்ற அரசியல் இயக்கங்களுக்கும் போராளிகளுக்கும் ஆயுதங்கள், பயிற்சி, நிதியுதவி மற்றும் பாதுகாப்பான புகலிடங்களை வழங்குவதாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் (Islamic Republic of Iran) அரசாங்கம், பல நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகள், நேட்டோ (NATO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இந்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. ஆனால். ஈரான் இந்த மதத்தின் அடிப்படையான பயங்கரவாத செயல்பாடுகளை “தேசிய விடுதலை இயக்கங்கள்” என்று கருதுகிறது.
இந்த போர் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவ – யுதர்களுக்கும் இடையே போரா? என்று பார்த்தால், “இல்லை” என்று கூறலாம். ஏன்னெனில், இந்தப் போரில், இஸ்லாமிய நாடான சவுதி, இஸ்ரேலின் பக்கம் நின்று ஈரானுக்கு எதிராக செயல்படுகிறது.
உலகளாவிய, 1.6 பில்லியன் முஸ்லிம்களில் சுமார் 85% சுன்னி, மீதமுள்ள 15% ஷியா ஆவர். ஈரான் மற்றும் ஈராக் நாட்டில் மக்கள் தொகையில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்டுகள், சுன்னி பிரிவை பெரும்பான்மையினரைக் கொண்டுள்ளது. ஈரானிய ஷியா அமைப்புகள், கலீபா ஆட்சியை விரும்புகின்றன. ஆனால் சுன்னி அரேபிய எமிரேட்கள், மன்னராட்சி கொண்டவை. ஆகையால், சவுதியின் ஆதரவு இஸ்ரேலின் பக்கம் இருப்பதை, சுன்னி – ஷியாவினர்களுக்கு இடையே உள்ள போர் என்று சொல்லலாம் என்றாலும், இந்தப் போருக்கான முக்கியமான பின்னணி காரணம், தீவிரவாதத்தை வளர்க்கும் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என்றே கூறலாம்.
மேலும் பாரதம், இஸ்ரேல் மற்றும் உலகின் பல நாடுகளுக்கிடையே பயங்கரவாதத்தை எதிர்க்க, தீவிரவாதத்தை ஓழிக்க ஒத்துழைப்புக் கூட்டாண்மை உள்ளன.
பாரதத்தின் சூட்சமம்:
ஒரு பக்கம் ஈரான், காஷ்மீர் ஆர்டிகில் 370 நீக்கம் விவகாரத்தில் மற்றும் பாரதத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட வரலாற்று சான்றுகள் இருப்பினும், வர்த்தக ரீதியில் பாரதம், ஈரானிடம் இருந்து எரிவாயு எண்ணை இறக்குமதி செய்வது மறு பக்கம். ஈரானுக்கு ஆதரவாகவோ, எதிரராகவோ பாரதம் எந்த ஒரு அறிக்கையை விட்டாலும், அங்கே –
1. ஈரானுடன் வணிக உறவைக் முறியடிக்கும் வாய்ப்பு,
2. பல இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் 9 மில்லியன் பாரதியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் வாய்ப்பு,
3. இஸ்ரேலுடன் இருக்கும் தொழில்நுட்ப உறவு பாதிக்கும் வாய்ப்பு மற்றும்
4. சவுதி அரேபியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு, திட்டமிடப்பட்டக் கூட்டமைப்பு, கலாச்சாரம் மற்றும் மதம் தொடர்புகள், சமீபத்திய வளர்சிதறல்கள் ஆகியவை சரிவு அடையும் வாய்ப்பாகும்.
ஆகையால், இந்தப் போரில், பாரதத்தின் பங்கு எதுவும் இல்லை என்பதை தொடர்ந்து, நாட்டின் அமைதியையும், மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன், பக்குவமாக பாரதம் தனது நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தற்போதைய போரில், பாரதம் தனது பங்களிப்பில் மிகவும் தெளிவாக உள்ளது. பாரதம் எந்தவொரு நாட்டுக்கும், மதத்தின் அடிப்படையில் ஆதரவை தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்தப் போர் தீவிரவாதத்தை எதிர்த்து நடைபெறும் போர் என்றால், பாரதம் ஒரு பொறுப்புள்ள தேசமாக, விஷ்வ குருவாக, தீவிரவாதத்திற்கு எதிராக போரிடும் நாடுகளுக்கு, உலகளாவிய ஆலோசகராக, உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் நல்ல ஆலோசனையை கூறி முன்னிலையில் நிற்கும்.
கட்டுரையாளர்: எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்