ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் இளைஞர்கள் மூலமே தொடங்கியது. மறைந்த டாக்டர் ஹெட்கேவார், சில இளைஞர்களை ஒன்று சேர்த்துத் தொடங்கிய சங்கம், ஒவ்வொரு தலைமுறையின் இளைஞர்களின் கூட்டு உணர்வும், அர்ப்பணிப்பும் மூலமே எல்லாத் தடைகளையும் தாண்டி முன்னேறியது.
கேலிகளைத் தாங்கிக் கொண்டும், தடைகள், அவசரநிலை போன்ற கடுமையான சவால்கள் வந்தபோதும், நாட்டுக்கு எதிரான போர்முனைகளிலும், பேரிடர் காலங்களிலும், இளைஞர் ஸ்வயம்சேவகர்களே முன்வந்து நின்றனர். தலைமுறை தலைமுறையாக இளைஞர்களே கொடூரமான சித்திரவதைகளைத் தாங்கி, சங்கத்தின் நோக்கத்திற்காக உயிரையும், தியாகம் செய்தனர்.
ஒற்றை ஷாகாலிருந்து, 2025-−26 ஆண்டு அறிக்கையின்படி 88 ஆயிரத்து 949 ஷாகாக்களாக விரிவடைந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, ஜென்-ஸி ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன. சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில், ஜென்-ஸி இளைஞர்களின் பிரதிநிதித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவில் இருக்கிறது.
2025 விஜயதசமி விழாவில் 27 லட்சத்து 8 ஆயிரத்து 186 தருணர் (இளைஞர்) மற்றும் 5 லட்சத்து 36 ஆயிரத்து 955 பாலர் ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்றனர். இது மிகப்பெரிய இளைஞர் பங்கேற்பைக் காட்டுகிறது. மேலும், நூற்றாண்டு ஆண்டில் நடந்த அணிவகுப்பு ஊர்வலங்கள் (பதசஞ்சலன்) மற்றும் நிகழ்வுகளில் புதிய தலைமுறையின் அதிகப்படியான பங்கேற்பு தனித்துவம் பெற்றது. குறிப்பாக, 2 லட்சத்து 16 ஆயிரத்து 215 தருணர் மற்றும் 3 லட்சத்து 83 ஆயிரத்து 663 பால ஸ்வயம்சேவகர்கள் முழு கணவேஷ் (சீருடை) அணிந்து நாடு முழுவதும் நடந்த அணிவகுப்பு ஊர்வலங்களில் பங்கேற்றனர். இவர்கள் நகர்ப்புறம், கிராமப்புறம், வனவாசி மக்கள் என சமூகத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் வருகின்றனர். இந்த வயதுப்பிரிவில், லட்சக்கணக்கான ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் இருக்கின்றனர்.
2025ல், ராஜஸ்தானின் ராம்கஞ்ச் மண்டியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஆர்.எஸ்.எஸ் இளைஞர்கள் சமைத்த உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். நூறு ஆண்டுகள் அமைப்புப் பணியை நிறைவு செய்யும் அமைப்பில், 90 ஆண்டுகளுக்கு மேல் சங்கத்தில் உள்ள மூத்த ஸ்வயம்சேவகர்கள் பலர் உள்ளனர். ஆயினும், அதன் செயல்பாடுகளை நெருக்கமாகக் கவனிப்பவர்கள் அனைவரும் ஒருமித்துச் சொல்வார்கள் – “சங்கத்தின் வயது இன்னும் பதினாறே”. ஏனெனில், பாரதம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஷாகாக்கள் தருண் மற்றும் பால ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன.
ஆண்டு அறிக்கைகள் தொடர்ந்து காட்டுவது, தினசரி ஷாகா பங்கேற்பாளர்களில், 60 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள். கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும், தினசரி ஷாகா பங்கேற்பாளர்களில் 61 சதவீதம் மாணவர்கள், அதாவது 2000-க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள். மேலும், உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில், 75 லட்சத்திற்கும் மேற்பட்ட செயலில் உள்ள உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
2022ல், அகிலபாரத பிரதிநிதி சபாவுக்கு முன், அப்போதைய அகிலபாரத இணைச்செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா, ஊடகங்களுடன் பகிர்ந்த புள்ளி விவரங்களின்படி, கோவிட் காலத்தில் மட்டும் “ஜாயின் ஆர்.எஸ்.எஸ்” ஆன்லைன் தளம் வழியாக 1 லட்சத்து 25 ஆயிரம் இளைஞர்கள் சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்தனர். 2012லிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள், இந்தத் தளம் மூலம் சங்கச் செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளனர்; அவர்களில் பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களும் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூரிலிருந்து வந்தவர்கள் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ளனர்.
சங்கத்தின் நூற்றாண்டு விழாவில், முழுநேர தன்னார்வலர்களாக (விஸ்தாரக்), இரண்டு ஆண்டுகள் அர்ப்பணிக்குமாறு, அகிலபாரத தலைவர் அழைப்பு விடுத்தார். 2 ஆயிரத்து 453 ஸ்வயம்சேவகர்கள் முழுநேர விஸ்தாரக்குகளாக வந்தனர். இத்தகைய தியாக உணர்வு இந்தத் தலைமுறைக்கே உரியது.
2025ல், பெங்களூரில் நடந்த ஏ.பி.பி.எஸ் பத்திரிகையாளர் சந்திப்பில், அகில பாரத இணைச்செயலாளர் முகுந்தா தெரிவித்தபடி, முந்தைய ஆண்டின் மூன்று நாள் பயிற்சி முகாமில் பங்கேற்ற 2 லட்சத்து 22 ஆயிரத்து 962 பேரில், 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் 14-−25 வயதினரே.
புதிய தலைமுறைதான் தினசரி சங்கச் செயல்பாடுகளோடு, கல்வி மற்றும் சேவை முயற்சிகளையும் வழிநடத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இன்றைய ஜென்-ஸி, ஆர்.எஸ்.எஸ் என்ற மகத்தான இயக்கத்தின் உந்து சக்தியாக உள்ளது. தெளிவான பார்வை, செயல்திறன் மற்றும் தேசிய உணர்வு கொண்ட உயிரோட்டமுள்ள புதிய தலைமுறை, நம் சமூகத்தில் செழித்து வளர்வதற்கு, தினசரி ஷாகாக்கள் சான்றாக நிற்கின்றன.
ஜென்-ஸி இளைஞர்கள் சர்சங்கசாலக்குடன் ஒரே மேடையில் உரையாடியதைப் பொதுமக்கள் கண்டனர். கடந்த 100 ஆண்டுகளாக, இளைஞர் குழுக்களுடன் தொடர்ந்து இணைந்து, அவர்களின் இடங்களுக்கு நேரடியாகச் சென்று, அவர்களது மொழியில் பேசி வருகின்றனர். நூறாவது ஆண்டிலும், பதினாறு வயது இளைஞனின் ஆற்றலுடன் சங்கம் செயல்படுவதற்கான ரகசியம் இதுவே.
2025ம் ஆண்டில் நடத்தப்பட்ட சங்கத்தின் மூன்று நாள் மற்றும் ஏழு நாள் பயிற்சி முகாமில், 14-−25 வயதுக்குட்பட்ட 4 ஆயிரத்து 415 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.
– கட்டுரையாளர்: தேசிய அமைப்பாளர், தேசிய சிந்தனைப் பேரவை
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்