இளம் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

பொதுவாக சுதந்திரம் என்பது ஒருவரது நன்மைக்கு பயன்பட வேண்டுமே தவிர அவருடைய தீமைக்கு பயன்படக் கூடாது.  ஒருவரைப் பற்றிய விபரம் தெரியாமல் பழகி ஆபத்தில் சிக்கிக் கொள்வது சுதந்திரத்தின் அடையாளம் அல்ல.  தங்களுடைய வீடுகளில் அளிக்கப்படும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, பல பெண்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை செய்திகளாக தினசரிகளில் பார்க்கிறோம். எனவே, நமது பாதுகாப்பு தான் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து நடப்பது நமக்கு நல்லது.

இளம் வயது பெண்கள்  தங்களிடம்  அறிமுகம் ஆகும் நபர்களிடம்  தங்களுடைய பெற்றோருக்கு தெரியாமல் பழகுவதும், தனிப்பட்ட மொபைல் போன் நம்பரை கொடுப்பதையும் தவிர்த்தல் அவர்கள் பாதுகாப்பிற்கு நல்லது.  அத்துடன் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இணையதள தொடர்பில் உள்ளவர் யாருடனும் வெளியில் செல்வதை தவிர்ப்பதும் நல்லது.

நம்முடைய எண்ணங்களில், செயல்களில் ஒரு கட்டுப்பாடுடன் இருக்கும் பொழுது  மகிழ்ச்சியாகவும், பிரச்சனை இன்றியும் இருக்கலாம். ஒரு சில நேரங்களில் நம்முடையபேச்சு, ஈடுபாடு, ஆசை, அன்பு, பெருமை, பயம் மற்றும் எச்சரிக்கை உணர்வு இவை எல்லாம் கட்டுப்பாடு இல்லாமல் சற்று அதிகரிக்கும் பொழுது பிரச்சனைகள் தோன்றுகிறது.

பெண்கள் யாரிடமும் நேரில் பேசினாலும், தொலைபேசியில் பேசினாலும் எதிர்முனைனையில் பேசுபவர் அறிமுகம் இல்லாத ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய கவனம் வார்த்தைகளில் இருப்பது முக்கியம். பேசுபவர் நமக்கு புரியாத அல்லது தெரியாத மற்றும் நமக்கு பிரச்சனை வரக்கூடிய விஷயத்தை நம்மிடம் பேசுகிறார் என்றால் பேச்சை எக்காரணம் கொண்டும் தொடர்வது நல்லதல்ல. வீட்டில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரியப்படுத்தி விடுவதும் நல்லது.

பொது இடங்களில் நம் குடும்பத்தை பற்றி தேவையில்லாமல் பேசுவது மற்றும் பிறர் கேட்கும் கேள்விக்கு தேவைக்கு மேல் கூடுதலாக பதில் கூறுவது போன்றவற்றை தவிர்ப்பது, நம் மதிப்பை உயர்த்தும்.நம்மைக் குறை கூறியது யார் என்று பார்ப்பதை விட, அவர்கள் கூறிய குறை நம்மிடம் உள்ளதா? என்று பார்ப்பது நல்லது.அவர்களுக்கு  சொல்ல வேண்டிய பதிலை நாம் பிறகு முடிவு செய்யலாம்.

யார் என்ன சொன்னாலும்  உடனடியாக பதில் சொல்வதற்கு பதிலாக, நாம் முதலில் கவனிக்க கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்ற தேவையில்லை.  நம்முடைய சக்தியை முக்கியமான விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். சில இடங்களில், பதில் கூறாமல் அமைதியாக இருப்பது கூட ஒரு சிறப்பான பதில்தான்.

திருமணத்திற்கு பிறகு வெகு நேரம் இணையதள தோழர்களுடன் அல்லது தோழிகளுடன் குறுந்தகவல் அனுப்பி தகவல் பரிமாறிக் கொள்வதும் மற்றும் இணையதளத்தில் அதிக நேரம் செலவிடுவதும் திருமண முறிவு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக கூறப்படுவதால், அதனைத் தவிர்த்து, நம் வாழ்க்கை தான் நமக்கு முக்கியம் என்பதை திருமணமான இருவரும் உணர்ந்து நடக்கும்போது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

நமக்கு அறிவும், திறமையும், கல்வியும் இருப்பது புத்திசாலித்தனமாக வாழ்வதற்கு தான். யாராவது நம்மை பொய்யாக புகழ்ந்தால், பொய்யான அன்புக்கு அடிமையாக்க நினைத்தால் துணிச்சலுடன் பெற்றோரிடம் கூறி அதிலிருந்து விலகுவது தான் புத்திசாலித்தனம். அவ்வாறு இல்லாமல், தன்னுடைய குடும்பத்தை நம்பாமல் யாரோ ஒருவரை நம்பி ஏமாறுவது “பறப்பதற்கு சிறகு இருந்தும் பறவை வேடன் கையில் சிக்கிக் கொள்வது போல தான்”.கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளை  பெற்றோரிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால், உறவினர்கள் மற்றும் அலுவலக தோழிகள் என்று அனைவரிடமும் சொல்ல வேண்டியதில்லை.

ஏனெனில், நம் குடும்ப விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டியது இல்லை என்பதோடு சிலர் தவறான ஆலோசனைகளையும் தருவார்கள் என்பதால்  அவற்றை தவிர்ப்பது நல்லது. பொதுவாக குடும்பங்களில்  பிரச்சனை ஆரம்பிக்கும் பொழுதே முற்றுப்புள்ளி வைத்து விடுவது நல்லது. ஏனெனில் சாதாரணமாக ஆரம்பிக்கும் ஒரு பிரச்சனை,  சில நேரங்களில் நாள் கணக்கில் அல்லது மாத கணக்கில் கூட நீடித்துக் கொண்டே இருக்கும்.

அறிமுகமான சில நாட்களுக்குள் பிறரிடம் நம்முடைய குடும்ப கதைகளை  கூறுவது, அவசியம் இல்லாமல் தனிப்பட்ட மொபைல் போன் நம்பரை பிறருக்கு கொடுப்பது மற்றும் புதிதாக பழகியவர்களிடம் கடன் வாங்குவது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.

நம்முடைய குடும்பப் பிரச்சினைகளை, நம் குடும்பத்தினரை தவிர பிறரிடம் கூறுவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஆறுதல் என்ற பெயரில் சிலர் நமக்கு ஆலோசனை கூறுவது, சில நேரங்களில் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம். நம் உள்ளத்தில் இருக்கும்  கவலைகளும் கஷ்டங்களும் நம்முடைய தோற்றத்தில் தெரியும்படி நடந்து கொள்வது அவசியம் இல்லை. நல்லதும் இல்லை.

நாம் நல்ல உடை அணிந்து கம்பீரமாக இருக்கும்பொழுது நமக்கே ஒரு தன்னம்பிக்கை வரும். அத்துடன் நம்முடைய பிரச்சனை நமக்கு மட்டும் தெரிந்தால் போதும். மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நம்  மரியாதை நம் கையில்

நம்முடைய பேச்சு மதிக்கப்படும் இடத்தில் பேசுவதும், மௌனமாக இருக்க வேண்டிய இடங்களில் பேசாமல் இருப்பதும், யாரையும் மனதில்  சுமப்பதை தவிர்ப்பதும்  மற்றும் நம்மை ஏளனமாக பேசியவர்கள் நம்மை அணுகுவதற்கே கூச்சப்படும் அளவிற்கு நம்மை உயர்த்திக் கொள்வதும் நம்முடைய மதிப்பை உயர்த்தும். ஆசைபடுவதை எல்லாம் அடைய நினைக்காமல், சிலவற்றை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது நம் வாழ்க்கைக்கு நல்லது.

நம்முடைய எண்ணங்களை செயலாக மாற்றுவதற்கு முன் பலமுறை யோசிப்பது நல்லது. ஏனெனில், நாம் ஒரு செயலை செய்த பிறகு அதன் பலனை நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் நாம் தான் அனுபவிக்க  வேண்டும்.

யார் நேசித்தாலும், நம்மை யார் வெறுத்தாலும் நம்முடைய மனநிம்மதி கெடாமல் பார்த்துக் கொள்வது நமக்கு நல்லது.ஏனெனில் நம்மை நேசிப்பதும், வெறுப்பதும் அவர்கள் பிரச்சனை. நம்முடையது அல்ல.நம் உறவுகளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை நிர்ணயிப்பது பாதை மட்டுமல்ல, நாம் பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் தான்!

நமக்கு தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல்  நம்முடைய மனம் என்னும் தோட்டத்தில் நல்ல எண்ணங்கள் என்ற மலர்களை மலரச்  செய்து  பூந்தோட்டம் போல் வைத்திருப்பது நமக்கு நல்லது.

 

கட்டுரையாளர்:  நூலகர்,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், தமிழ்நாடு