சிவ கணேஷ் என்ற இந்த இளைஞர் – மனித வளக் கலை பயிற்சியாளர். அதுவும் இவர் தேர்ந்தெடுத்து பயிற்சி தரும் தலைப்பு மிகவும் சிறப்பு பெற்றது. ஆம், மனக் கட்டுப்பாட்டை அடைவது – வளர்த்துக்கொள்வது எப்படி என்பது தான் இவருடைய பயிற்சிப்பட்டறைகளுக்குள் பலராலும் பாராட்டப்படுவது. மினிமலிசம் நம் வாழ்க்கையில் வேண்டும் என்றால் மனக் கட்டுப்பாடு, – மன உறுதி வேண்டும் என்கிறார் சிவ கணேஷ். அவருடன் உரையாடுபவர் எம். ஆர். ஜம்புநாதன்.
நீங்கள் பயிற்சித் துறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? எத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளீர்கள்?
நான்கு நட்சத்திர விடுதி ஒன்றில் வெயிட்டராகச் சேர்ந்த நான் மூன்றே ஆண்டுகளில் அந்த துறையில் மேலாளராக உயர்வதற்கு காரணம் நான் பெற்ற ஆளுமை- தலைமைப் பண்புகள் தான். நான் பெற்ற அறிவினை வளரும் தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பி கடந்த 9 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றி வருகிறேன்.
சிறப்பாக “மனக் கட்டுப்பாடு” என்ற குணத்தைப் பற்றித் தனிக் கவனம் செலுத்த என்ன காரணம்?
இன்றைய இளைஞர்களின் போக்கினை நான் கூர்ந்து கவனித்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று தெரிகிறது, ஆனால் காரியத்தில் இறங்கவும் தொடர்ந்து இயங்கவும் தான் முடிய மாட்டேன் என்கிறது. அதற்கு மூல காரணம் மனக் கட்டுப்பாடின்மையே. காலையில் எழுந்து உடற் பயிற்சி செய்தால் நல்லது என்று தெரியும், கைபேசியில் அலாரம் வைக்கவும் செய்வார்கள். மறுநாள் காலை வரும், அலாரம் அடிக்கவும் செய்யும். ஆனால் பழக்கத்தின் வலுவினால் கைபேசியை அணைத்து விட்டு தூக்கத்தைத் தொடருவார்கள். மனக் கட்டுப்பாடு என்ற இந்த பண்பு யாருக்கும் எந்த துறையிலும் வெற்றி அடைய அவசியம் என்பதால் இந்த தலைப்பில் நான் தனிக் கவனம் செலுத்துகிறேன்.
தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் இந்த பண்பைக் கடைப் பிடிக்கிறீர்களா?
நன்றாக கேட்டீர்கள். இன்றைய தலைமுறையினர் மிகத் தெளிவானவர்கள் அய்யா. நாம் சொல்வதற்கு ஆதாரம் கேட்பார்கள். வெறுமனே யாரோ எழுதி விட்டுப் போனதை நாமும் கிளிப் பிள்ளை போல பேசி விட்டுப் போனால் அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதனால் தான் நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளில் அவர்களுக்கு முன் சவாலான சில விஷயங்களை செய்து காட்டுவேன். உதாரணமாக, 20 நிமிடத்தில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்வது.
தனிநபர் மனக் கட்டுபாடு குடும்பத்திற்கு பெற்றுத் தரும் லாபம் என்ன?
மனம் மட்டும் நம் வசப்பட்டால் நாம் தேர்ந்தெடுத்த குறிக்கோளை அடை யலாமே. ஒரு உதாரணம். ஒரு குடும்பத் தலைவர் மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொண்டு தவறான பழக்கத்திலிருந்து மீண்டால் குடும்பமே பலன் அடையும் அல்லவா? தவறான பழக்கம் என்றால் பெரிதாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. தேவைக்கு அதிகமாக தனக்கு என்று உடைகள் வாங்கி குவித்துக் கொண்டு குடும்பத்தை பராமரிக்காமல் விட்டுவிடுவது கூட ஒரு கெட்ட பழக்கம் தான்.
இளைஞர்களின் சுதந்திரத்தில் இந்த கட்டுப்பாடு குறுக்கிடுவதாய் ஆகிவிடாதோ?
நண்பரே, ஒரு அப்பா தான் கடைப் பிடிக்காமல் தன் மகனை இதைச் செய், அதைச் செய் என்று சொன்னால் கேட்க மாட்டார்கள். தன் வழியில் குறுக்கிடுவதாகத் தான் நினைப்பார்கள். அதுவே என் போன்றவர்கள் பயிற்சி பெறுபவர்களுக்கு வகுப்புகளில் கண் முன்னரே சாதனையாளர்களைக் கொண்டு வந்து அனுபவங்களை அவர்கள் வாயிலாக எடுத்துச் சொல்லும்போது இளைஞர்கள் சுயமாக முடிவெடுத்து நற்பண்புகளைக் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
எத்தனை வயதிலிருந்து மனக் கட்டுப்பாடு பயிற்சி சாத்தியம்? என்ன விதமான பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?
என்னுடைய வகுப்பில் 15 வயது பள்ளி மாணவனையும் பார்க்கலாம், 75 வயது தாத்தாக்களையும் (பாட்டிகளையும் தான்) பார்க்கலாம். அவரவர்க்கு என்ன தேவையோ அதனைப் பெறலாம். ஒரு எடுத்துக்காட்டு. என் வகுப்பிற்கு 50 வயது வியாபாரி ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் கோழி இறைச்சிக் கடை வைத்திருந்தார். உழைத்து முன்னேறியவர். நகரின் பல பகுதிகளிலும் மேலும் கிளைகள் திறக்க வேண்டும் என்று ஆசை வந்தது. நிதி உதவி செய்ய வங்கியும் உறவினர்களும் தயாராக இருந்தார்கள். ஏற்பாடுகளும் பாதி வழி வந்திருந்த நிலையில், திடீரென்று அவருக்கு தன் மீதும் வியாபாரத்தின் மீதும் நம்பிக்கை குறைந்தது. தோல்வி மனப்பான்மை என்ற சுழலில் சிக்கினார். என் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, தீர்மானித்தபடி சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து 2 – 3 மாதங்களில் முழுவதுமாக தன்னால் முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார். இன்று ஆறு கிளைகள் கொண்ட நிறுவனமாக வளர்த்திருக்கிறார். கடனை எல்லாம் அடைத்து விட்டு வேறு என்ன வியாபாரம் துவக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
நான் அளிக்கும் பயிற்சிகள் எல்லாம் எளியவை தான். ஏனென்றால் மனக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பயிற்சிகள் கடினமாய் இருந்தால் அவர்கள் ஓடி விடுவார்கள். என்னுடைய பயிற்சிகளில் ஒன்று பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி.