இந்த தேர்தலில் இது புதுமை

“எங்களை ஹிந்து விரோதிகள்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்று திமுக தேர்தல் கமிஷனிடம் புகார் செய்துள்ளது. திமுக ஹிந்து விரோதி இல்லை என்று ஸ்டாலின் கூட்டங்களில் பேச வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தனது மனைவி தினசரி கோயிலுக்குச் சென்று வருவதை தான் தடுக்கவில்லை என்று விளக்கம் சொல்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி வீரமணி கொச்சைப்படுத்தி பேசியதால் அவர் செல்கிற ஊர்களில் எல்லாம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அவரை ஸ்டாலின் கண்டிப்பதற்குப் பதிலாக, பேசியிருந்தால் தவறுதான் என்று பூசி மெழுகுகிறார்.

கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் “எங்கள் வீடு ஐயப்ப பக்தர்கள் வீடு. சபரிமலை விவகாரத்தில் ஹிந்து உணர்வுகளைப் புண்படுத்திய கம்யூனிஸ்டுகளும் திமுகவினரும் எங்கள் வீட்டிற்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்” என்று மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

திருச்சி மாநாட்டில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றிய திருமாவளவன் சிதம்பரம் கோயிலில் சட்டையை கழற்றி விட்டு, நெற்றி நிறைய விபூதி பூசி நடராஜரை தரிசனம் செய்துள்ளார்.

சோனியா காந்தி வேட்பு மனு தாக்குதலுக்கு முன்பு ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்துள்ளார். ராகுலும் பிரியங்காவும் கோயில் கோயிலாகச் சென்று வருகிறார்கள். தங்களை ஹிந்துக்கள் என்று அடையாளம் காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஹிந்து ஓட்டு வங்கி உருவாகி வருவது பழைய செய்தி. இந்தத் தேர்தலில் ஹிந்துக்கள் தங்கள் விரோதிகளை அடையாளம் காணத் துவங்கி விட்டதை ‘மதசார்பற்ற’ கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஹிந்து ஓட்டு விழாது என்ற பீதியே ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு இது இந்தத் தேர்தலில் இதுவரை காணாத புதுமை.